உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு, இருபத்து ஒன்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இளைஞன் நான். வீட்டில் கடைக்குட்டி. மற்ற அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. எம்.ஏ., பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் வேலைக்காக முயற்சி செய்தேன், கிடைக்கவில்லை. நண்பர் மூலமாக வங்கிப் பணியில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. சம்பளம் குறைவாக இருந்தாலும், வாழ்க்கையை முன்னேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அரசு வேலைக்கும் தொடர்ந்து படித்து வருகிறேன். எந்தவித தீய பழக்கமும் இல்லை. சிறுவயதில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக தலைமுடி உதிர்ந்து விட்டது. அதைப் பற்றிய மன வருத்தம் எனக்குள் உள்ளது. இருந்தாலும், நல்ல வாழ்க்கை வரும் என்ற நம்பிக்கையை விடவில்லை. நான் விரும்பும் பெண், வீட்டின் முதல் பெண். வயது, 29. இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, அரசு வேலையில் இருக்கிறாள். என்னைப் பற்றி தெரிந்தே என்னை காதலிக்கிறாள். நானும், அவளும் ஒரே ஊர், தெரு, ஒரே ஜாதி. ஒரே ஜாதியில் உட்பிரிவு மட்டும் வேறு வேறு. ஆனால், அவள் வீட்டில், என்னுடைய ஜாதி உட்பிரிவு, அரசு வேலையில் இல்லாதது, அவள் என்னை விட, நான்கு மாதம் பெரியவள் போன்ற விஷயங்களை காரணமாக்கி தடை போடுகின்றனர். அவளின் பெற்றோரும், அவளது உடன் பிறந்த தங்கையும், எங்கள் விஷயத்திற்கு பல எதிர்மறை கருத்துகளை அவளிடம் கூறி, மிகுந்த வலிகளை ஏற்படுத்துகின்றனர். வீட்டிலும், சொந்தத்திலும் பெரிய ஆதரவில்லாத நிலையில் இருக்கிறாள், என் காதலி. சிறுவயது தோழியே வாழ்க்கை துணையாக அமைந்து விட்டால், வாழ்க்கை நன்றாக இருக்கும் அல்லவா! நான் காதலிக்கும் பெண்ணுக்கும், எனக்கும், தனிப்பட்ட முறையில் நல்ல புரிதல் உள்ளது. ஆனால், திருமணம் என்ற விஷயம் பேசப்படும் போதெல்லாம் மனக்கசப்பும், வாக்குவாதமும், முரண்பாடுகளும் தொடர்ந்து வருகின்றன. என்னை, வேறு வேலைக்கு முயற்சி செய்ய சொல்கிறாள். தலையில் முடி வளர, மருத்துவர் ஆலோசனை பெற சொல்கிறாள். 'நீ நன்றாக படிச்சிருந்தா, இப்போ அரசு வேலையில் இருந்திருப்பாய்; நமக்கு கல்யாணமும் நடந்திருக்கும்...' என்றும் கூறுகிறாள். அவளின் பெரிய எதிர்பார்ப்பு, நானும் அரசு வேலையில் இருந்தால், அவள் வீட்டில் பேச எளிதாக இருக்கும் என்பதே. என்னுடைய தோற்றம் பற்றிய அவளது சில வார்த்தைகள் எனக்கு, மன ரீதியாக அதிக வலியைத் தருகின்றன. 