உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

கடவுள் எனும் முதலாளி!'வெல்டிங்' பட்டறையில் வேலை பார்த்த, எனக்கு தெரிந்த ஒரு இளைஞனை, சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.'என்னப்பா, எப்படி இருக்க... உன் வேலையெல்லாம் எப்படி போயிட்டுருக்கு...' என்று விசாரித்தேன்.'சார்... நான், இப்ப, 'வெல்டிங்' பட்டறையில் வேலை பார்க்கலை... சொந்தமா, அரிசி வியாபாரம் பண்றேன். 'வெல்டிங்' பட்டறையில் ஏழு ஆண்டுகள் வேலை பார்த்தேன். 'அப்போது, 'நீ, இவ்ளோ நாள் இங்கே வேலை பார்த்தது போதும். இனிமே, உன் எதிர்காலத்தை பார்க்கணும். வாழ்க்கையில் பெரிய ஆளா வரணும். நீ ஏதாவது சொந்தமா தொழில் துவங்க விருப்பம் இருந்தா, சொல்லு... உனக்கு என்ன தொழில் தெரியுமோ, அதுக்கு நான் உதவி பண்றேன்...' என்றார், அந்த முதலாளி.'எங்க அப்பா வைத்திருந்த அரிசி கடையில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், 'அரிசி கடை வைக்க விருப்பம் ஐயா...' என்றேன்.'அவரும், எனக்கு, மூன்று லட்சம் ரூபாய் முதலீடாக கொடுத்து, உடனே அரிசி கடையை ஆரம்பிக்க சொன்னார். இப்போ, அரிசி கடை ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. வியாபாரம் நல்லா போயிட்டு இருக்கு...'அரிசி மட்டும் இல்லாம, கொஞ்சம் கொஞ்சமா மளிகை சாமான்களை மொத்தமா வாங்கி, விற்க ஆரம்பிச்சிருக்கேன். தினமும், 10 ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் போகுது. 'எல்லாருக்கும் இப்படிப்பட்ட முதலாளி அமைவது கஷ்டம். ஆனா, எனக்கு அமைந்த முதலாளியை, நான் மனிதராக பார்க்கல... ஒரு கடவுளா தான் பார்க்கிறேன்...' என்று சொல்லி, பூரித்து போனான், அந்த இளைஞன்.மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட முதலாளியை மனதார பாராட்டினேன். - வே. விநாயகமூர்த்தி, சென்னை.அருமையான பரிசு!இரண்டு ஆண்களுக்கு முன், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனின் பள்ளி ஆண்டு விழாவுக்கு சென்றிருந்தேன். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், சிறு பெட்டகம் பரிசாக தரப்பட்டது. வீட்டிற்கு வந்து, ஆவலாக பிரித்து பார்த்ததில், சிறு தொட்டியில் மண்ணும், சில விதை பாக்கெட்டுகளும் இருந்தன. அத்தொட்டியில் விதை விதைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி வந்தான், மகன். அதில், பருப்பு கீரை வளர்ந்தது. வீட்டிற்கு வருவோரிடமெல்லாம், 'நான் ஜெயித்து வாங்கிய பரிசு தொட்டி...' என, பெருமையுடன் காண்பித்தான்.கீரையே சாப்பிடாத என் மகன், சில நாட்களில் அதில் விளைந்த கீரையை சமைத்துக் கொடுக்க, ஆவலுடன் சாப்பிட்டான். அது மட்டுமல்லாமல், கீரை விளைய இவ்வளவு நாட்கள் ஆகுமா என்றும், அதற்கு இவ்வளவு நாட்கள் தண்ணீர் ஊற்ற வேண்டுமா என்றும் கேட்டறிந்தான்.ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்தால், அனைத்தும் வாங்கலாம் என்று எண்ணும் இக்கால சந்ததியினருக்கு, உழைப்பின் பெருமையை உணர்த்தும் இதுபோன்ற பரிசுகளை வழங்க, அனைத்து பள்ளிகளும் முன்வரவேண்டும்.- கோ. பிரியா, கடலுார்.உழைக்கலாம் வாங்க!பிரபல உணவகத்தின் வெளியே, அப்பளம் பாக்கெட்டுகளை வைத்து, விற்பனை செய்து வந்தார், 65 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர். ஒரு அப்பள பாக்கெட், 20 ரூபாய் என்றதும், பலரும் வாங்கிச் சென்றனர்.ஒருநாள் அப்பளம் விற்றால், மறுநாள், ஜவ்வரிசி வற்றல், அடுத்த நாள், சுண்டைக்காய் வற்றல் என்று, அந்த பெரியவர், மாற்றி மாற்றி விற்பனை செய்து வருவதை கவனித்தேன். 'வயதான காலத்தில், எதற்காக இந்த வியாபாரம்...' என்றேன்.'இரண்டு மகன்கள் இருந்தும், என்னை கவனிக்காததால், இந்த சிறு வியாபார எண்ணம் தோன்றியது. தினசரி, 100 பாக்கெட் விற்பனை செய்கிறேன். பாக்கெட்டுக்கு ஐந்து ரூபாய் என, தினமும், 500 ரூபாய் சம்பாதிக்கிறேன்...' என்று கூறினார்.வேலை இல்லை என்று, காலத்தை வெறுமனே போக்கும் இளைஞர்கள், இந்த பெரியவரை முன்மாதிரியாக கொள்ளலாம். மக்களின் அன்றாட தேவையான பொருட்களை, தரமாக, சொற்ப லாபத்துடன், வீடு வீடாக சென்று விற்பனை செய்தால், தொழிலுக்கு தொழில், வருவாய்க்கு வருவாய். சொற்ப முதலீட்டில் வருமானம் கிடைக்கும். வேலை வாய்ப்பை உருவாக்கிட, உழைக்கலாம் வாருங்கள் இளைஞர்களே!- டி. ஜெய்சிங், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !