உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு— நான், 36 வயது பெண். பட்டப்படிப்பு படித்துள்ளேன். என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். எங்களது வசதியான குடும்பம். அப்பா, 'பிசினஸ்' செய்கிறார். கல்லுாரி படிப்பு முடிந்ததுமே, எனக்கு மாப்பிள்ளை பார்த்தனர், என் பெற்றோர். டாக்டர் மாப்பிள்ளை ஒருவரை முடிவு செய்து திருமணம் செய்து வைத்தனர். வரதட்சணையாக, ரொக்கம், தங்கம் மற்றும் கார் ஆகியவற்றை கொடுத்தனர், என் பெற்றோர். கணவர் வீட்டினரும் வசதியானவர்கள் தான். என் கணவருக்கு ஒரு தங்கை உண்டு. எங்கள் திருமணத்தின் போது, நாத்தனாருக்கு திருமணமாகவில்லை. அவள் முன், நாம் அன்னியோன்னியமாக இருக்கக்கூடாது என்று சொல்லி, என்னை விட்டு தள்ளியே இருப்பார். நானும், நியாயமான காரணமாக இருந்ததால், ஏற்றுக்கொண்டு, தாமரை இலை தண்ணீர் போல் தான் இருந்தேன். நாத்தனாருக்கு ஒரு வழியாக திருமணம் முடிந்து, வெளியூர் சென்று விட்டாள். இதற்கிடையில், என் கணவருக்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது, பிறகு தான் எனக்கு தெரிந்தது. 'நானாக யாரையும் தேடி போகவில்லை. அப்பெண்களே வந்து விழும்போது, நான், முனிவர் போலவா இருக்க முடியும்?' என்று எதிர் கேள்வி கேட்டு, என் வாயை அடைத்தார். என் பெற்றோரிடம் சொல்லி, நியாயம் கேட்க, 'இனி அப்படி நடந்து கொள்ள மாட்டேன்...' என்று வாக்குக் கொடுத்தார். இதற்கிடையில், எங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன, மீண்டும் தன் லீலைகளை ஆரம்பித்து விட்டார், கணவர். சினிமாவுக்கு சென்றால், எங்கள் இருவருக்கும் இடையே ஒரு சீட்டை காலியாக இருக்கும்படி பார்த்து கொண்டார். யாராவது ஒரு உறவுக்கார பெண்ணை வரச்சொல்லி, முன்கூட்டியே தகவல் சொல்லியிருப்பார். படம் ஆரம்பிப்பதற்கு, ஐந்து நிமிடத்துக்கு முன், அப்பெண் வந்து, எங்கள் இருவருக்கும் நடுவே உள்ள இருக்கையில் அமர்ந்து கொள்வாள். அப்பெண்ணின் தோளில் கைப்போட்டு சிரித்து பேசியபடி, படம் பார்ப்பார். என்னை வெறுப்பேற்றவே இப்படி செய்கிறார் என்று புரிந்து, அதன் பின் அவருடன் வெளியில் செல்வதையே தவிர்த்தேன். அது, அவருக்கு இன்னும் சாதகமாகி போனது. மாமனார் - மாமியாரும் அவரை கண்டிப்பதில்லை. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலையாக உள்ளது. கணவரின் அன்புக்காக ஏங்குகிறேன். ஆனால், அவரோ என்ன காரணத்தாலோ என்னை பழி வாங்கும் நோக்கில், ஒதுக்கி வைக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவரது மனநிலையில் ஏதாவது கோளாறு இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன். நான் என்ன செய்தால், கணவரது அன்பும், அரவணைப்பும் முழுதாக கிடைக்கும் அம்மா. - இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு — மருத்துவர்களும் மனிதர்கள் தானே? அவர்களிடமும் நல்ல குணங்களும், தீய குணங்களும் கலந்து தானே காணப்படும்? உனக்கும், மருத்துவருக்கும் திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகும் என, யூகிக்கிறேன். உன் இரட்டை மகள்களுக்கு, 10 வயதாகும் என, கணிக்கிறேன். இந்த, 12 ஆண்டு திருமண வாழ்க்கையில், நீ, அனிச்சையாக எதாவது ஒரு மனம் புண்படுத்தும் வார்த்தையை கணவரின் மீது வீசி இருந்திருக்கலாம். நீ, பயன்படுத்திய வார்த்தையை அன்றே நீ மறந்து விட்டிருப்பாய். ஆனால், உன் கணவர் அந்த வார்த்தையை மனதுக்குள் தொடர்ந்து உருட்டி புரட்டி, வக்கிரமாகி இருக்கிறார். ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்பர். நன்கு யோசித்துப்பார். அப்படி எந்த வார்த்தையும் நினைவுக்கு வரவில்லை என்றால், பிரச்னை இல்லை. உன் கணவர் நல்ல மூடில் இருக்கும் போது சாந்தமாகக் கேள். 'இத்தனை வருடத் தாம்பத்யத்தில் நான் ஏதோ ஒரு வார்த்தை பிரயோகித்து அது உங்கள் மனதை புண்படுத்தி அதனால், நீங்கள் என்னை தொடர்ந்து பழிவாங்குகிறீர்களா? அப்படி நான் எதாவது பேசியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் நாம் குடும்பம் நடத்த வேண்டியிருக்கிறது. 'தினம் நாம் முட்டி மோதிக் கொண்டிருந்தால் எப்படி? சினிமா தியேட்டரில் உங்களுக்கும், எனக்கும் இடையே ஒரு பெண்ணை உட்கார வைக்கிறீர்கள்... அவளுக்கு நீங்களும், நானும் இளப்பமாகி விடுவோம். அவள் உங்களை பலவிதங்களில் சுரண்ட பார்ப்பாள். 'நம்மிரு மகள்களும் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பெரிய மனுஷி ஆகி விடுவர். அவர்கள் முன் நாம் கண்ணியமான பெற்றோராக காட்சியளிக்க வேண்டாமா? நான், உங்களை துளியும் குற்றம் சாட்டவில்லை. நம்மிருவரின் கண்ணியத்தையும், மாண்பையும் காக்கவே பேசுகிறே...' எனக் கூறு. நீ, ஏதாவது புண்படுத்தும் வார்த்தைகளை பேசியிருந்தால், உன் கணவர் கட்டாயம் வெளிப்படுத்துவார். அவர் விரும்பும் வண்ணம் மன்னிப்பு கேள். எதுவும் சொல்லாமல் அமைதி காத்தார் என்றால், 'இன்னொரு சரியான தருணத்தில் சொல்வீர்கள் என காத்திருக்கிறேன்...' என பேசு. சுயசுத்தம் பேணு. கவர்ச்சியாக அவர் வீடு திரும்பும் நேரம் காட்சியளி. உன் உடல்மொழி அவரின் கவனத்தை சுண்டி இழுக்கட்டும். அவரிடம் பேசும்போது வார்த்தைகளை சுய தணிக்கை செய். மாமனார், மாமியார், நாத்தனாரிடம் நல்லுறவு பேணு. யோசித்துப் பார்! உன்னை விட ஆயிரம் பிரச்னைகள் அதிகம் உள்ள பெண்கள் எல்லாம் பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளித்து வாழும் போது, ஓரிரு பிரச்னைகள் உள்ள நீ ஏன் சாம, தான, பேத, தண்ட முறையில் பிரச்னைகளை சமாளித்து, மகாராணியாய் வெளிப்படக்கூடாது? பிரச்னைகளுக்கான தீர்வு உன்னிடமே உள்ளது. கணவர் என்ற ரோஜா செடியை ஒரு தோட்டக்காரனாய் பராமரி. களைகளையும், முட்களையும் அகற்று. - -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
அக் 26, 2025 18:30

