உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு, நான், 28 வயது பெண். பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். என் அப்பா, சொந்தமாக, பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். என் அம்மா, இல்லத்தரசி. எனக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. துாரத்து சொந்தம் தான், என் கணவர். வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கு, ஒரு தங்கை; கல்லுாரியில் படிக்கிறாள். என் கணவரும், நாத்தனாரும், நல்ல நிறமாக, மிக அழகாக இருப்பர். இதைப்பற்றி என் மாமியாருக்கு பெருமை அதிகம். நான், அழகாக இருந்தாலும், மாநிறம் தான். இது, என் மாமியாருக்கு மிகப்பெரிய குறை. திருமணமான புதிதில், வீட்டுக்கு வரும் அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும், 'ராஜகுமாரன் போல் அழகாக இருக்கும் உன் பையனுக்கு, இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைச்சுட்டியே...' என்று என் மாமியாரிடம் கிசுகிசுப்பர். இதை, கண்டும், காணாமல் இருந்தாலும், இரவு என் கணவரிடம் சொல்லி வருத்தப்படுவேன். என் கணவரோ, இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார். என் மீது மிகவும் அன்பாக, ஆறுதலாக இருப்பார். ஆனால், என் மாமியார், இந்த விஷயத்தையே பெரிதுபடுத்தி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், குத்திக் காட்டுவதுடன், முன்பெல்லாம் எனக்கு பின்னால் பேசியவர், நாளடைவில் என் எதிராகவே, 'என் பையனுக்கு, நீ எல்லாம் பொருத்தமா? எல்லாம் விதி...' என்பார். என்னை பற்றி தெரிந்து தானே பெண் கேட்டு வந்தனர். அப்போது, என் நிறம் தெரியவில்லையா? வீட்டுக்கு வருபவர்களிடமும் இதையே பேச, அவர்களும், 'உன் மகனுக்கு ஊர் உலகத்துல பெண்ணா கிடைக்கவில்லை?' என்று துாண்டி விடுவர். என் நாத்தனாருடன் ஒப்பிட்டு பேசியும், மட்டம் தட்டுவர். இப்படி இந்த பேச்சே சுற்றி வர, கொஞ்சம் கொஞ்சமாக, எனக்கு தாழ்வு மனப்பான்மை வர ஆரம்பித்தது; அப்படி பேசுபவர்கள் மீது வெறுப்பும் வளர்ந்தது. இதிலிருந்து மீள, எனக்கு தெரிந்த தையல் தொழிலை வீட்டிலிருந்தே செய்ய ஆரம்பித்தேன். அக்கம்பக்கத்தினருக்கு ஜாக்கெட் தைத்து கொடுத்தேன். என்னிடம் துணி தைக்க கொடுக்க வரும் பெண்களில் ஒருவர், என் மாமியாரிடம், 'உன் பையனுக்கு என் மகளை கட்டித் தர்றேன்னு சொன்னேனே... என் பொண்ணு அழகுக்கு இவள் ஈடாவாளா?' என்று பேச, கோபம் தலைக்கேறி, 'உனக்கு துணி தைத்து தர முடியாது வெளியே போங்க...' என்று கத்தி விட்டேன். 'கல்யாணமாகி இரண்டு வருஷமாச்சு. ஒரு குழந்தை பிறக்கல. வாய் மட்டும் நீளுது...' என்று மாமியார் என்னை திட்டியதோடு, மாலை என் கணவர் வந்ததும் போட்டுக் கொடுத்து விட்டார். 'நான் தான் பொறுமையாக இருக்க சொன்னேனே... வந்தவர்களிடம் இப்படியா இங்கிதம் இல்லாம பேசுவே...' என்று கணவர் கடிந்து கொள்ள, வாழ்க்கையே வெறுத்து விட்டது. அடுத்தவர் குடும்பத்தில் நுழைந்து, கணவன் - மனைவியின் ஜோடி பொருத்தத்தை அளக்கும் வேலை வெட்டி இல்லாதவர்களையும், எப்போதும் என்னை குறை கூறும் மாமியாரையும் சமாளிப்பது எப்படி? நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா. -இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு, பெண்களின் கருப்புநிறம் குறித்த தாழ்வுமனப்பான்மைக்கு பின் ஆழமான மனோதத்துவ மற்றும் சமூக காரணங்கள் உள்ளன. இது உலகளாவிய நிறவெறி ஆகும். பழங்காலத்திலிருந்தே வெள்ளைநிறம், அதிகாரம், செல்வம் மற்றும் உயர் அந்தஸ்துடன் தவறாக இணைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, வெள்ளை நிறம் மேலாதிக்கமாகவும், கருப்புநிறம், அடிமைத்தனமாகவும் சித்தரிக்கப்பட்டது. அந்த சிந்தனை இன்னும் தொடர்கிறது. இதனால், கருப்புநிற பெண்களுக்கு சுயமரியாதைக் குறைதல், மனஅழுத்தம் மற்றும் கவலை ஏற்பட்டு, உடல் உருவக் குறைபாடுகளில் சிக்கிக் கொள்கின்றனர். இந்திய பெண்களின் பொதுவான நிறம் மாநிறம். கோவிலிலுள்ள சிலைகள் சிவப்பு நிறத்திலா உள்ளன? பளபளக்கும் எண்ணெய் மின்னும் கருப்பு நிறத்தில்தானே சிலைகளின் முகங்கள் டாலடிக்கின்றன! உன் புகுந்த வீட்டுக்கு உன் செல்வ செழிப்பும், பட்டப்படிப்பும் தேவை. ஆனால், உன் அழகிய கருப்பு நிறம் வேண்டாமா? உன் வீட்டுக்கு வந்து உள்நோக்கத்தோடு அவதுாறு விமர்சனம் பண்ணும் உறவுக்கார, நட்புக்கார பெண்களை, 'லெப்ட்' கையால் புறந்தள்ளு. கோபப்படாதே. அதே நேரத்தில் அவர்களின் நெஞ்சில் தைக்குமாறு சில வார்த்தைகளை உதிர்... 'என்னை விமர்சிக்கும் நீங்கள் தயவுசெய்து உங்கள் முகங்களையும், உங்கள் பிள்ளைகளின் முகங்களையும் கண்ணாடியில் பாருங்கள். நான் எப்படி இருக்கிறேன் என, உங்களிடம் நானும், என் புகுந்த வீடும் உருவசான்றிதழ் கேட்டோமா? வெந்த நெல் முளைக்காது; திருமணமான என் கணவருக்கு நீங்கள் வரன் பார்ப்பது வெட்டி வேலை...' எனக்கூறு. 'துணி தைக்க வரும் பெண்கள் தயவுசெய்து தேவையற்ற வார்த்தைகளை பேச வேண்டாம்!' என, ஒரு போர்டு மாட்டு. மாமியாரை கையாள்வது ஒருகலை. அது, எல்லா பெண்களுக்கும் வருவதில்லை. மாமியார் எதாவது துாஷணை வார்த்தைகள் பேசினால், மெலிதாக சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்று விடு. 'புருஷா... என் நிறம் பற்றி உனக்கு எதாவது அதிருப்தி இருந்தால் சொல். விவாகரத்து செய்து கொள்வோம்...' என, சிரித்துக்கொண்டே கேட்டு, ஆழம் பார். வாலை சுருட்டிக் கொண்டு உன் காலடியில் தஞ்சமடைவான், உன் புருஷன். -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sriram Kannan
ஜூன் 11, 2026 07:35

