உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

வாழ்க கல்விச் சேவை!என் உறவுக்கார பெண்மணி ஒருவர், சென்னையில், ஒரு அரசு கலைக் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றார். அவருக்கு ஒரே மகன்; திருமணமாகி விட்டது.கணவரின் மறைவுக்குப் பின், அமைதியான வாழ்க்கை வாழ விரும்பி, சொந்த ஊரில் உள்ள தங்களது வீட்டிற்கே வந்து குடியேறினார்.நகரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிய அவரால், இங்கு சோம்பி இருக்க முடியவில்லை. ஊரிலுள்ள அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, தன்னை பற்றிய விபரங்களை கூறி, 'இந்த பள்ளியின் மாணவர்களுக்கு, ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அரசு ஓய்வூதியம் கிடைப்பதால், எவ்வித பிரதிபலனும் வேண்டாம். என் ஆத்ம திருப்திக்காகவே இப்பணியை செய்ய விரும்புகிறேன்...' என்றார். கல்வித்துறையிடம் ஒப்புதல் பெற்று, ஆங்கில வகுப்பு எடுக்க அனுமதித்தார், தலைமை ஆசிரியர். மாணவர்களுக்கு, எளிதில் புரியுமாறு சுவைபட ஆங்கில வகுப்பு நடத்த ஆரம்பித்தார். பள்ளி இறுதியாண்டு விழாவில், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்து, அவரை வாயார வாழ்த்தினர்; அவரின் மறுப்பையும் மீறி, தங்கள் அன்பின் அடையாளமாக, பண முடிப்பு ஒன்றையும் பரிசளித்தனர். அப்பெண்மணியும், தன் பிறவிப் பயனை அடைந்ததாக கருதி, இன்னும் ஆர்வத்துடன் பணிபுரிகிறார்.எம். தளவாய், விருதுநகர்.விழிப்புணர்வு தேவை!என் நெருங்கிய தோழிக்கு, உடல்நல குறைவு காரணமாக, பிரபல, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். ரிசப்ஷனில், பழைய, 'ரெக்கார்டை' கேட்க, 'எடுத்து வரவில்லை; வீட்டிலும் இல்லை...' என்றிருக்கிறாள்.இரண்டு ஆண்டுக்கு முன், இதேபோல் உடல்நல குறைவிற்காக பல பரிசோதனைகளை எடுத்து, அவர்கள் கொடுத்த மருந்துகளை தவறாமல் சாப்பிட்டு, குணமடைந்த பின், அந்த, 'ரெக்கார்டு'களை துாக்கி எறிந்து விட்டிருக்கிறாள்.'பழைய, 'ரெக்கார்டு' இல்லாமல், பார்க்க மாட்டோம். போய் விடுங்கள்...' என்று, மருத்துவமனையில் கண்டிப்புடன் கூறிவிட்டனர். கெஞ்சி, மன்றாடி கேட்டும் பலனில்லை.வீடு திரும்பும்போதே, தோழிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் வீட்டிற்கு திரும்பியிருக்கிறாள்.அப்போது, தற்செயலாக நான் போன் செய்ய, நடந்ததை அழுதவாறே கூறினாள், தோழி. அவளை தேற்றிய நான், 'உனக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் இரண்டு குறுஞ்செய்தி அனுப்புகிறேன். ஒன்றில், 24 மணி நேர இலவச மருத்துவ சேவை பற்றிய விவரங்களும், அடுத்து, அந்த இணையதளத்தில் நமக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மருத்துவரிடம் வீடியோ மூலம் பெறுவதற்கான முறைகளும் இருக்கும். உடனே, டாக்டரிடம் பேசு...' என்றேன்.நாளை, டாக்டரை தொடர்பு கொள்வதாக கூறினாள், மறுநாள் காலை, 6:00 மணிக்கு, மாரடைப்பில், துாக்கத்திலேயே உயிர் பிரிந்த செய்தி வந்தது.பேரிடர் காலங்களில் அரசு, நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நவீன வசதிகளை தெரிந்து, விழிப்புணர்வுடன் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளும், நோயாளிகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்.இனி, மற்றொரு உயிர் இவ்வாறு பலியாக கூடாது.வி.ஜி.ஜெயஸ்ரீ, சென்னை.வாசிப்பு பழக்கத்தை வளர்த்தெடுப்போம்!கல்லுாரியில் பயின்று வரும் நான், விடுமுறை தினத்தில், நுாலகத்திற்கு சென்று வருவேன். 50 வயதுடைய பெண்மணி ஒருவர், பணியிலிருந்த நுாலகரிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன்.'நான் சிறு வயதில் கல்வி பயின்ற பள்ளியில் பயிலும் அனைவரையும் நுாலக உறுப்பினராக சேர்க்க வேண்டும்.'அதற்கான உறுப்பினர் கட்டணம் அனைத்தையும், என் சொந்த செலவில் ஏற்றுக்கொள்ள உள்ளேன். இந்நிகழ்வின் மூலம், பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்த்தெடுக்க முடியும்...' என்றார். அந்த பெண்மணி கூறியது போலவே, அவரது செலவில் அப்பள்ளியில் பயிலும், மாணவ - மாணவியர் அனைவரும் நுாலக உறுப்பினராக்கப்பட்டு, நுாலகத்திற்கு, மாணவர்கள் வந்து செல்வதை காண முடிந்தது.இதேபோல், பழைய மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிக்கு அருகில் உள்ள நுாலகத்தில், தற்போது பயின்று வரும், மாணவ - மாணவியரை உறுப்பினராக்கி, வாசிப்பை வளர்த்தெடுக்க வழிகோல வேண்டும்.பூ. நித்யா, காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !