உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு - நான், 29 வயது பெண். கணவர் வயது, 50. நான், அவருக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவி, விவாகரத்து பெற்று சென்று விட்டார். என் கணவருக்கும், முதல் மனைவிக்கும், ஒரு மகள், ஒரு மகன் இருக்கின்றனர். மகளுக்கு, 24 வயது. சமீபத்தில், அவளுக்கு, திருமணமாகி விட்டது. மகன் வயது, 19. கல்லுாரியில், டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். இவன் என்னிடம் நன்றாக பேசுவான்; பாசமாக இருப்பான். என் கணவரின் துாரத்து உறவினர் ஒருவர், எங்கள் அம்மாவுக்கும் உறவினர். அவர் சொன்னதை நம்பி தான், இவரை திருமணம் செய்து வைத்தனர், என் பெற்றோர். என் கணவர், தொடக்கப்பள்ளி ஒன்று வைத்து நடத்தி வருகிறார். தன் முதல் மனைவிக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், மகள் திருமணத்துக்கு, என்னிடமிருந்த, 20 சவரன் நகையை வாங்கித்தான், திருமணத்தை நடத்தினார். நான், குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று, கருத்தடை ஆபரேஷன் செய்ய வைத்தார். சமீபத்தில், தன் முதல் மனைவியை, எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில் ஒரு வீடு பார்த்து, குடி வைத்துள்ளார். தினமும் அங்கு சென்று வருகிறார். மகனையும், தன்னிடம் அழைத்துக் கொண்டார், முதல் மனைவி. 'என் எதிர்கால பாதுகாப்புக்கு, தேவையானதை செய்து கொடுங்கள்...' என்று கேட்டால், 'நான் இறந்ததும், நீயும் இறந்து விடு...' என்கிறார். நான் கொடுத்த, 20 சவரன் நகையையாவது திருப்பி கொடுங்கள் என்றால், அதையும் கொடுக்க மறுக்கிறார். என் பெற்றோரிடம் விஷயத்தை கூற, 'அவருடன் வாழ வேண்டாம். விவாகரத்து வாங்கி விடலாம். உனக்கு வேறு கல்யாணம் செய்து வைக்கிறோம்...' என்கின்றனர். கருத்தடை ஆபரேஷன் செய்து, இரண்டு ஆண்டுகளாகிறது. அதை மீண்டும் மாற்ற முடியுமா? நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி செய்தால், கணவர் கெடுத்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா. - இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு - சபலமான ஆண்களுக்கு எப்போதுமே, இரண்டு என்கிற எண்ணிக்கை மிகவும் பிடிக்கும். இரண்டு பெண்களை மணந்து கொள்வது ஆண்களின் மனக்கிறுக்கு. ஆண்கள் ஒரே நேரத்தில், இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய முயன்று மண்ணை கவ்வுவர். இரண்டு மனைவிகளை மணந்தவன் அகவாழ்க்கையிலும், புறவாழ்க்கையிலும் ஜெயித்ததாக வரலாறு இல்லை. சரிவர விசாரிக்காமல் ஒரு வயோதிகருக்கு, இரண்டாம் மனைவியாக நீ வந்தது கடைந்தெடுத்த முட்டாள் தனம். கணவரின் பேச்சைக் கேட்டு, நீ கருத்தடை செய்து கொண்டது, யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டதற்கு சமம். 20 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை முதல் தாரத்தின் மகள் திருமணத்திற்கு எடுத்துக் கொடுத்து, ஏமாந்திருக்கிறாய். பொதுவாக, இரண்டாம் தாரமாய் வாக்கப்படும் பெண்கள் பேராசை பேய்களாக முதல்தாரத்துக் குழந்தைகளை துன்புறுத்தும் ரத்தக்காட்டேரிகளாக சித்தரிக்கப்படுவர். உன் கதை தலைகீழாய் உள்ளது. முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்தவர், எதற்கு முதல் மனைவியை தன் வீட்டுக்கு அருகில் குடிவைத்து, ஒரு கோடி ரூபாய் சொத்துகளை வாங்கித் தந்திருக்கிறார்? காரணங்கள் இரண்டு: முதலாவது, ஆத்திர அவசர கோபத்தில் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். ஆனாலும், முதல் மனைவி மீதான காதல் குறையவில்லை. மகள் மற்றும் மகன் மீதான அன்பு, முதல் மனைவி பக்கமும் மடைமாறி இருக்கிறது. இரண்டாவது, முதல் மனைவி ராசியானவள். அவளால் தான் வசதி வாய்ப்புகள் வந்தன. அவளை விவாகரத்து செய்தபின் வசதி வாய்ப்புகள் குறைந்தன. மீண்டும் வசதி வாய்ப்புகளை பெருக்க அவளை அழைத்து வந்து அருகில் வைத்துக் கொண்டார். அவர் ஒரு ஜோதிட பைத்தியமாக இருக்கக்கூடும். இது ஒரு யூகமே. அடுத்து, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம். முதல் மனைவியை சந்தித்து பேசு. உன்னை முறைப்படி விவாகரத்து செய்து விட்டு, உன் கணவர் முதல் மனைவியை மீண்டும் மணந்து கொள்ளட்டும். மகளின் திருமணத்துக்கு கொடுத்த, 20 பவுன் நகையை திருப்பித்தரச் சொல். உன்னுடனான விவாகரத்துக்கு பிறகு, உனக்கு நஷ்ட ஈடாய், 10 லட்ச ரூபாய் கொடுக்கச் சொல். சமாதான உடன்படிக்கைக்கு முதல் மனைவி சம்மதிக்க மறுத்தால், காவல் நிலையத்தில் புகாரையும், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் மனுவையும் தாக்கல் செய். மருத்துவரை அணுகி, கருத்தடை ஆபரேஷனை மாற்ற முடியுமா என்று ஆலோசி. மீண்டும் மறுமணம் செய்யும்போது, 'செகண்ட் ஹாண்ட்' மாப்பிள்ளை தேடாதே. உன் வயதுக்கு சமமான விதவனுக்கு கழுத்தை நீட்டு. உனது வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் மலர வாழ்த்துகள்! -- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

