இது உங்கள் இடம்!
'வாட்ஸ் - ஆப் குரூப்' இதற்கும் பயன்படுமே!எங்கள் குடியிருப்பில் வசிக்கும் சிலர் அமைத்துள்ள, 'வாட்ஸ் - ஆப்' குழுவில் நானும், ஒரு உறுப்பினர்.சமீபத்தில், நண்பர் அனுப்பியிருந்த குறுந்தகவலில், 'நம் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர், கடந்த ஆண்டுகளில், பல்வேறு சமூக பிரச்னைகளுக்காக போராடியவர். தற்போது, வயது மூப்பு காரணமாக, மனைவியோடு தனிமையில் வாழ்கிறார். அவரது ஒரே மகள், தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசிக்கிறார்.'முதியவருக்கு, 80வது பிறந்தநாள். விருப்பம் உள்ளோர், நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்தலாம்...' என்று பதிவிட்டு, கைபேசி எண்ணையும் பகிர்ந்திருந்தார்.நண்பரின் வேண்டுகோளை ஏற்று, முதியவரின் இல்லத்திற்கு இனிப்பு மற்றும் பழங்களோடு சென்றேன். என்னைப் போலவே பலரும், தங்கள் குடும்பத்தினரோடு வந்து, புது ஆடைகள், இனிப்பு, பழங்கள் கொடுத்து, அவரை திக்குமுக்காட வைத்தனர்.தன், 80வது பிறந்தநாளை கொண்டாட, மகள் இல்லையே என்று வருந்தியவருக்கு, குடியிருப்பில் வசிக்கும் பலரும், மகன்களாகவும், மகள்களாகவும் இருந்து, அவரது பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், அதுவரை அதிகம் பழகியிராத பலரும் அறிமுகமாகியதில், நெருங்கிய நண்பர்களானோம்.'வாட்ஸ் - ஆப்' குழு என்றாலே, ஏதோ பொழுது போகாதவர்கள் அரட்டையடிக்கும் தளம் என்றில்லாமல், இதுபோன்ற தகவல்களை பகிரவும் பயன்படும் என்பதை உணர்ந்தேன். — எஸ். ஹரிகரன், சென்னை.தேனீர் கடைக்காரரின் தெளிவு!நண்பர் ஒருவர் தேனீர் கடை வைத்துள்ளார். சமீபத்தில், அவரை காண சென்றிருந்தேன். நலம் விசாரித்து, அவர் தந்த தேனீரை அருந்தியபடியே கடையை நோட்டமிட்டேன்.கடையின் சுவரில், ஆங்காங்கே நகலெடுத்து ஒட்டப்பட்டிருந்த கையெழுத்து பிரதிகளைப் பார்த்து, அதுபற்றி கேட்டேன்.'இது, தேர்தல் காலம். மக்களாட்சியின் மகத்துவத்தை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவும், வாக்காளர் ஒவ்வொருவரும், ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை உணரவும், பணம் வாங்கி, ஓட்டளிப்பதன் பின் விளைவை அறிந்திடவும், என் கைப்பட எழுதிய கருத்துக்களை, நகலெடுத்து ஒட்டி வைத்துள்ளேன்...' என்றார்.அதிகம் படிக்காத தேனீர் கடைக்காரரே, இவ்வளவு தெளிவாக சிந்திக்கும்போது, மெத்தப் படித்தோர், தங்கள் ஓட்டுகளை பணத்திற்கு விலை பேசுவது சரியா?வரும் தேர்தலில், கண்மூடித்தனமாகவோ, காசு வாங்கிக் கொண்டோ ஓட்டளிக்க எண்ணாமல், நாட்டின் நலன், எதிர்கால வளர்ச்சி குறித்து சிந்தித்து, ஓட்டளியுங்கள். அவசியம் அனைவரும், ஓட்டளிக்கும் கடமையை நிறைவேற்றுங்கள்.— ஆர். செந்தில்குமார், மதுரை.வியக்க வைத்த பெண்!நண்பனின் மகனுக்கு பெண் பார்க்க, நானும், மனைவியும் உடன் சென்றோம். பெண்ணை அனைவருக்கும் பிடித்து விட்டது.எங்களை வணங்கி, 'என்னை, எல்லாரும் மன்னித்து, இரண்டு நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள்... கணவராக வரப்போகிறவரை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கும் உண்டு.'என் பெற்றோரை ஒருபோதும் உதாசீனம் செய்ய மாட்டேன். அவர்கள் தேர்வு செய்யும் மாப்பிள்ளையை தான் மணந்து கொள்வேன். மாப்பிள்ளையை, எனக்கு பிடித்து விட்டது.'ஆனால், இவர் அலுவலகம் முடிந்து, நேராக வீட்டிற்கு வருவதில்லை. இரவு, 7:00 மணி முதல் 9:00 மணி வரை நண்பர்களுடன் சீட்டு விளையாடுகிறார். அதோடு, மதுவும் - சிகரெட்டும் இவருக்கு துணை.'மிகவும் சிரமப்பட்டு தான், இந்த தகவல்களை சேகரித்தேன். அத்தனையும் உண்மை. சிறிதளவும் பொய் இல்லை. எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டால் தான், இவரை திருமணம் செய்து கொள்வேன். இது, என்னுடைய திடமான முடிவு...' என்று கூறி, வீட்டுக்குள் சென்று விட்டாள்.இப்படி பேசுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்பெண் சொன்னது முற்றிலும் உண்மை; எங்களால் மறுக்க முடியவில்லை.அவளின் துணிச்சலையும், நேர்மையையும் கண்டு வியந்தேன். பெண் சமுதாயம் விழித்துக் கொண்டது! உஷார், ஆண்களே!- எஸ்.பி.கன்னையா, மானாமதுரை.