உள்ளூர் செய்திகள்

ஆயிரம் கண் அம்பாள்!

நிறைய அம்மன்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அட்சய திரிதியை அம்பாளான ஷடாக் ஷி பற்றி உங்களுக்கு தெரியுமா? இவளுக்கு ஆயிரம் கண்கள் உண்டு.பொதுவாக, தங்கள் கைப்பிடியில் உலகம் இருக்க வேண்டும் என்று விரும்புவர், அசுரர்கள். துர்கமாசுரன் என்பவனும் இதற்கு விதிவிலக்கல்ல. அவன் பிரம்மாவை எண்ணி தவமிருந்தான். பிரம்மாவும் அவன் முன்தோன்றி, வேண்டும் வரம் தருவதாக வாக்களித்தார். 'பிரம்மனே, உன்னிடம் உள்ள வேதங்கள் அனைத்தும் இனி என்னிடம் தந்து விட வேண்டும். இனி, இந்த பூமியில் எந்த தெய்வத்தைக் குறித்து யாகம் நடத்தினாலும், அதன் பலன் என்னையே சேர வேண்டும்...' என்று வரம் கேட்டான். பிரம்மாவும், தன் வாக்கை காப்பாற்றி விட்டார். இதையடுத்து, அவனது சக்தி, பல மடங்கு பெருகியது. மழை நின்று போனது. மழை நிற்க காரணம் தெரியுமா?சூரியனைக் குறித்து யாகம் செய்யும் போது, நெய்யை யாக குண்டத்தில் ஊற்றுவர். அது சூரியனை அடைந்து மழைத்துளிகளாக மாறும். இந்த தகவல், பாகவதம் எனும் நுாலில் சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய வரத்தின்படி, யாக பலன் துர்கமாசுரனைச் சேர்ந்ததால், மழையை அவன் நிறுத்தி விட்டான்.உலகத்திலுள்ள எல்லாரையும் கஷ்டப்படுத்தி, தான் மட்டும் இன்பமாக வாழ வேண்டும் என்பது, அவனது நோக்கம். அவன் நினைத்தால் தான், எல்லாருக்கும் உணவு கிடைக்கும் என்ற நிலை.இந்நிலையில், அனைவரும் கருணைக்கடலான பார்வதிதேவியை சரணடைந்தனர். துர்கமாசுரனால் தாங்கள் படும் வேதனை பற்றி கூறினர். பூச்சி, புழுக்களுக்கு கூட உணவில்லை என்றனர்.தன் பிள்ளைகளின் பசி, பட்டினி கண்டு அவள் வருத்தமடைந்தாள். ஆயிரம் கண்களுடன் ஷடாக் ஷி தேவி எனும் பெயரில், அவர்கள் முன் தோன்றினாள். ஷடாக் ஷி என்றால், எண்ணற்ற கண்களை உடையவள் என, பொருள்.தமிழகத்தில், மாரியம்மனை ஆயிரம் கண்ணுடையாள் என்கிறோம். வடக்கே, ஷடாக் ஷி அல்லது சாகம்பரி என்கின்றனர். துர்கை மற்றும் லட்சுமியின் அம்சமாக இவள் விளங்குகிறாள்.உலகம் படும் துன்பம் கண்டு, ஆயிரம் கண்களில் இருந்தும் கண்ணீர் வடித்தாள், ஷடாக் ஷி. அவை நதிகளாகப் பெருக்கெடுத்தன. அந்த நதிகள் பூமியை செழிப்பாக்கின. காய்கறிகள், பழங்கள் முதலானவற்றை கைகளில் ஏந்தி, அனைவருக்கும் வாரி வழங்கினாள், அன்னை.இந்த சம்பவம், ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது. இதனால் தான் இந்த நாளை செழிப்பைத் தரும் நாளாக கருதுகிறோம்.அட்சய திரிதியை நன்னாளில், ஷடாக் ஷி அல்லது லட்சுமி, துர்கை படங்களை பூஜையறையில் வைத்து, 'ஓம் சாகம்பர்யை வித்மஹேசதாக் ஷ்யை ச தீமஹிதந்நோ தேவி ப்ரசோதயாத்' என்ற மந்திரம் சொல்லி வழிபடுங்கள். செழிப்பான வாழ்வைப் பெறுங்கள்.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !