உள்ளூர் செய்திகள்

டைட்டானிக் காதல் (21)

முன்கதை சுருக்கம்: புவனா - கார்த்திகேயன் காதலிக்கும் விஷயத்தை ராஜாராமன் சொல்ல, இனி, அவள் இந்த வீட்டுக்கு வரக் கூடாது என்றார், குருமூர்த்தி சிவாச்சாரியார். ஆட்களை அனுப்பி மாமா, புவனாவை தேடுவதை ஒட்டு கேட்கும் ஜோதி, கார்த்திகேயனிடம் கூறினாள். இந்நிலையில், ஜோதியின் மொபைல் போனை அவளுக்கு தெரியாமல் ஆராய்ந்து பார்த்தார், மாமா பொன்னப்பர்-ராஜாராமன் சொன்னதை கேட்டு, அதிர்ந்து போனாள், புவனேஸ்வரி. ஆடிப்போய் உட்கார்ந்திருந்தவளின் கண்களில் நீர் நிறைந்து, கன்னங்களில் வழிந்தன.''இப்ப எதுக்கு அழறீங்க,'' என்றான், ராஜாராமன்.''அப்பா, இப்படி குப்பையை துாக்கி எறியற மாதிரி, என்னை எறிஞ்சிடுவார்ன்னு நினைக்கலை...''''பின்ன, ஆரத்தி எடுக்க வைத்து வரவேற்பார்ன்னு நினைச்சீங்களா?''''ராஜாராமன், கஷ்டப்படுத்தாதீங்க ப்ளீஸ்... உங்களுக்கு என் மனசு படும் பாடு புரியல...''''புரியுது. ரொம்ப நன்னா புரியுது... ஆனா, என்ன செய்ய முடியும்... முதல்ல கண்ணை துடைச்சு, அழுவதை நிறுத்துங்க. மனசை இப்படி உடைய விடாதீங்க.''எத்தனையோ தடைகளை மீறி வந்த, ரொம்ப தைரியசாலியான பொண்ணு, நீங்க. உங்களுக்கு நான் சொல்ல வேணாம். ஒரு நிமிஷம், அவர் நிலைமையில உங்கள வெச்சு பாருங்க... அவர் பக்க நியாயம் புரியும்.''கண்களை துடைத்து, அவனை ஏறிட்டாள்.''வேற என்ன பண்ணுவார்... என்ன பண்ண முடியும். உங்களுக்கு கீழ தங்கைகள் இருக்கா... வெறும் தம்பி மட்டும் இருந்திருந்தா கூட, கொஞ்சம் சுதாரிச்சிருப்பாரோ என்னவோ...''அவரால செய்ய முடிஞ்சதை தான் பண்ணியிருக்கார். அப்போ கூட கடைசியா, 'அவ மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா வாழச் சொல்லுங்கோ'ன்னு, ஆசிர்வாதம் பண்ணிதான் அனுப்பினார்,'' என்றான், ராஜாராமன்.''பின்ன என்ன புவனா... உங்க அப்பாவோட சம்மதம் மறைமுகமா கிடைச்சாச்சு. எங்கப்பா மாதிரி அரிவாளை துாக்கிக்கிட்டு விரட்டலையே...'' என்று, இடையில் புகுந்தான், கார்த்திகேயன்.''அது, உங்க ரத்தம்; இது, எங்க ரத்தம் சார். காலம் காலமா கோவில், பூஜை, வேதபாராயணம்ன்னு, பழக்கப்பட்டுட்டோம். தெரியாத்தனமா எறும்பை மிதிச்சாக் கூட, மனசு துடிக்கும் சார். அந்த அளவு பாவ, புண்ணியத்துக்கு பயந்து கட்டுப்பட்டு வளர்ந்துட்டோம்... எங்களால செடியக் கூட, கத்தரியால வெட்ட முடியாது.''''அதைத்தான் நானும் சொல்றேன், ராஜாராமன். எங்கப்பா ஏன் இப்படி ஜாதி, ஜாதின்னு அரிவாளும், கையுமா அலையுறாருன்னு தெரியல. அதுவும் என்னை விட்டுட்டாரு; புவனாவை குறி வெச்சு ஆட்களை அனுப்பியிருக்காரு.''''விடுங்க, கார்த்திகேயன். அது, அவரோட நியாயம். அவர் வந்த வழி. இப்போ நாம என்ன செய்யணும்ன்னு தான் யோசிக்கணுமே தவிர, இதெல்லாம் இல்ல...''''ஜோதி சொன்னதை பார்த்தா, முதல்ல, புவனாவை இந்த ஊரை விட்டு அனுப்பிடறது தான் நல்லதுன்னு படுது...'' என்றான், கார்த்திகேயன்.''ஐயோ... நான் எங்க போவேன்... எனக்கு எந்த இடமிருக்கு?'' என்றாள், புவனா.''பதறாதீங்க, புவனா... உலகத்துல எல்லாருக்கும் இடமிருக்கு; எல்லாத்துக்கும் இருக்கு. இல்லாம போனா சுவாமி படைச்சிருக்க மாட்டார்...''கார்த்திகேயன், புவனா இருவருமே, மவுனமாக அவனை பார்த்தனர்.''நான் வரும்போதே ஒரு பிளானோட தான் வந்திருக்கேன். அப்பாகிட்டயும் சொல்லிட்டு தான் வந்தேன். அதனால, கவலைப்பட வேண்டாம்.''ஊர்ல, மாந்தோப்பு வீடு ஒண்ணு பூட்டி தான் கிடக்கு. அங்க வந்து புவனா தங்கிக்கலாம். நான் கூட்டிண்டு போயிடுவேன். ஆனா, அது சரியா இருக்காது. எப்படியும் ஊராருக்கு தெரிய வரும்; தப்பா பேச ஆரம்பிச்சிடுவா,'' தயங்கி நிறுத்தினான், ராஜாராமன்.''ஆமாம்... நீங்க சொல்றது சரிதான்,'' என ஆமோதித்தான், கார்த்திகேயன்.''அதனால, நீங்க ரெண்டு பேருமே கிளம்பி, என் கூட வந்துடுங்க. நீங்க, எங்க ஊர்ல இருப்பீங்கன்னு, உங்கப்பாவால நினைச்சு கூட பார்க்க முடியாது.''''நல்ல ஐடியா தான். ஆனா, புவனாவோட வேலை; என்னோட அகாடமி...''''சார், இப்ப அதெல்லாமா முக்கியம்... புவனாவோட உயிர் முக்கியம்; உங்க ரெண்டு பேர் கல்யாணம் முக்கியம்.''''என்ன புவனா...'' என்று கேட்டான், கார்த்திகேயன்.அவள் தயங்குவதை பார்த்த ராஜாராமன், ''தயங்காதீங்க புவனா... உங்க ரெண்டு பேருக்கும் சாஸ்த்ரோர்த்தமா கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது, என் பொறுப்பு. அடுத்த முகூர்த்தத்துல, எங்க ஊர் கோவில்ல உங்க கல்யாணம், 'ஜாம் ஜாம்'னு நடக்கும். என்னை நம்புங்க, என்கூட கிளம்பி வாங்க.''இரு கைகளையும் கூப்பினாள், புவனா.''தெய்வம் மனுஷ ரூபேண...'' என்றாள்.''அதெல்லாம் சரி. உடனே கிளம்புங்க,'' என்றான், ராஜாராமன்.''உடனே வா... வீட்டுக்கு போய், டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு...'' என்ற கார்த்திகேயனை இடைமறித்தான், ராஜாராமன்.''புவனா என்ன டிரஸ்செல்லாம் எடுத்துண்டா வரப்போறா... கட்டின புடவையோடத்தானே வரா... அந்த மாதிரி நீங்களும் வாங்க... எங்க ஊர்ல நிறைய துணிக்கடை இருக்கு.''பதில் பேசாமல் கிளம்பினர், இருவரும்.