உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு, நான், 48 வயது பெண். எனக்கு ஒரு தம்பி உள்ளான். என் கணவர் வயது, 55. காவல் துறையில் உதவி ஆய்வாளர். எங்களுக்கு மூன்று பெண்கள். மூத்த இரு பெண்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில், என் மூத்த வயதுடைய ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார், கணவர். அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகனும் இருக்கிறான். பெண்களின் படிப்பு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணமில்லாமல் தவித்து, என் அப்பாவின் ஆதரவு இருந்ததால், ஓரளவு சமாளித்தேன். என் இரு மகள்களின் திருமணத்தை கூட, என் அப்பாவின் ஆதரவில் தான் நடத்தி முடித்தேன். மகள்களின் திருமணத்துக்கு கூட, விருந்தினர் போல் தான் கலந்து கொண்டார், கணவர். அவ்வப்போது அப்பெண் வீட்டுக்கு சென்று வந்தவர், இப்போது, நிரந்தரமாகவே அப்பெண்ணுடனே தங்கி விட்டார். அப்பெண்ணின் கணவர், என் கணவரின் மிரட்டலுக்கு பயந்து, எங்கோ சென்று விட்டாராம். தன் குடும்பத்துக்கு எதுவும் செய்யாமல், அடுத்தவர் மனைவிக்கும், அவள் மகனுக்கும் வாரி வழங்கும் கணவரைப் பற்றி, அவரது உயரதிகாரிகளிடம் புகார் செய்தும் பயனில்லை. கடைசி பெண்ணின் படிப்பு முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. எங்களுக்கு சொந்தமாக வீடு மட்டுமே உள்ளது. சேமிப்பு எதுவும் இல்லை. மூன்றாவது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். திருமணமாகி போன இரு மகள்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் பிறந்த வீட்டு முறை ஏதும் செய்ய முடியாமல் தவித்து வருகிறேன். கணவரின் பணி ஓய்வுக்கு பின் கிடைக்க வேண்டிய பண பலன்களை அப்பெண்ணுக்கே கொடுக்க போவதாக கூறுகிறார். மகள்களுக்காக எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறேன். என் அப்பாவுக்கும் வயதாகி விட்டது. தம்பியை தொந்தரவு செய்யக்கூடாது என்பது என் எண்ணம். அவனுக்கும் திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. நான் என்ன செய்யட்டும் அம்மா. — இப்படிக்கு, உங்கள் சகோதரி. அன்பு சகோதரிக்கு, உன் புகாரின் அடிப்படையில், உன் கணவர் மீது அவரது உயரதிகாரிகள் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, உன் கணவரின் குற்றத்தில் அவர்களும் உடந்தை என்பதை அப்பட்டமாக்குகிறது. தொடர்ந்து முயற்சித்தால், உன் கணவரின் கோட்டையை துவம்சம் பண்ணி விடலாம். உள்ளூர் மேலதிகாரி (ஆய்வாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர்) நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நேரடியாக அதற்கு அடுத்த நிலையில் உள்ள உயர் அதிகாரிகளை அணுகலாம். உன் கணவரின் கள்ளக்காதல் குறித்த ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் இருந்தால், அவற்றை புகார் கடிதத்துடன் இணைத்து, காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கலாம். உடன் ஒரு பெண் வக்கீலை அழைத்து செல்லலாம். நீ மாநகரப் பகுதியில் இருந்தால், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கலாம். அல்லது மாநில அளவில் காவல்துறை தலைவர் டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள புகார் பிரிவு மூலம் உன் புகாரை பதிவு செய்யலாம். காவல்துறையினரின் முறையற்ற நடத்தைகள் குறித்து விசாரிக்க, தமிழ்நாடு காவல் புகார் ஆணையம் இருக்கிறது. மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் இங்கு புகார் அளிப்பது பலன் தரும். cmhelpline.tnega.org இணையதளம் அல்லது 1100 எண்ணை தொடர்புகொண்டு, உன் புகாரை பதிவு செய்யலாம். புகார் நேரடியாக தலைமை செயலக பார்வைக்கு போகும். உடனடி நடவடிக்கை எடுப்பர். எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஒரு வழக்கறிஞர் மூலம் மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ, 'ரிட்' மனுதாக்கல் செய்து, உன் கணவரின் குற்ற நடத்தையை விசாரிக்க செய்யலாம். குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து விவாகரத்தும், ஜீவனாம்சமும் பெறலாம். கள்ளக்காதல் குற்றவியல் குற்றமல்ல என்றாலும், விவாகரத்து பெற வலுவான ஆதாரமாக அது இருக்கும். தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978ன்படி, குடும்பம் என்பதில் சட்டப்பூர்வமான திருமணம் செய்து கொண்ட மனைவி மட்டுமே அடங்குவர். ஓர் அரசு ஊழியர், தன் குடும்ப ஓய்வூதியத்திற்கு சட்டப்பூர்வமான மனைவியை விடுத்து, கள்ளக்காதலியை வாரிசாக நியமிக்க முடியாது. சும்மா மிரட்டுகிறார் உன் கணவர். கணவரிடமிருந்து, ஜீவனாம்சம் கோரி, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா பிரிவு 144ன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அவர் கள்ளக்காதலியை முறையாக திருமணம் செய்தால், அது இருதார மணம் என்ற குற்றத்தின் கீழ்வரும். அதற்கு, ஏழு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார். கள்ளக்காதல் அல்லது திருமணபந்தம் மீறிய உறவு என்பது அரசு ஊழியருக்கு பொருத்தமற்ற நடத்தை என, கருதப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பர். தற்காலிக பணி நீக்கம் அல்லது பணியிடமாற்றம் நடக்கும். பயப்படாதே. துணிந்து செயல்படு... வெற்றி உனதே. — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

