உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பொறுமை தந்த வெற்றி!

என் தோழிக்கு, கல்லுாரியில் உடன் படித்த மாணவனோடு காதல் ஏற்பட்டது. படிப்பு முடிந்த பின், அவர்கள் காதல் பற்றி வீட்டில் சொல்ல, காதலை ஏற்கவில்லை, தோழியின் பெற்றோர். 'கேம்பஸ் இன்டர்வியூ'வில், தோழிக்கு வேலை கிடைத்தும், அனுப்பாமல், வீட்டோடு வைத்துக் கொண்டனர்.இதற்காக சோர்ந்து விடாமல், தன் படிப்பறிவால், வீட்டில் இருந்தபடியே, 'ஆன்லைன் பிசினஸ்' ஒன்றை துவங்கினாள்; அவள் காதலனும் அதற்கு உறுதுணையாய் இருந்தான். மாதம், ஒரு லட்சம் சம்பாதிக்கும் அளவுக்கு, அவள் வருமானம் உயர்ந்தது.முட்டுக்கட்டை போட்டாலும், தடம் மாறி போகாமல், வாழ்க்கையில் ஜெயித்ததை எண்ணி பெருமைப்பட்ட அவள் பெற்றோர், அவர்களின் காதலுக்கு, பச்சை கொடி காட்டினர். சமீபத்தில், இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பெற்றோரின் மனதை நோகடிக்காமல், தங்களது பொறுமையாலும், விடா முயற்சியாலும் ஜெயித்து காட்டிய ஜோடி, இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். அவர்களின் இல்லறம் சிறக்க, அனைவரும் வாழ்த்தி வந்தோம். இந்துமதி, மதுரை.

இப்படியும் ஒரு மனிதர்!

எங்கள் பகுதியில், ஓய்வுபெற்ற ஒரு ராணுவ வீரர் உள்ளார். அவருக்கு, மாதா மாதம் ஓய்வூதியமும், சொந்தமான வயல்களிலிருந்து நிறைவான வருமானமும் கிடைக்கிறது. அவரின் மகன்கள் இருவரும், ராணுவத்தில் பணியாற்றி வருவதால், வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.எங்கள் பகுதியில், வசதி குறைந்த குடும்ப பெண்களை சந்தித்து, வீட்டு வேலைகள் முடிந்த நேரம் போக, வருமானம் ஈட்டும் சிறு சிறு வேலைகளில் ஈடுபடுமாறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும், அவர்கள் துவங்கும் வியாபாரத்திற்கான கடனையும், வட்டியில்லாமல் வழங்கி, உதவி வருகிறார்.அவரின் முயற்சியால், வீட்டில் முடங்கிக் கிடந்த பல பெண்கள், இட்லி கடை, பூ வியாபாரம், மீன் வியாபாரம், அழகு நிலையம், தையல் என, பல வேலைகளில் ஈடுபட்டு, சுயமாய் சம்பாதித்து, குடும்பத்திற்கு உதவிகரமாய் இருந்து வருகின்றனர்.இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, 'எந்த வீட்டில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரோ, அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்; எந்த நாட்டில் பெண்கள், பொருளாதார தன்னிறைவு பெறுகின்றனரோ, அந்த நாடே அமைதியான நாடாக இருக்கும்...' என்றார்.இப்படி பட்டவர்களால் தான், பெண்கள், தன்னம்பிக்கையுடன் வாழ முடிகிறது.- கே. கல்யாணி, விக்கிரவாண்டி.

மாற்றி யோசித்தால், வருமானம் பெருகும்!

அலுவலகத்திற்கு கணவர் சென்றபின், வீட்டிலிருந்த இரண்டு மின் விசிறிகளும் பழுதாகின. கணவருக்கு போன் செய்து, விஷயத்தை சொன்னேன். எலக்ட்ரீஷியனுக்கு போன் செய்து, உடனே வர சொல்வதாக கூறினார். சிறிது நேரத்தில், அழைப்பு மணி ஒலிக்க, சுடிதார் போட்ட பெண்ணுடன் ஒருவர் நின்றிருந்தார். திகைத்தவாறே அவர்களை பார்க்க, இருவரும் சிரித்தபடியே, 'வீட்ல, மின்விசிறி, 'ரிப்பேர்'ன்னு சார் சொன்னாங்க...' என்றார்.அந்த நபரிடம், 'இவங்க...' என்றேன்.'என் மனைவிதாம்மா... எலக்ட்ரீஷியன் வேலையில் உதவுறது, இவ தான். கணவர் வெளியில் போன பின், வீட்டில் இருக்கும் பெண்கள், எலக்ட்ரிகல் போன்ற, 'சர்வீஸ்'களுக்கு, வெளியாட்கள் வந்தால், பதட்டத்துடன் இருப்பர்.'இதனாலேயே, வீட்டில் பலர் தனியாக இருக்கும் சமயங்களில், வெளியாட்களை அழைப்பதில்லை. இதை உணர்ந்து தான், மனைவியை, உதவியாளராக்கி கொண்டேன்; இப்போது, என் வேலையும், வருமானமும் பல மடங்கு கூடி விட்டது...' என்றார்.அவர்களை உள்ளே அழைத்து, தேநீர் கொடுத்தேன். வீட்டில், 'ரிப்பேர்' வேலை முடிந்த பின், குடியிருப்பின் அருகிலுள்ள தோழியரிடம், எலக்ட்ரீஷியன் ஜோடியை அறிமுகப்படுத்தினேன்.சூழ்நிலையையும், தேவையையும் உணர்ந்து செயல்பட்டால், எந்த தொழிலிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு, இவர்களே உதாரணம்.- பி.ஆர். லட்சுமி, ராஜபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !