அன்புள்ள அம்மாவுக்கு - நான், 24 வயது பெண். பட்டதாரி. சிறு வயதிலிருந்தே என் தாய் மாமனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படித்து முடித்து வெளியூர் கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக சேர்ந்து விட்டார். அவருக்கும், எனக்கும் திருமணம் செய்து வைக்க, வீட்டு பெரியவர்கள் முடிவு செய்தனர். என் அம்மாவுக்கும், தன் தம்பியே தனக்கு மருமகனாக வருவதில் சந்தோஷம். கல்யாண பேச்சு ஆரம்பித்த போதே, இத்திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார், தாய் மாமா. பெற்றோரின் வற்புறுத்தலாலும், என் பிடிவாதத்தாலும், எனக்கும், அவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆனதிலிருந்து என்னுடன் பேச மாட்டார். வெளியூர் வேலையை காரணம் காட்டி, அவர் பணிபுரியும் ஊரிலேயே தங்கி விடுவார். வார இறுதி நாட்களில் மட்டும் வேண்டா வெறுப்பாக வீட்டுக்கு வந்து செல்வார். அவரிடம் படிக்கும் ஒரு மாணவியை தான் அவர் காதலித்ததாகவும், அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் அவ்வப்போது கூறி, புலம்புவார். 'அப்பெண், தற்சமயம் மேற்படிப்புக்காக வேறு ஊருக்கு சென்றிருப்பதாகவும், அதன்பின் தனக்கு சமமான கல்வி தகுதியை பெற்று விடுவாள். இன்னும் அப்பெண் எனக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறாள். நீ சம்மதித்தால் அவளை திருமணம் செய்து கொள்வேன்...' என்கிறார், என் கணவர். என் அம்மாவிடமும் இதையே கூறியுள்ளார். திருமணமானதிலிருந்து நாங்கள் இருவரும் வெளியே எங்கும் சென்றதில்லை. எனக்கு வேண்டியவைகளை வாங்கிக் கொடுப்பார். நான் சமைப்பதை சாப்பிட்டு சென்று விடுவார், அவ்வளவு தான்! இப்படியொரு திருமண வாழ்க்கை தேவையா என்று நினைத்து, 'அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள சம்மதம்...' என்று எழுதி கொடுத்து விட்டேன். அதிலிருந்து, என் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். பிரியமாக நடந்து கொள்கிறார். பெரியவர்களிடமும், 'நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால், இவளையும் விட்டு விட மாட்டேன். இருவரையும் நன்றாக பார்த்துக் கொள்வேன்...' என்று உறுதியளித்துள்ளார். என் வீட்டினரும் அவரது சந்தோஷமே முக்கியம் என்று சம்மதம் தெரிவித்து விட்டனர். ஆனால், என் பிடிவாதத்தால் தான் எங்கள் இருவரது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டதாக கருதுகிறேன். அவருடன் முகம் கொடுத்து பேச முடியவில்லை. அந்த பெண்ணின், மொபைல் போன் எண் என்னிடம் உள்ளது. அவளிடம் பேசக்கூடாது என்று சொல்லி விட்டார், கணவர். என் வாழ்க்கையில் இன்னொருத்தருக்கு பங்கு கொடுக்க முடியாமல் தவிக்கிறேன். நான் என்ன செய்யட்டும் அம்மா ?
- இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு - நெருங்கிய உறவுக்குள் மணம் முடிக்காதீர் என்ற கோஷம் வலுக்கிற காலம் இது. இன்னும் பத்தாம்பசலியாகவே இருக்கிறீர்களே! தாய் மாமன் என்பவர் ஆண் வேஷம் போட்ட, அம்மா. பொதுவாக தாய் மாமன்கள் குறைந்தபட்சம், 15 வயது கூடியவர்கள். வயது காரணமாக அதிகாரத் தோரணை மிக்கவர்கள். உன் தாய் மாமன் ஏற்கனவே, ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். அப்புறமும் என்ன அவசியத்திற்கு உன்னை மணந்து கொள்ள உன் தாய் மாமன் ஒப்புக் கொண்டார்? இரட்டைக் குதிரை சவாரி செய்ய உன் தாய் மாமன் சபலபட்டு விட்டார். 'நம் முறைப்பெண் தான் நம் மனைவி அவளிடம் சிறு ஒத்துழையாமை இயக்கம் நடத்தி, இரண்டாம் கல்யாணம் செய்து கொள்வோம்...' என, குயுக்தி கணக்கு போட்டு விட்டார் போலிருக்கு, உன் தாய் மாமன். நீ ஏதோ தியாகம் செய்வதாக தாய் மாமனின் இரண்டாம் கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டாய். இது, ஒட்டகத்திற்கு கூடாரத்தில் சிறு இடம் கொடுப்பதுபோல. மெதுமெதுவாக ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைந்து, முழு கூடாரத்தையும் ஆக்கிரமித்து விடும். புதிதாக வரும், சக்களத்தி உன்னை விலையில்லா வேலைக்காரி ஆக்கி விடுவாள். உன் தாய் மாமன் நல்லவர் இல்லை. நல்லவர் என்றால் உன்னுடன் திருமணமான பிறகு காதலியிடமிருந்து பிரியாவிடை பெற்று விலகி இருப்பார். இரண்டாம் திருமணத்திற்கு நீ சம்மதித்தவுடன் உன் மீது அன்பு பாராட்டுகிறார் என்றால், அந்த அன்பு போலித்தனமானது, நாடகத்தனமானது. உன் தாய் மாமன் தன் அக்காளும், அக்காள் கணவரும் தன் குடும்பத்தாரும், 'சென்டிமென்ட்' முட்டாள்கள் என்பதை தெரிந்து வைத்துதான் இந்த, கோடரி விளையாட்டு விளையாடியுள்ளார். உனக்கு, 24 வயதுதான் ஆகிறது. திருமணமாகி சில பல மாதங்கள் தான் ஆகின்றன. குழந்தை இல்லை. பட்டப்படிப்பு படித்திருக்கிறாய். உன் நரி மாமனை சட்டப்படி விவாகரத்து செய். விவாகரத்து ஆன பின், பாம்பு இடம் போனால் நமக்கென்ன, வலம் போனால் நமக்கென்ன? விவாகரத்துக்கு பின் முதுகலை பட்டம் படி. முதுகலை முடித்த பின் ஆசிரியர் பயிற்சி மேற்கொள். அதன்பின், 'டெட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெறு. அடுத்த மூன்று ஆண்டுகளில், நீ ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேரலாம். அதன்பின் ஆற அமர யோசித்து சரியான வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்ளலாம். திருமணம் என்பது, உத்தமபுத்திரன் படத்தில், சிவாஜிக்கு முகத்தில் போடப்படும் இரும்பு முகமூடியாக இருக்கக் கூடாது. பண்டிகையின் போது அணியும் கைவளையலாக இருக்க வேண்டும்-. தாய் மாமனின் மொபைல் போன் எண்ணை, 'பிளாக்' செய். அவன் காதலியிடம் மொபைல் போனில் பேசவே பேசாதே. அவள் எண்ணையும், 'பிளாக்' செய். உன் சிறப்பான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்! -
என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்