'திருமண நேரத்தில் தலைமுடி இருந்தால் நல்லாருக்கும், வெளியே சென்றால் மற்றவர்கள் எப்படி பார்ப்பர்...' என்றும் கேட்கிறாள். நானும், நல்ல வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தவுடன் மாற தயாராக இருக்கிறேன். இந்த சூழ்நிலையில், அவளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது நல்ல வார்த்தைகளும், ஆதரவும், ஊக்கமும் மட்டுமே. அதுவே, என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். ஆனால், அவளது சில வார்த்தைகள் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 'இந்த தனியார் பணியிலேயே இருந்து, இந்த கல்யாணம் நடந்தாலும், அரசு வேலை வரும் வரை நான் திருப்தியாக இருக்க மாட்டேன்...' என்றும் கூறுகிறாள். தனிப்பட்ட முறையில் அவளுக்கு பிரச்னை இல்லை; ஆனால், குடும்பம் என்று வரும் போது, அவள் யோசிக்கிறாள். நானும், அவள் குடும்பத்துக்கு எதிரானவனும் இல்லை. மிகுந்த மனச் சுமையுடன் இருக்கிறேன். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் ஆலோசனை எங்கள் இருவருக்கும் ஒரு தீர்வை தரும் என்று நம்புகிறேன். இப்படிக்கு, உங்கள் மகன். அன்பு மகனுக்கு, உன் பிரச்னைகளை புரிந்து கொண்டேன். முடி உதிர்வை தடுக்க முட்டை, மீன், கீரை, பேரீச்சை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம். ரோஸ்மேரி தலை மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம் குறைக்கலாம். வாரம் ஒரு முறை, 'ஹேர் மாஸ்க்' பயன்படுத்தலாம். தேவையான நீர் அருந்துதலும், போதுமான துாக்கமும் வேண்டும். நீ, எதாவது ஒரு, 'கோச்சிங் சென்டர்' மூலம், பயிற்சி பெற்று பொதுத்துறை வங்கிகள் நடத்தும் அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எழுதலாம். நீ, ஐ.பி.பி.எஸ்., எஸ்.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்வுகள் எழுதலாம். சரி, இப்போது உன் காதலுக்கு வருவோம்... உன் காதலிக்கு ஒரு மறைவான உள்நோக்கம் இருக்கிறது. அவளுக்கு குறைந்தபட்சம் பொருளாதார பாதுகாப்பும், புற அழகும் வருங்கால கணவரிடம் தேவை. 'உனக்கு தலையில் முடி இல்லை... உனக்கு தலையில் முடி இல்லை...' என, அவள் புலம்புவது கொஞ்சநஞ்சம் இருக்கும் உன் தலைமுடிகளை உதிர செய்து விடும். அவளின் நிர்பந்தத்திற்காக, நீ தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க இயலாது. உன் காதலி எந்த காலத்தில் இருக்கிறாள்? எனக்கு தெரிந்த, தலைகேசம் முற்றிலும் இழந்த இளைஞர்கள் தத்தம் காதல் மனைவிகளுடன் சந்தோஷ வாழ்க்கை வாழ்கின்றனர். என்னைக் கேட்டால் இந்த பெண்ணின் காதல் உனக்கான நிரந்தர பின்னடைவே. அவளுடன் சுமூகமாக பேசி, பிரிந்து விடு. பிரிந்த பின் நிம்மதியாக எந்த அக, புற நிர்பந்தமும் இல்லாமல், வங்கித்தேர்வுகள் எழுது. பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து, அமைதி பெறு. வாழ்த்துகள்! -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ragupathi
மே 02, 2026 15:24

