டைட்டானிக் காதல்! (24)
முன்கதை சுருக்கம்: புவனா திருமணம் நடந்து முடிந்த சில நொடிகளில், குருமூர்த்தி சிவாச்சாரியாரின் உயிர் பிரிந்தது. பூச்சி மருந்தை குடித்த ஜோதி, மாமாவுக்கு தான் எழுதிய கடிதத்துடன், கட்டிலில் கிடந்தாள் -அந்த வீட்டின் ஜோதி நிரந்தரமாக அணைந்து விட்டது தெரியாமல், டீ எடுத்து வந்த மனைவியிடம், ''ஜோதி எங்கே?'' எனக் கேட்டார், பொன்னப்பர்.''இன்னும் எந்திரிக்கலீங்க.''''தெனமும் வெள்ளன எந்திரிச்சுக்குவா... இன்னிக்கு இம்புட்டு நேரமா துாங்குறா...'' என்றவர், டீ டம்ளரை வைத்து விட்டு எழுந்தார்.''டீ குடிச்சுட்டு போங்க, ஆறிப்போயிரும்.'''மடமட'வென்று வாயில் ஊற்றிக் கொண்டார். 'ஏதோ சரியில்லை' என்று, மனது சொல்லியது; மிகவும் சங்கடப்பட்டது. வேகமாக நடந்து, ஜோதியின் அறைக்கு சென்றார்.சாத்தப்பட்டிருந்த அறை கதவை திறந்தார். கட்டிலில் ஜோதி படுத்திருப்பது தெரிந்து, அருகில் சென்று பார்த்தார். ஜோதியின் கண்கள் மூடிக் கிடந்தன. வாயிலிருந்து வழிந்த நுரை காய்ந்திருந்தது. துடிதுடிக்க, ''ஜோதி... ஜோதி...'' என்று எழுப்ப முயன்றார். அந்த ஜோதி அணைந்து விட்டது புரிந்தது.''அடிப்பாவி மகளே... என்ன காரியம் செய்திட்ட...'' என்று அலறினார்.அந்த அலறல் கேட்டு, பூவாயி, செல்லாயி இருவரும் ஓடி வந்தனர்.அதற்குள், அவள் கையிலிருந்த கடிதத்தை எடுத்து படித்த பொன்னப்பர், தலையில் அடித்து அழுதார். அதிர்ச்சியை தாங்க முடியாத பூவாயி, தரையில் சரிந்தாள்.''நா பெத்த மவளே... என்ன வுட்டுப் போயிட்டியா...'' என்று, மார்பிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டாள், செல்லாயி. கதறி கதறி பிலாக்கணம் பாடினாள்.அதற்குள் செய்தி அறிந்து, ஊர் கூடிற்று. அவளுக்காக கிராமமே சோகமயமானது.''எல்லாம் நம்ம சின்னய்யாவால வந்த வினை...'' என்று சொன்னான், ஒருவன்.அதைக் கேட்ட, செல்லாயி, ஆவேசத்துடன் எழுந்து, பொன்னப்பரை உலுக்கினாள்.''நீயும், ஒம் மவனும் சேர்ந்து, எம் மவள கொன்னுட்டீங்கடா, பாவிகளா...'' என்று, அவரது மார்பில் அறைந்தாள்.நாலைந்து பேர் வந்து அவளை தள்ளி இழுத்து போக பார்த்தனர். ஆனாலும் திமிறியபடி, ''ஒனக்குத்தான் மாமன்னு சொல்லிச் சொல்லி ஆசை காட்டினியேடா... பாவிப் பொண்ணு அத நம்புச்சே...''ஏதோ ஒரு சிறுக்கி வந்து அத்தினியும் நாசம் பண்ணிட்டு போயிட்டாளே... எம் மவ சாவுக்கு நீதாண்டா காரணம். இதுக்கு நீ பதில் சொல்லியே ஆவணும்டா...''பேய் கத்தல் கத்தியவளை, இன்னும் இரண்டு பேர் சேர்ந்து இறுகப் பிடித்து, அறையை விட்டு வெளியே இழுத்து போயினர்.பிரமை பிடித்த மாதிரி நின்றிருந்த பொன்னப்பரிடம், ''நடக்கக் கூடாதது நடந்து போச்சுது. அதுக்காக இப்படியே இருந்தா எப்படிங்கய்யா... அடுத்து ஆக வேண்டியதை பாக்க வேணாவா?'' என்றார், ஒருவர்.