வந்தாச்சு மார்கழி!
மார்கழி மாதம் என்றாலே, நம்மையும் மீறி ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டு விடும். அதிகாலையில் கோவில்களில் ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள், நம்மை துயில் எழுப்பும். மார்கழி முழுவதும் கோவில்களில் பொங்கல் நைவேத்தியமும் அன்றாட பூஜையில் இடம்பெறும். மார்கழி மாதம் முழுக்க வரிசையாக, இறை வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும். பெருமாள் கோவில்களில் இரா பத்து, பகல் பத்து என்று, 20 நாட்களுக்கு, சுவாமிக்கு அலங்காரமும், புறப்பாடும் நடைபெறும். மார்கழிக்கு மற்றொரு தனிச்சிறப்பு, அதிகாலையில் எழுந்து கோலம் போட்டு, வண்ணப் பொடிகளைத் துாவி அலங்கரிப்பர். கோலத்தின் நடுவில் பசுஞ்சாணத்துடன் பரங்கிப்பூவை வைத்து அழகு பார்ப்பதும், ஓர் அலாதி அனுபவம் தான்!மார்கழி மாதத்தில் வரும் மிக முக்கிய விழா, வைகுண்ட ஏகாதசி.வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பு மிகவும் பிரசித்தி பெற்றது. ஸ்ரீரங்கம் உட்பட பெருமாள் கோவில்களில் ஆண்டுக்கு ஒரு முறை தான், பரமபத வாசல் திறப்பு நடைபெறும்.இறைவனின் பரமபதத்தை அடைய, சொர்க்க வாசற்படி வழி செல்ல, அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு மகிழ்ச்சியுடன் படையெடுப்பர். அன்று முழுவதும் விரதம் இருந்து, இரவு கண் விழித்து, மறுநாள், துவாதசி அன்று, குறிப்பிட்ட உணவு வகைகளை செய்து, இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து, சூரிய உதயத்திற்கு முன் சாப்பிடுவர்.வைகுண்ட ஏகாதசியன்று உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, இரவு முழுவதும் தாயம், பல்லாங்குழி, பரமபத ஆட்டம் என்று கலகலப்பாக விளையாடுவர். பரமபதத்தின் தத்துவம் என்னவென்றால், துஷ்டர்களிடமிருந்து தப்பித்து, இறைவனை அடைய ஏணியில் ஏற, அத்தனை தடைகளையும் கடந்து, இறுதியாக பரமனின் பாதகமலங்களில் சரணாகதி அடைவதும் மகிழ்ச்சிக்குரியது தான்! துவாதசி அன்று சமையலில் இடம் பெற வேண்டியவை...நெல்லிக்காய் பச்சடி!தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய், பச்சை மிளகாய் -- தலா 2, தேங்காய்த்துருவல் - ஒரு தேக்கரண்டி, புளிக்காத தயிர் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, எண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டிசெய்முறை: பெரிய நெல்லிக்காயை சீவி, விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய்த்துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து, தயிருடன் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகை போட்டு, தாளித்து, பச்சடியில் கொட்டி கலக்கவும். அகத்திக்கீரை பொரியல்!தேவையான பொருட்கள்: அகத்திக்கீரை - ஒரு சிறிய கட்டு, தேங்காய்த் துருவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி, சர்க்கரை - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, எண்ணெய், உளுந்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் -- ஒன்று, பெருங்காயத்துாள் -- சிறிதளவு. செய்முறை: பாசிப்பருப்பை குழையாதவாறு அரைவேக்காடு பதத்தில் வேக வைத்து, தனியே எடுத்து வைக்கவும். அகத்திக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். கீரை ஆறியதும் தண்ணீரைப் பிழிந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, பிழிந்து வைத்துள்ள அகத்திக்கீரை, வேகவைத்த பருப்பு, பெருங்காயத்துாள், தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்து லேசாகக் கிளறி இறக்கவும்மா. கோதைநாயகி