கர்ப்பக்கிரகத்தினுள் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தார், குருமூர்த்தி சிவாச்சாரியார். என்றுமே இப்படி இருந்ததில்லை. மனது லயிக்க லயிக்க அபிஷேகமும், அர்ச்சனையும் செய்பவர். ஸ்ருதி தவறாமல் ஸ்லோகங்களை உச்சரிப்பவர். ருத்ரம் சமகமும், த்ரிசதியும் அவர் சொன்னால், இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர், இன்று அர்ச்சனை செய்யவே தடுமாறினார். மனசு லயிக்கவில்லை; துடித்துக் கொண்டிருந்தது. 'என்னப்பா, ஈஸ்வரா... எனக்கு ஏன் இந்த தண்டனை... என்ன கர்மா இது, எந்த ஜென்மத்து பாவம்... இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட என்ன செய்தேன்; எந்த குடும்பத்தை அழித்தேன்; எந்த பசுவை வதைத்தேன்; எந்த பிராமணனை கொன்றேன்.'எதற்காக இப்படிப்பட்ட பெண்ணை கொடுத்தாய்... கட்டிக் காப்பாற்றிய குடும்ப மானத்தை கெடுக்கவா; கவுரவத்தை குலைக்கவா... இது, குலத்துக்கே இழுக்கல்லவா; இனி, யார் என்னை மதிப்பர்... எதிரில் ஒப்புக்கு பேசினாலும், முதுகுக்கு பின் சிரிப்பர் அல்லவா...' என்று, அவர் மனசு, கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.அதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.''குமரேசா...''''என்னப்பா...'' என்று, ஓடி வந்தான்.கையில் இருந்த குங்கும கிண்ணத்தை அவனிடம் கொடுத்து, ''நீ, அர்ச்சனை பண்ணி எல்லாருக்கும் பிரசாதம் குடு. எனக்கு கொஞ்சம் தள்ளல. காத்தாட வெளில போய் உட்கார்ந்துட்டு வரேன்.''''சரிப்பா.''வெளியில் வந்து, மடப்பள்ளி அருகில் இருந்த திண்ணையில் உட்கார்ந்து கொண்டார். இப்படி உட்கார்ந்திருந்தபோது தானே, சாம்பசிவம் வந்து சந்தித்தார். தொடர்ந்து ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. அதற்கு மேல் உட்கார முடியாமல், உடம்பு வியர்த்துக் கொட்டியது.ஏதோ போல் இருக்கவே, மெல்ல எழுந்து நடந்தார். கோவிலை விட்டு வெளியில் வந்தபோது, கால்கள் பின்னின. வீடு வரை நடக்க முடியாது என்று தோன்றவே, நின்றிருந்த ஆட்டோவில் ஏறினார்.''எங்க சாமி போகணும், வீட்டுக்கா?''''ஆமாம்ப்பா.''வீட்டு வாசலில் நிறுத்தினார், ஆட்டோக்காரர். உள்ளே போய் முற்றத்தில் கால் கழுவியபோது, சமையல்கட்டிலிருந்து வெளியில் வந்தாள், பர்வதம்.''என்ன, இவ்வளவு சீக்கிரம் வந்துட்டேள்?''''முடியல, பர்வதம்... என்னவோ போலிருக்கு,'' என்றவர், அப்படியே மயங்கி சரிந்தார்.ஓடிப்போய் தாங்கிப் பிடித்த பர்வதம், ''மன்னீ... கவுரி, உமா, ஓடி வாங்கோ... அப்பா மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டார்...'' என, உரக்க குரல் கொடுத்தாள்.அடுத்த வினாடி தெரு கூடிற்று.— தொடரும்இந்துமதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !