'கஷ்டம் கஷ்டம்' என புலம்புறீங்களா?
எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிள்ளைகள் இருவருக்கு, சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்துக் கொண்டிருந்தார், புது நபர் ஒருவர். அவரிடம், 'இந்த பிள்ளைகள் உங்கள் உறவுக்காரர்களா?' என, கேட்டேன்.'இல்லை, நான் பள்ளி ஒன்றில், விளையாட்டு ஆசிரியராக இருக்கிறேன். இவர்கள் எங்கள் பள்ளியில் படிக்கின்றனர். 'எங்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது. அப்பா, அம்மா வேலைக்கு செல்வதால், எப்போதும், 'பிசி'யாக உள்ளனர்; எங்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்று தரவில்லை...' என கூறி, வருந்தினர். 'உங்கள் பெற்றோர் சம்மதித்தால், விடுமுறையில், வீட்டிற்கு வந்து சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதாக கூறினேன். அதன்படி, குழந்தைகள், பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வந்தனர்.'தற்போது, இவர்கள் மட்டுமின்றி, வேறு சில குழந்தைகளுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் வீடுகளுக்கே சென்று, சைக்கிள் ஓட்ட கற்றுத் தந்து, சிறு தொகையை கட்டணமாக பெற்றுக் கொள்கிறேன்.'தனியார் பள்ளியில் தரும் குறைவான சம்பளம், குடும்பத்தை நடத்த கஷ்டமாக இருந்தது. இது போன்று சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதால் கிடைக்கும் கூடுதல் வருமானம் போதுமானதாக உள்ளது...' என்றார்.கவுரவம் பார்க்காமல் செய்யும், அவரின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினேன்.'கஷ்டம் கஷ்டம்...' என புலம்புபவர்கள், கவுரவத்தை துாக்கி வீசி, இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு, மகிழ்ச்சியாக வாழலாமே!— எம்.மொவன் குட்டி, கோவை.
மாமனாரின் நல்ல மனசு!
உறவினர் ஒருவர், வசதியானவர். அவருக்கு ஒரே மகள். ஏழ்மையான குடும்ப பையனை காதலித்தாள்.அந்தஸ்தை காரணம் காட்டி, 'அந்தப் பையனுக்கு உங்க மகளை திருமணம் செய்து தரக்கூடாது...' என, உறவினர்கள் பலரும் தடை போட்டனர். அதை மீறி, மகள் விரும்பிய ஏழைப் பையனுக்கே திருமணம் செய்து கொடுத்தார். அத்துடன், அவரே செலவு செய்து, மேற்படிப்பு படிக்க வைத்து, மருமகனின் கல்வித் திறனை உயர்த்தினார்.மேலும், தன்னுடைய தொழிலில் ஈடுபடுத்தி, பயிற்சி கொடுத்து, தொழில் திறனையும் மேம்படுத்தினார். எல்லா வகையிலும் அவன் தயாரானதும், தனியாக தொழில் துவங்க பொருளுதவி செய்து, வழி காட்டி, உதவினார்.மருமகனும், எந்த, 'ஈகோ'வும் பார்க்காமல், கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டான். சில ஆண்டுகளில், மாமனாருக்கு இணையான வசதிக்கு உயர்ந்தான்.இப்போது, 'என் வளர்ச்சிக்கு காரணமே, மாமனாரின் பெருந்தன்மையும், பேருதவியும் தான்...' என, நன்றியுடன் கூறுகிறான், மருமகன்.முட்டுக்கட்டை போட்டவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு, குடும்பமே சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்கின்றனர்.- செ.விஜயன், சென்னை.
பசுமையான பிசினஸ், 'ஐடியா!'
நண்பரை காண அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். கல்லுாரி விடுமுறையில் வந்திருந்த நண்பரின் மகனிடம், படிப்பு பற்றி விசாரித்தேன். 'பள்ளியில் படிக்கும்போதே அவனுக்கு தோட்ட வேலைகள் செய்ய பிடிக்கும். கல்லுாரியில் சேர்ந்ததும், இயற்கை விவசாயம் சார்ந்த குழுக்களோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதைக்கொண்டு, மாடித் தோட்டம் அமைச்சுக் கொடுக்கிறதை, பகுதி நேர வேலையாக செய்து வருகிறான்...' என, மகனை பற்றி பெருமையாக கூறினார், நண்பர். அதைத் தொடர்ந்து, நண்பரின் மகன், 'தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாக ஒரு வாரத்தில், இரண்டு மூன்று வீடுகளுக்கு மாடித் தோட்டம் அமைத்து தருகிறேன். ஒரு வீட்டிற்கு, 'ஆர்கானிக்' முறையில் தோட்டம் அமைத்து கொடுத்தால், 4,000 ரூபாய் கிடைக்கும். விதை, உரம், 'கிரீன் ஹவுஸ் நெட்' என, அதில் பாதி பணம் தான் செலவாகும். மீதி பணத்தை என் படிப்பு செலவிற்கு போக, பெற்றோருக்கும் கொடுத்து உதவுகிறேன்.'ஒருமுறை தோட்டம் அமைத்து கொடுத்த வீட்டுக்கு, இலவசமாக, 'மெயின்டனன்ஸ்' செய்து கொடுப்பேன். மேலும், அந்த வீடுகளுக்கு இயற்கை உரம் தயாரிக்கவும் சொல்லி கொடுப்பேன். இதனால், வாடிக்கையாளர் வட்டம் கூடிக்கிட்டே இருக்கு...' என்றான்.நண்பர் மகனின், பசுமையான பிசினஸ் ஐடியாவை, மனதார பாராட்டி விட்டு வந்தேன்.—என். குர்ஷித், நெல்லை.