திருமணத்துக்கு முன்பே இவன் பொம்பளை பொறுக்கி. ஆழந்தெரியாமல் காலைவிட்ட கேஸ். மனைவி எதிரிலேயே இன்னொரு பெண்ணின் மீது கைபோட்டு வெறுப்பேற்றுகிறான். இவனிடம் சமரசம் சரிப்படாது. உன் தாய் தந்தையரை வைத்து முடிவெடு.


NeelaXanthum
அக் 26, 2025 16:28

உங்கள் கணவருக்கு ஊர் சுத்தி பழக்கம் ஆகி விட்டது. இது உருப்படாத கேஸ். உங்கள் மாமனார் மாமியாருக்கும் இந்த விஷயம் உங்கள் திருமணத்துக்கு முன்பே தெரிந்திருக்கும். திடீர் என்று யாரும் இப்படி மாற மாற்றார்கள். முதலில் உங்கள் உடல் நலம் பரிசோதனை செய்யவும். ஊர் சுத்தி கணவரால் ஏதேனும் ஒட்டு வியாதி வந்து தொலைத்தது இருக்க போகிறது. சொந்த காலில் நில்லுங்கள். உங்கள் மகள்களை அன்பால் வயப்படுத்தி வைக்கவும். உங்கள் கணவரை திருப்பி உள்ளே வரவிடுவது உங்களுக்கும் உங்கள் பெண்களுக்கும் நல்லது அல்ல. மேலும் யார் இந்த உறவுக்கார பெண் - மேலே கைய வைக்கும் அளவுக்கு நெருக்கமானவள் என்று ஆனா பிறகு நீங்கள் அந்த இடத்தில் இருந்து வெளியே வந்திருக்க வேண்டும். காதலை பிச்சை எடுத்து வாங்க முடியாது. இங்கு காதல் இருப்பது போல் தெரியவில்லை. பட்டதாரி என்று சொல்வதில் என்ன பெருமை? உங்களுக்கும் உங்கள் பெண்களுக்கும் எதிர்காலம் ஒன்று உண்டு. அது இந்த குப்பை மனிதர் கூட இல்லை என்பதை உணருங்கள்.


Govi
அக் 26, 2025 15:10

நீயும் அடுத்த வரை தேடு வாழ்க வளமுடன்


Indhiyan
அக் 26, 2025 08:21

கொஞ்சம் அதிகமாக யோசித்தால், இந்த பெண் ஏன் கணவன் முன்னாடி இன்னொரு ஆணின் தோளில் கை போட கூடாது? அவன் இன்னொரு பெண்ணிடம் அப்படி இப்படி இருப்பதை வீடியோ எடுத்து எல்லாருக்கும், முக்கியமாக மகள்களுக்கு காட்ட வேண்டும்