NeelaXanthum
மே 07, 2026 17:08

இது காலம் காலமாக இருக்கிற அடிமை நிலை - பெண்களுக்கு சௌகரியம் கணவன் ஒழுங்காக இருக்கும் வரை. அது என்ன எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு திருமணம் செய்து இந்த சீர் அந்த சீர் செய்வது? அந்த மகள்கள் படித்து வேலைக்கு போய் self sufficeint ஆக அல்லவா இருக்க வேண்டும்? ஆண் மக்கள் என்றால் இந்த விவாதம் வருமா? மூன்றாவது பெண்ணாவது புத்திசாலித்தனம் மற்றும் பொறுப்போடு படிப்போடு வேலை எப்படி செய்வது என்று பார்க்க வேண்டும். இந்த அம்மா வுக்கு 19th நூற்றாண்டு வசதி வேண்டும் 21st நூற்றாண்டின் உரிமைகளும் வேண்டும். இந்த அம்மாவுக்கு உதவி செய்யும் தந்தையையும் குறை சொல்லவேண்டும். கேடு கேட்ட கணவனின் போட்டோவுக்கு மாலை போட்டு வீட்டில் மாட்டி அவன் செத்து விட்டான் என்று நினைத்து செயல் பட வேண்டும். சட்டப்படி விவாக ரத்து வாங்கி இனிமேலாவது சொந்த காலில் நிற்கும் வழி பார்க்கவும்.


Rathna
மே 06, 2026 11:29

இதனால் தான் சில காவல் துறை நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அவர்கள் செய்த பாவங்களுக்கு, பல குடும்பங்களை கெடுத்த பாவங்களுக்கு சரியான பாவ பலன்களை அனுபவிக்கிறார்கள்.


V.Rajan
மே 06, 2026 08:41

55 வயதில் கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு கொண்டுள்ளார் என்று கூறினீர்கள். குற்றவாளி அவர் மட்டுமல்ல முக்கிய குற்றவாளி நீங்களாகத்தான் இருக்கும் கடைசி காலத்தில் ஆண்களுக்கு அரவணைப்பு தான் தேவை. அதை உங்களிடம் எதிர்பார்த்திருந்த நிலையில் கிடைக்காமல் இருந்து இருக்கலாம் . அதனால் அதை தேடி அவர் வேருடன் சென்றிருப்பார். அதனால் நீங்கள் நன்றாக யோசித்து பார்த்தால் நன்மை பயக்கும்.


Keshavan.J
மே 04, 2026 14:02

இந்தியாவில், திருமணத்திற்குப் புறம்பான உறவு இனி ஒரு குற்றச் செயல் அல்ல அதாவது, ஏமாற்றியதற்காக மட்டுமே ஒரு அதிகாரியை சிறையில் அடைக்க முடியாது, இருப்பினும், தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் புறக்கணித்துவிட்டு திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபடும் ஒரு காவல்துறை அதிகாரி கடுமையான சட்ட விளைவுகளையும் துறை ரீதியான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும். 1. துறை ரீதியாகப் புகார் அளித்தல் மிகவும் பயனுள்ளது ஒரு காவல்துறை அதிகாரியாக, அவர் உயர் ஒழுக்க நடத்தையைக் கோரும் சேவை விதிகளுக்குக் கட்டுப்பட்டவர். எங்கு புகாரளிப்பது: காவல் கண்காணிப்பாளர் SP, காவல் துணை ஆணையர் DCP அல்லது அந்த மாவட்டத்தின் காவல் புகார்கள் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாகப் புகாரைச் சமர்ப்பிக்கவும். உள்ளடக்கம்: அவரது கள்ள உறவு மற்றும் குடும்பத்தைப் புறக்கணித்ததற்கான ஆதாரங்களை வழங்கி, அவரது நடத்தையை விவரிக்கவும். நடவடிக்கை: உயர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கலாம், அவரைப் பணியிடை நீக்கம் செய்யலாம் அல்லது "ஒரு அரசு ஊழியருக்குப் பொருந்தாத நடத்தை"க்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். இணையவழி விருப்பம்: நேரடியாகப் புகார் அளிக்க மாநில காவல்துறைத் துறையின் இணையதளத்தைப் பயன்படுத்தவும். அவர் நிதி உதவி வழங்கவில்லை என்றால், உணவு, தங்குமிடம் மற்றும் கல்விக்கான நிதியைப் பெறுவதற்கு நீங்கள் ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்யலாம். சட்ட நடவடிக்கை: குடும்ப நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125-இன் கீழ் தற்போது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா - பி.என்.எஸ்.எஸ்-இன் பிரிவு 144-ஆல் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளது ஒரு மனுவைத் தாக்கல் செய்யுங்கள். இடைக்கால ஜீவனாம்சம்: வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ​​உடனடி, தற்காலிக ஜீவனாம்சத்தைக் கோரலாம். குழந்தைகள்: திருமண தகராறுகளைப் பொருட்படுத்தாமல், தனது குழந்தைகளைப் பராமரிப்பது தந்தைக்கு சட்டப்படி பொறுப்பாகும்.


Rangavadivel R
மே 04, 2026 05:28

ஏன் இப்படி செய்கிறார்கள் சில ஆண்கள்? தினமலர் மேடம் சொன்னபடி சட்டப்படி போராடினால் வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்