கருப்புக்கு அலங்காரம் பண்ணி கண்ணால பாரு,சிகப்புக்கு அலங்காரம் பண்ணி செருப்பால அடின்னு அந்தகாலத்துல சும்மாவா சொன்னாங்க?


Rio
ஜூன் 08, 2026 18:32

ஆழம் பாரு என்பது தேவை ல்லாத அறிவுரை . இதை ஒரு ஆன் செய்தல் உடனே அவனை டிவோர்ஸ் பானு ன்னு சொல்லும் பொம்பளைங்க தான் அதிகம் . பொம்பளைங்க அட்வைஸ் சொல்ல முதிர்ச்சி பாத்தஆது... பொறாமை தான் அதிகம் இருக்கும் மகளை கூட அப்படி தான் பார்க்கும்


Anand
ஜூன் 08, 2026 17:13

தனிக்குடித்தனம் போவது தான் சிறந்த வழி. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.


Ganesun Iyer
ஜூன் 08, 2026 11:33

சகோதரியே.. தற்போதைய ஜனாதிபதி அவர்களின் பழைய புகைப்படங்களை பாருங்கள்.. கிராமத்து வாழ்க்கையிருந்து இன்று இந்திய நாட்டின் முதல் குடிமகள்.. உலகம் மதித்து முதல் மரியாதை பெரும் பெண்மணி.. குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டாமல் .. மதிக்காதவர்களை மிதித்தெழுந்து சமூகத்துக்கு உதவும்படி வேறு நல்ல வழியை தேடுங்கள்.


Anantharaman Srinivasan
ஜூன் 07, 2026 19:05

உன் மாமியார் என்னநிறம்..?


R SRINIVASAN
ஜூன் 07, 2026 17:22

துர்க்கைக்கு ஏழு நிறங்கள் உள்ளதாக துர்கா ஸூக்தம் சொல்கிறது. சூரியனில் சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு நிறங்களும் ,அக்னியில் எல்லோ,தங்கநிறம்,கருப்பு,சாம்பல் நிறம் இருப்பதாக சூரிய நமஸ்காரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நிறத்தை வைத்து பெண்ணை மட்டம் தட்டுவது தெய்வ குத்ரம் என்பது மக்களுக்கு புரியவில்லை. மஹாபாதத்தில் திரௌபதிக்கு கிருஷ்ணை என்று பெயர். காரணம் அவள் கருப்பு நிறம்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2026 09:57

உனது கணவரை இன்னமும் ஆழமாக லவ் பண்ணி பாருங்களேன்


Farmer
ஜூன் 07, 2026 08:36

Sad to hear these kind of reality in todays world....