நல்ல ஆலோசனை. அந்த பெண்ணை அவர் வீட்டில் இது போல் பேச தூண்டுகிறார்கள். விடுவதே நல்லது.


BALA
மே 02, 2026 13:16

உங்கள் பதில் அருமை. பாராட்டுக்கள்.


Anantharaman Srinivasan
ஏப் 30, 2026 12:01

இவள் காலம் முழுவதும் ஒத்துவாழ சரிபட மாட்டாள். விலகி விடுவதே நல்லது.


BALA
மே 02, 2026 13:19

Yes


M Selvaraaj Prabu
ஏப் 28, 2026 19:09

எனக்கு தெரிந்த ஒரு சிறுமி. நல்ல அழகான தலை முடியுடன் இருப்பாள். ஒரு விசேஷத்திற்கு தலைக்கு பியூட்டி பார்லர் போய் ஹேர் கலர் செய்து கொண்ட பிறகு தலை முடி எல்லாம் கொட்டி விட்டது. அது போல இந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு பிறகு நடந்தால் என்ன செய்வாள்?


Anand
ஏப் 27, 2026 12:05

அவர் உங்களை முழு மனதாக காதலிக்கவில்லை என்றே தோன்றுகிறது. தேவையில்லாதவற்றை சொல்லி சொல்லி தானும் குழப்பி உங்களையும் குழப்பும் அவர் வாழ்நாள் முழுவதும் உங்களிடம் ஒத்துழைத்து செல்வாரா என்கிற கேள்வி எழுகிறது. எனவே மீண்டும் ஒருமுறை மனம் விட்டு பேசுங்கள் அதன்பிறகும் இதே பல்லவியை அவர் தொடர்ந்தால் உங்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு விலகி வேறு ஒரு நல்ல வாழ்க்கையை தேடிக்கொள்வதே சாலச்சிறந்தது.


gsak
ஏப் 26, 2026 22:41

every women will try secure their feature only one thus she can be convinced for his look otherwise it is better choice for him


NeelaXanthum
ஏப் 26, 2026 17:44

உங்களுக்கு வசதி இருந்தால் தலை முடி, பல் அழகு என்று எதுவும் குறை தெரியாது. இவரை அந்த பெண் காதலிக்கவும் இல்லை. ஊர் இப்படி சொல்லும் அப்படி சொல்லும் என்று சொல்வது பொய். அந்த பெண் சொல்வது எல்லாம் அந்த பெண்ணின் opinions தான். திடீர் என்று கூடை முடி வளர்த்துக்கொண்டு கூடை கூடையாய் பணம் சம்பாதித்தாலும் கூடிய விரைவில் இந்த பெண்ணுக்கு வேறு ஒரு குறை கண்ணில் படும். இப்போதாவது தெரிந்து விலகவும். Early baldness எல்லாம் பரம்பரையாக வருவது. தலையில் wig வைத்துக்கொள்ளலாம். இல்லை பல ஆயிரம் கொடுத்து hair follicle replacement செய்து பார்க்கலாம் இதற்கு பணம் இருக்கும் பட்சத்தில் அந்த பெண் குறை சொல்லவே மாட்டாள். ஆனால் இந்த இளைஞர் தன்னை groom செய்து கொள்வது மிக அவசியம். உடற் பயிற்சி செய்து உருவாகும் கட்டு மஸ்தான ஆரோக்கியம் எந்த பெண் கண்ணையும் கட்டி விடும். இந்த இளைஞருக்கும் தன்னம்பிக்கை வரும். சுய முன்னேற்றத்தை மனதில் நிறுத்தினால் இந்த மாதிரி கேள்வி கேட்க தோன்றாது. ஆராய்ந்து பார்க்காமல் பெண்ணை தேர்ந்து எடுத்துவிட்டோம் என்று தெரியும்.


Natarajan Ramanathan
ஏப் 26, 2026 15:12

யாராவது ஒருவர் அரசு பணியில் இருந்தால் போதாதா? கணவன் மனைவி இருவரும் அரசு பணியில் இருப்பதை தடைசெய்தால் நல்லது.


raman
ஏப் 26, 2026 11:08

நல்ல அட்வைஸ்


sree vidhya
ஏப் 26, 2026 10:21

Andha ponnu support pannanum ... Summa discourage pannuna tension than agum. Avanga than government job la irukanglea. Evlo Peru private job la Nalla than irukanga. Mudi illatha pa patthu thanea love pannunanga ippo Enna achu. She stressed U too much. Pesi parunga avanga support pannuna Nalla job seekram kedaikuma. Manam nimmathiya iruntha than ellamea nallatha nadakum. Ennoda friends 3 Peru hair treatment pannirukanga avanga hair vachea pannirukanga ... Result Nalla than iruku .. ellarumea ungla vida periyavanga than.Nenga virupam iruntha doctor kitta ketutu try pannunga bro.