panneer selvam
டிச 19, 2025 15:03

It is rightly said about general nature of male . Advice is relevant to present case


thamilan
டிச 19, 2025 07:12

என்ன விளக்கம் இது. தரமற்ற விளக்கம். சபலமுள்ள சில ஆண்களுக்கு இரண்டு என்று. எல்லா மனிதர்களிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு.


Anand
டிச 17, 2025 14:03

உன் நகைகளுக்குண்டானதை அவனிடமிருந்து மீட்டு உடனடியாக அவனை விட்டு விலகி வேறு வாழ்க்கையை தேடிக்கொள்வதே மேல். குடும்பக்கட்டுப்பாடு செய்துக்கொண்டது மிகவும் அறிவிலித்தனம்.


baala
டிச 16, 2025 09:42

25 வருடங்கள் வித்யாசம். முன்னாடியே சிந்தித்து இருக்க வேண்டிய விஷயம். ஒன்னும் புரியல.


Ramesh
டிச 15, 2025 05:26

சொத்துக்கு ஆசைப்பட்டு வயதானவரை திருமணம் செய்தால் இப்படி தான் ஆகும் வாழ்க்கை


Siva Bala
டிச 15, 2025 01:47

வாழதெரியாதவனுக்கு தான் இங்க எல்லாம் கிடைக்குது. வாழ்கைய புரிஞ்சவனுக்கு ஏதும் கிடைக்குறது இல்ல. சின்ன வயசுலயே பெத்தவ இல்லாதவனுக்கு தான் தெரியும் வாழ்க்கை துணையோட அருமை. இருவர் ஒரு உயிராய், உணர்வாய் வாழ்வது தான் வாழ்க்கை. இங்க பலருக்கு அது புரிவதில்லை, அழகு,பணம் இவை இரண்டையும் வைத்து துணையை தேடாதீர்கள் குணத்தை புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.


NeelaXanthum
டிச 14, 2025 21:10

பெண் கருத்தடை சிகிச்சையை மறுமாற்றம் செய்வது கடினம் இல்லை. நீங்கள் உங்கள் கணவரிடம் ஒருமுறை தெளிவாக பேசி அவர் பதில்களை சரியாக வார்த்தைக்கு வார்த்தை குறித்து வைத்துக்கொள்ளவும். உங்கள் நிதி நிலைமைகளை சரிவர ஆராய்ந்து எழுதி வைத்துக்கொள்ளவும். எல்லா சொத்தும் அவர் முதல் மனைவிக்கு கொடுத்து விட்டால் உங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது. அதனால் அவர் உயிருடன் இருக்கும் போதே எப்படி வெளியேறுவது என்று பாருங்கள். அதே வீட்டில் இருந்து கொண்டு இந்த போராட்டம் செய்ய முடியாது. சொத்துக்காக திருமனம் செய்வது போன்று அறிவுகெட்ட திட்டம் வேறு எதுவும் இல்லை. அப்படி செய்யும் போது, குறைந்தபட்சமாக நகை நட்டு என்று ஏதாவது சேர்த்து வைத்துக்கொள்ளும் சாமர்த்தியம் இருக்க வேண்டும். சரி, அதுவும் இல்லை என்பதால், ஒரு நல்ல வக்கீலை பார்த்து முதலில் விளக்கி பாருங்கள். நீங்கள் எழுதி வைத்துக்கொண்ட குறிப்புகளோடு சந்தியுங்கள். அவர் கையை விரித்துவிட்டால், வீட்டில் நேரடியாக சண்டை போட்டு ஆர்பாட்டம் செய்ய தயாராகவும்.