இது உங்கள் இடம்!
மகள் வாழ்வில் ஒளியேற்றுங்கள்!என் உறவினரின் மகள், கணவனை இழந்தவள். இரண்டு குழந்தைகளுக்கு தாய். வயது, 30க்குள் தான் இருக்கும். 'இனி, குழந்தைகளுக்காக வாழு...' என, பெற்றோரும், உறவுகளும் ஒதுங்கி விட்டனர். சமீபத்தில், அப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவளிடம் விசாரித்ததில், கண்ணீர் வடித்தபடி, 'புருஷன் செத்துட்டா, பொண்டாட்டி தினம் வாழ்ந்து சாவணுமா... எனக்கும், ஆசா பாசம் இருக்கும்ன்றது, ஏன் யாருக்கும் புரியல... 'ரெண்டு குழந்தை இருந்தா, ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க கூடாதா... என் குடும்பத்தினர், என்னை பார்க்கறப்ப, வருந்துறாங்களே தவிர, திரும்பவும் வாழ வைக்கணும்ன்னு நெனைக்க மாட்டேங்கிறாங்க...' என்றாள்.அவரின் தாயாரை சந்தித்து, விபரம் சொன்னேன்.'ஒரு பெண்ணாய் இருந்தும், அதிலும், பெற்றவளாய் இருந்தும், என் மகளின் மனதை நானே புரிந்து கொள்ளாமல் போனேனே...' என, கண் கலங்கியவர், கணவரிடம் விஷயத்தை பகிர்ந்துள்ளார். தற்போது, மனைவியை இழந்த சில வரன்களை பார்த்துக் கொண்டுள்ளனர்.பெற்றோரே... துரதிர்ஷ்டவசமாக, தங்கள் வீட்டில், கணவனை இழந்த மகள் இருந்தால், தயவுசெய்து, மனம் விட்டு பேசி, அவள் மனதை புரிந்து செயல்படுங்கள்... கணவனை இழந்த பின், அவளது கதை முடிந்து விட்டதாக கருதாதீர்... மீண்டும் அவள் வாழ்வை ஒளிரச் செய்யுங்களேன், ப்ளீஸ்!- பா. பாக்கியலட்சுமி, ராஜபாளையம்.புது வகை, 'ஸ்வீட்' செய்யப் போகிறீர்களா?'தீபாவளிக்கு, புதிதாக ஏதாவது இனிப்பு செய்து, விருந்தினரை அசத்தலாம்...' என்று, 'யூ - டியூப்' சேனலில் தேட, மில்க் பர்பி செய்முறை விளக்கம் கிடைத்தது.அதில் குறிப்பிட்டிருந்த பொருட்களை, அதே அளவில் எடுத்து, செய்து காட்டிய முறைப்படியே செய்ய ஆரம்பித்தேன்.நெய் தடவிய தட்டில், கலவையை கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும் என்று கூறியிருந்தது. அவ்வாறே, துண்டுகள் போட கத்தியை வைத்தது தான் தாமதம், துண்டுகள் விழாமல், கத்தியோடு திரண்டு வந்தது.'அடடா... ஏதோ பக்குவம் தவறியிருக்கிறது...' என்று, சிறிது எடுத்து வாயில் போட்டேன். அது, பால்கோவா, மில்க் கேக் மற்றும் பர்பி என்று, எதிலும் சேர்த்தி இல்லாமல், வித்தியாசமான சுவையில் இருந்தது.மில்க் அல்வா என்று பெயர் சூட்டி, தோழியருக்கு கொடுக்க, சாப்பிட்டவர்கள், ஜவ்வு மிட்டாய் வாயில் ஒட்டிய குழந்தைகள் போல், 'பேந்த பேந்த' விழித்தனர்.'சுவை, நன்றாக தான் இருக்கிறது; ஆனால், என்னவோ குறைகிறது...' என்று சமாதானப்படுத்தினர்.'நள மகாராஜா'வான, எங்கள் அலுவலக முதலாளிக்கு, ஒரு ஸ்பூன் ஸ்வீட் தர, சுவைத்து பார்த்தவர், 'இங்கிலாந்து மகாராணி, எலிசபெத்துக்கு, நம்மூர், 'ஸ்வீட்' செய்ய கற்றுக்கொடுத்தால், அவர் நாட்டு, 'ஸ்டைலில்' எப்படி செய்வாரோ, அதுபோல், 'அசட்டுபிசட்டு' என்று இருக்கிறது...' என்றாரே பார்க்கணும். சுற்றியிருந்தவர்கள், குலுங்கி, குலுங்கி சிரித்தனர்.உஷ்... தோழியருக்கு தெரியாமல், உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்... இப்படி தான், கராச்சி அல்வா செய்ய முயற்சித்து, அது, கெட்டியாக இறுகி, பர்பியை விட கடினமாக போய் விட்டது. துண்டுகள் போட வராமல், சுத்தியலால் அடித்து உடைத்தும், கடிக்க முடியவில்லை. வெளியில் துாக்கி எறிய, தெருவில் படுத்திருந்த நாய் மீது விழ, அது, கல் விழுந்தது போல், 'லொள்' என்று அலறி ஓடியதும், என்னை பார்த்து நக்கலாக சிரித்தார், கணவர்.தோழியரே... புதிய வகை பட்சணம் செய்யப் போகிறீர்களா... அதில், 'எக்ஸ்பர்ட்' ஆக உள்ள ஒருவரின் துணையோடு செய்து பாருங்கள் அல்லது பொருட்கள் வீணானாலும் பரவாயில்லை என்று, இரண்டு, மூன்று முறை சிறிய அளவில் செய்து பார்த்து, சரியான பக்குவம் தெரிந்த பின், செய்து அசத்துங்கள்; விஷ பரீட்சை வேண்டாம். எஸ். செந்தமிழ் வாணி, சென்னை.இப்படியும் ஒரு தீபாவளி சீட்டு!'மாதம், 200 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு பணம் செலுத்தினால், தீபாவளிக்கு, 3,000 ரூபாய் மதிப்புள்ள, 'பிராந்தி, ரம், விஸ்கி, பீர்' மற்றும் 'ஜின்' ஆகிய உற்சாக பானங்களும், 'சைடு டிஷ்' ஆக, சிப்ஸ், மிக்சர், ஊறுகாய், 'சிக்கன் 65' மற்றும் சோடா, 'கோக், பெப்சி' ஆகியவையும் வழங்கப்படும்...' என, சில இளைஞர்கள், விளம்பரம் செய்து, தீபாவளி சீட்டு ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்குள் பணம் கட்டி விடவேண்டும். தவறினால், 20 ரூபாய் அபராதம். இடையில் பணம் கட்டாமல் நிறுத்தி விட்டால், கட்டிய பணம் மட்டுமே கடைசியில் தரப்படும். முழுமையாக பணம் கட்டியவர்களுக்கு, தீபாவளிக்கு,மேற்குறிப்பிட்ட சரக்குகள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்; பணமாக தரப்பட மாட்டாது. இப்படி, ரிசர்வ் வங்கியின் சட்ட திட்ட விதிகளை போல, பல கண்டிப்பான விதிமுறைகள் உண்டு.முன்பெல்லாம், பண்டிகையை கொண்டாடி மகிழ, தீபாவளி பலகாரங்கள், புத்தாடை, பட்டாசு என, தீபாவளி சீட்டு பிடிப்பது வழக்கத்தில் இருந்தது. இப்போது, சரக்கு மற்றும் 'சைடு டிஷ்'ஷுக்காக சீட்டு பிடிக்கும் சிந்தனை மேலோங்கி வளர்ந்துள்ளதை அறியும்போது, வேதனையாக உள்ளது.- ஆர். பிரணவ், பாபநாசம்