ஜோதிக்கென்று வேறு யாரும் உறவுகள் இல்லாததால், மொட்டை போட்டு, தீ சட்டி துாக்கி, கொள்ளி வைத்து, இறுதிச் சடங்குகள் செய்தார், பொன்னப்பர்.ஊரில் யாரும், ஜோதியின் தற்கொலை பற்றி மூச்சு விடவில்லை. போலீசுக்கு போகவில்லை.எல்லாம் நடந்து முடிந்த அன்றிரவு, ஆளுக்கு ஒரு மூலையில் கிடந்தனர். பேசும் திராணியின்றி, தன் அறையில் தனியாக உட்கார்ந்திருந்த பொன்னப்பருக்கு, இருப்பு கொள்ளவில்லை. மனசு உறுத்திற்று. அந்த சின்ன பெண்ணின் சாவுக்கு தானே காரணம் என்று உணர்ந்தார்.ஒரு கட்டத்தில், இதற்கு மேல் தாங்க முடியாது என்ற எண்ணத்தில், சற்று உயரமான ஸ்டூலை எடுத்து வந்து போட்டார். பீரோவில் இருந்த கனமான வேஷ்டியை எடுத்து, உத்திரத்தில் மாட்டி முடிச்சிட்டு, மறு முனையை சுருக்கிட்டார்.சிறிது கூட தயங்காமல், சுருக்கை கழுத்திலிட்டு ஏறி நின்று, ஸ்டூலை எட்டி உதைத்தார். சின்ன சத்தத்தடன், சற்று தள்ளி விழுந்தது, ஸ்டூல். இருந்த மன நிலையில் யாரும் அந்த சத்தத்தை கவனிக்கவில்லை. யாருக்கும் கேட்கவில்லை.சில வினாடிகள் துடித்த, பொன்னப்பரின் உடல், பின்பு நிரந்தரமாக அடங்கிப் போயிற்று.''மன்னி... எழுந்திருங்க மன்னி...'' கிணற்றுக்குள்ளிருந்து கேட்கிற குரல்களாக இருந்தன, பர்வதத்திற்கு. மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். தன்னைச் சுற்றி நாத்தனார்களும், மச்சினர்களும் உட்கார்ந்திருப்பதை கண்டாள். கால்மாட்டில், பெரிய மன்னி நின்று கொண்டிருப்பதை பார்த்ததும், வாரிச் சுருட்டி எழுந்து உட்கார்ந்தாள். அதற்குள் காபி கலந்து எடுத்து வந்தாள், மகள் கவுரி.''இந்தாம்மா... கொஞ்சம் காபியாவது சாப்பிடு.''வேண்டாம் என்று தலையசைத்தாள், பர்வதம்.''கவுரி... காபி டம்ளரை என்கிட்ட குடு,'' என்று கேட்டு வாங்கிய பெரிய மன்னி, மற்றவர்களை விலக்கி, பர்வதம் அருகில் போனாள்.''இந்தா பர்வதம்... மொதல்ல இந்த காபியை குடி...'' என்று, டம்ளரை நீட்டினாள்.''இல்ல மன்னி... பிடிக்கல...'' தீனமான குரலில் முனகினாள், பர்வதம்.''இதப்பாரு, பர்வதம்... நமக்காக மட்டும் நாம வாழக்கூடாது. அப்படி வாழறது வாழ்க்கை இல்லை. எப்ப பூமியில் மனுஷாளா பொறந்தோமோ, அப்போதிலிருந்தே நாலு பேருக்கு ஒத்தாசையா வாழணும்.''ஆடு, மாடு, நாய் மாதிரியான மிருகங்களெல்லாம் கூட மனுஷாளுக்கு ஒத்தாசை செய்யிறது. மனுஷாளா பொறந்த நாம ஒத்தாசை செய்யலேன்னா எப்படி?''''ம... ன்... னி...''''நீ மட்டும் தான் இப்படி ஆனியா... உனக்கு முன்னால நான் ஆகலயா... குழந்தைகளே இல்லாத நான், அவர் போனதுக்கப்புறமும் வாழ்ந்துண்டுதானே இருக்கேன்... அவர் கூடவேவா போயிட்டேன்?''யாரோ விம்மும் சத்தம் கேட்டது.பெரிய மன்னி தொடர்ந்தாள்...''நானே வாழ்ந்துண்டிருக்கிறப்ப, நீ வாழ வேணாமா... உன்னை நம்பி மூணு குழந்தைகள் இருக்கா... அவாளை காப்பாத்த வேணாமா... அவாளுக்கு ஆறுதல் சொல்ல வேணாமா... நீ மட்டும் தனியாவா இருக்க... உன் கூட நாங்க இத்தனை பேர் இல்ல?''''இல்ல, மன்னி... தாங்க முடியல...''''தாங்க முடியாத துக்கம் தான். நான் இல்லேன்னு சொல்லல. அனுபவிச்சவாளுக்கு தான், அந்த துக்கம் என்னன்னு தெரியும். அதுக்காக இந்த மாதிரி நாள் கணக்குல மூலையில முடங்கிண்டு கிடக்க முடியுமா?'' தெளிவான குரலில், தீர்க்கமாக பேசினாள், அந்த அம்மாள்.''இந்தா, முதல்ல இந்த காபியை குடி...''வாங்கி குடித்தாள், பர்வதம்.அதற்கப்புறம், சற்று உயிர் வந்த மாதிரி இருந்தது. ஓரளவு தெளிவு ஏற்பட்டது. விரிந்து கிடந்த தலை முடியை கோதி முடிந்து கொண்டாள்.அதற்குள் சுதாரித்துக் கொண்ட மச்சினன்மார்கள், 'இதப் பாருங்க, மன்னி... நீங்க, எங்காத்துக்கு வந்தப்ப நாங்கள்லாம் குஞ்சும் குளுவானுமாக இருந்தவா தான். அம்மா இல்லாத எங்களை அம்மாவா இருந்து வளர்த்தது, கல்யாணம் பண்ணிக் குடுத்தது நீங்க.'அது எதையும் நாங்க மறக்கல. அண்ணா இல்லாத ஒரு குறை தவிர, வேற எந்த குறையும் நாங்க உங்களுக்கு வைக்க மாட்டோம்...'ஆமா, மன்னி... பெரிய மன்னி சொன்ன மாதிரி, நீங்க தனி மனுஷி இல்ல. நாங்க அத்தனை பேரும் கூட இருக்கோம். குமரேசனை படிக்க வச்சு ஆளாக்கறது எங்க பொறுப்பு. கவுரிக்கும், உமாவுக்கும் கல்யாணம் பண்ணித்தர வேண்டியது எங்க கடமை...'எழுந்திருங்க மன்னி. குழந்தைகளை கவனிங்க. வீட்டை கவனிங்க. அண்ணா எங்கயும் போக மாட்டார். இந்த வீட்டையும், உங்களையும் சுத்தி சுத்தி வந்துண்டே தான் இருப்பார்.'இனிமே நாங்க ரெண்டு பேரும், வீட்டை காலி பண்ணிட்டு இங்கயே வந்துடறோம். பெரிய மன்னி கூடவும், உங்க கூடவுமே தங்கிடறோம். ஒண்ணா கூட்டுக் குடும்பமாகவே இருக்கலாம்...' என்றனர்.அத்தனை வார்த்தைகளும் சேர்ந்து பர்வதத்திற்கு நம்பிக்கை தந்தன. அந்த நம்பிக்கையில் தைரியம் ஏற்பட்டது. வாழ்க்கையில் பணம், பொருளை விட, மனிதர்கள் தேவை என்பது பிடிபட்டது.'நான் இருக்கிறேன். பயப்படாதே' என்ற அபயக் குரல் வேண்டும் எனப் புலப்பட்டது. அந்த குரல் கிடைப்பவர்கள் பாக்கியசாலிகள். தான், பாக்கியசாலி தான்.தன்னை, தனியாக விட்டு விட்டு போய்விடவில்லை, குருமூர்த்தி சிவாச்சாரியார். சுற்றிலும் நல்ல மனிதர்களை வைத்து விட்டு தான் போயிருக்கிறார். கட்டுக்கோப்பான மனிதர்களை ஏற்படுத்தியிருக்கார். அறுந்து போகாத உறவுகளும், மனிதர்களும் மிகப்பெரிய பலம்.அத்தனை பேரையும் நன்றி பொங்க பார்த்த, பர்வதம், ஒரு புதிய தெம்புடனும், வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையுடனும் மெல்ல எழுந்து கொண்டாள். — தொடரும்இந்துமதி