உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 41 வயது பெண். இளங்கலை பட்டப்படிப்பு முடித்ததும், என், 22வது வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர், பெற்றோர். என் கணவர், அவர் வீட்டில் ஒரே மகன். எனக்கு, இரு அண்ணன்கள். பெரிய அண்ணன், 'பிசினஸ்' செய்கிறார். சின்ன அண்ணன், நல்ல பணியில் இருக்கிறான். எனக்கு இரு மகன்கள் பிறந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன், எனக்கு குடலில் புற்றுநோய் பாதித்தது. என் இரு அண்ணன்களும், பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். டாக்டர்கள் எவ்வளவு தான் நம்பிக்கை ஊட்டினாலும், புற்றுநோய் இருப்பதை மறைத்து, ஏமாற்றி திருமணம் செய்து வைத்து விட்டதாக, தினமும், மருத்துவமனை வந்து, சத்தம் போட்டு விட்டு செல்வர், கணவரும், மாமியாரும்.இதைக்கேட்டு, என் அம்மா தான் மிகவும் வருத்தமடைந்தார். இரு அண்ணன்கள், என் கணவரிடம் மல்லுக்கு நின்று, சண்டை போடுவர். ஒரு கட்டத்தில், இன்னும் ஆறு மாதம் தான் என்று, எனக்கு கெடு விதித்தார், டாக்டர். சிறு பிள்ளைகளாக இருந்த என் மகன்களை நினைத்து தான், நான் மிகவும் கவலைப்பட்டேன்.அப்போது, மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு, தன்னம்பிக்கை ஏற்படும்படி, ஒருவர் வந்து தினமும் உரையாற்றுவார். அவரது பேச்சை கேட்டதிலிருந்து, எனக்குள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு விட்டது.இந்த ஆறு மாதத்துக்குள் என் மகன்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணினேன். சிகிச்சை ஒரு பக்கம் இருந்தாலும், என் பெரிய அண்ணன் பிசினசில் எனக்கு ஏதாவது பொறுப்பு தரும்படி கேட்டேன். அஞ்சல் வழியில் மேற்படிப்பு படிக்கவும் சேர்ந்தேன். என் அண்ணன்களின் சிறப்பான பராமரிப்பில், நோயிலிருந்து விடுபட்டேன். அடுத்து, என் முயற்சியிலும், நான், பி.எல்., படித்து முடித்தேன். வக்கீலாக பதிவு செய்து, தனியாக ஆபீஸ் நடத்துகிறேன். என் மகன்களுக்கு நல்ல கல்வியை தர முடிந்தது. என் கணவர், என்னை விட்டு விலகி, அவரது உறவுக்கார பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும் கேள்விப்பட்டேன். குழந்தைக்கு, இரண்டு வயதாகும் போது, என் கணவரது இரண்டாவது மனைவி, ஏதோ நோய் வந்து, இறந்துவிட்டிருக்கிறார்.கைக்குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று, என்னை சந்தித்து, மீண்டும் வீட்டுக்கு வருமாறு அழைத்தார், கணவர். எனக்கும், என் மகன்களுக்கும் அதில் துளியும் விருப்பமில்லை.மனிதாபிமான முறையில், பெண் குழந்தையை வளர்க்கலாம் என்று ஆசை இருந்தது. மீண்டும் அவரது, 'டார்ச்சர்' தொடராது என்பது நிச்சயமில்லை. மேலும், இப்போது உடல்நலம் தேறி, என் காலில் நிற்கும் நிலையில், கணவர் என்னிடம் திரும்பவும் வந்து சேருவதற்கும் வாய்ப்புள்ளது. என் இரு அண்ணன்களுக்கும் இதில் விருப்பமே இல்லை.'மீதமுள்ள காலத்தை நிம்மதியாக கழிப்பதை விட்டு, இதென்ன புது உறவு?' என்கின்றனர். என் மகன்களும், அக்குழந்தையை, தன் தங்கையாக ஏற்றுக் கொள்வரா, என் காலத்துக்கு பின் அவளை கவனித்துக் கொள்வரா என்று யோசிக்கிறேன். நான் என்ன செய்யலாம், அம்மா.- இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு —படித்த மக்களிடையே கூட, புற்றுநோய்களை பற்றி தெளிவான பார்வை இல்லாதது, அவலமான விஷயம்.* தொற்றுநோய் அல்ல, புற்றுநோய் * எந்த நிலையிலும் குணப்படுத்தக் கூடியது தான், புற்றுநோய் * யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம்.மனோதிடத்துடன், குடல் புற்றுநோயுடன் போராடி ஜெயித்துள்ளாய்; படித்து உனக்கொரு புதிய பாதை அமைத்துள்ளாய்.இப்போது உன் மூத்த மகனுக்கு, 16 வயதும், இளைய மகனுக்கு 14 வயதும் இருக்கலாம். அடுத்த 10 ஆண்டுகள், நீ, உன் மகன்களுக்காக உழைக்க வேண்டி வரும். கணவர், உன்னை விட்டு விலகி, மறுமணம் செய்து கொண்டதாக எழுதி இருந்தாய். உங்கள் இருவருக்கும் இடையே முறைப்படி விவாகரத்து நடந்ததா, இல்லையா? நடந்திருந்தால் நல்லது; இல்லை என்றால், இப்போதாவது அதற்கான நடவடிக்கையில் ஈடுபடு.இப்போது உன் கணவரின் மகள் விஷயத்துக்கு வருவோம்...உன்னிடம் கேட்டா, இன்னொரு திருமணம் செய்து கொண்டார், கணவர்? தான், தன் சுகம் என இருந்து, ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டார், அந்த படித்த முட்டாள். அந்தக் குழந்தைக்கும், உனக்கும் துளியும் சம்பந்தமில்லை. குழந்தையை பெற்றவரே பார்த்துக் கொள்ளட்டும்.உன் முன்னாள் கணவரின் தாயாரோ, முழுநேரப் பணிப்பெண் அமர்த்தியோ குழந்தையை பார்த்துக் கொள்ளட்டும் அல்லது குழந்தையை பார்த்துக் கொள்ள, முன்னாள் கணவர், மூன்றாம் திருமணம் செய்து கொள்ளட்டும்.உனக்கு கெட்டது செய்பவர்களை நீ, பழி வாங்க வேண்டாம்; அவர்களின் செயல்களுக்கான பலாபலன்களை இறைவன் கொடுப்பான்.உன் முன்னாள் கணவரின் பெண் குழந்தையை நீ வளர்க்க, உன் அண்ணன்கள் மற்றும் உன் மகன்கள் ஒருக்காலும் உடன்பட மாட்டார்கள்.அந்த படித்த முட்டாளின் மகள், உன்னிடம் வந்து சேர்ந்தால், உங்கள் அனைவரின் வாழ்க்கையும் தடம் புரளும்.இன்னொருத்தியின் குழந்தையை, 2 வயதிலிருந்து அரும்பாடுபட்டு வளர்த்தால், அது, உன்னை அம்மா என, பாவிக்கும். ஆனால், அக்குழந்தையை உன் அண்ணன்கள் மற்றும் மகன்கள் அடங்கிய நலம் விரும்பிகள் கூட்டம், முழுமையாக புறக்கணிக்கும்.தொடர்ந்து உன் பணியிலும், மகன்கள் வளர்ப்பிலும் முழு கவனம் செலுத்து. அண்ணன் குடும்பத்தாருடன் அன்னியோன்யமாக உறவாடு. சிறு சிறு சந்தோஷங்களை அனுபவித்து, உன் வாழ்க்கையை மகிமைப்படுத்து.- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !