அந்துமணி பா.கே.ப.,
கேஅலுவலகம் — மாலை 5:00 மணி... அலுவலக நேரம் முடிந்ததும், நண்பர்கள் அனைவரும், எழுத்தாள நண்பர் மகளின் பிறந்த நாள் விழாவுக்கு செல்வதற்காக குழுமியிருந்தனர். மறுநாள் நாளிதழில் வர வேண்டிய புகைப்படங்களுக்கான பட விளக்கங்களை வேகமாக எழுதிக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா. அருகில் அமர்ந்திருந்த குப்பண்ணா, 'ஓய் லென்சு, பிறந்த நாள் விழாவுக்கு நேரமாகவில்லையா?' என்றார்.'இன்னும் நேரமிருக்கேப்பா... நாம மெதுவா போகலாம்...' என்றார், லென்ஸ் மாமா.அவரது நோக்கம் என்னவென்று புரிய, மவுனமாக இருந்தேன், நான்.'பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் எப்படி வந்தது?' என்றார், ராமசாமி அண்ணாச்சி.'அதுவா...' என்று கூற ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்...'தமிழ் பண்பாட்டில், பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கிடையாது. இது ஒரு ஐரோப்பிய கலாசாரம். கி.பி., 1347ல், ஐரோப்பா கண்டத்தை ஒரு நோய் தாக்கியது. அது என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கொத்து கொத்தாய் மடிந்தனர், மனிதர்கள்.'இறந்தவர்களின் எண்ணிக்கை, 2.5 கோடி. ஒருவர், ஓர் ஆண்டு உயிரோடு இருப்பதே பெரிய செய்தியாக மாறியது. இதற்கு, 'பிளாக் டெத்' என்று பெயரிட்டனர். அதாவது, 'கறுப்பு மரணம்!''பல ஆண்டுகள் இதே நிலை தொடர்ந்தது. 'கடவுளுக்கு ஏற்ற பிள்ளைகளாக மக்கள் இருக்கவில்லை...' என, மதப்பிரசாரமும் நடைபெற்றது. கி.பி., 1984ல், பிரெஞ்சு பாக்டீரியாலஜிஸ்ட், எர்சின் என்பவர், இது, இறந்த எலியின் உடலில் இருந்து பரவும் நோய் என, கண்டறிந்தார். 'இவரது பெயரே அந்த நோய்க்கு, 'எர்சுனியா பெசுட்டிசால்' என்று வைக்கப்பட்டது. அதன் பிறகு, இதற்கு, 'பிளேக்' என பெயரிட்டனர். 'பிளேகா' என்ற லத்தீன் சொல்லுக்கு அடி, காயம் என்று பொருள். அதுவே, 'பிளேக்' என்றானது. 'இந்த நோயிலிருந்து தப்பி, ஓர் ஆண்டு முழுதுமாக உயிரோடு இருந்தவர்கள், தங்கள் பிறந்த நாளை கொண்டாட துவங்கினர். இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய வணிகர்கள் மூலமாக, பிறந்த நாள் கொண்டாடும் நோய், இங்கும் பரவி, இந்தியாவிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் துவங்கியது...' - என்று, கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.'ஓய்... பிறந்தநாள் விழாவுக்கு போனோமா, சாப்பிட்டோமா, வந்தோமான்னு இருக்கணும். அதை விட்டு, 'ப்ளேக்' நோய், அது இதுன்னு சொல்லி, 'மூடை' கெடுத்திட்டீங்களே...' என்று அங்கலாய்த்தார், லென்ஸ் மாமா.ப'வெளிநாட்டு வீதியிலே... - கிரீஸ் பயணக் கட்டுரை' என்ற நுாலில் எழுத்தாளர், ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், எழுதிய கட்டுரை இது:நம்ம ஊரில், நம் நாட்டில் ஏன், வெளிநாட்டில் கூட, நம்மை ஏமாற்ற பலர் காத்திருப்பர். அப்படி ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாய் காப்பாற்றப்பட்டேன். கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரில், சாக்ரட்டீஸ் சிறைபட்ட இடத்தை பார்க்க, எனக்கும், என்னுடன் வந்தவர்களுக்கும் ஆசை. நகர வரைபடத்தை பார்த்தபடி புறப்பட்டோம். வழியில் யாரிடமாவது கேட்கலாம் என்றால், அப்பகுதி மக்களுக்கு ஆங்கிலம் அறவே தெரியவில்லை.இருப்பினும், முயற்சியில் தளரவில்லை. வழியில் பொம்மைகள் விற்கும் கடைக்குள் நுழைந்து, சாக்ரட்டீஸ் பொம்மையைக் காட்டி, பலவித பாவனைகள் செய்து விசாரித்தோம். கடை உரிமையாளருக்கு புரியவில்லை. பொம்மையின் விலையையே திரும்பத் திரும்ப கூறினார். அப்போது, உள்ளே நுழைந்த ஒரு இளைஞன் சிரித்தபடி, 'என்ன வேண்டும்?' என்று ஆங்கிலத்தில் கேட்டான். 'சாக்ரட்டீஸ் அடைக்கப்பட்டிருந்த சிறையைக் காண வேண்டும்...' என்ற, எங்கள் ஆவலை அவனிடம் கூறினேன்.நீண்ட நாட்களாய் தனக்கும், அந்த ஆசை இருப்பதாகச் சொன்னவன், 'வாருங்கள்... எல்லாருமாக தேடுவோம்...' என்று கூடவே வந்தான். அவனும் வெளிநாட்டிலிருந்து வந்தவன் என்று எண்ணி, அவன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்று விசாரித்தேன். கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவன் தான். ஆனால், நீண்ட காலம் லண்டனில் இருந்து விட்டதால், ஏதென்ஸில் எந்த இடமும் தெரியாதென்றும், இந்த சாக்கிலாவது, சாக்ரட்டீஸ் சிறையை பார்க்க விரும்புவதாகவும் கூறி, எங்களுடன் வந்தான். கடும் வெயிலில், மலைப் பாதையில் நடந்து சென்றோம். வழியில் இருந்த குளிர்பான கடையில், குளிர்பானம் குடித்து விட்டு கிளம்பிய போது, எங்களுடன் வந்த அந்த இளைஞனை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள், அந்த கடைக்காரப் பெண். எங்களுக்கு ஏனென்று புரியவில்லை. அவர்கள் இருவரும் வாய் சண்டையில் மும்முரமாக இருக்க, எங்களை தனியே அழைத்து, ஆங்கிலத்தில் கிசு கிசுத்தார், பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞரான பவ்லோ என்பவர்.எங்களை அழைத்து வந்த இளைஞனுக்கு இதே வேலையாம். சாக்ரட்டீஸ் சிறையைக் காண வரும் வெளியூர்காரர்களிடம், இடத்தை காட்டுவதாக ஆசைகாட்டி அழைத்துப் போய், நடுக்காட்டில் மிரட்டி, பணம் பறிப்பது அவனுக்கு கை வந்த கலையாம். 'இப்படி கேவலமாகப் பிழைக்கிறாயே... உன்னால் இந்த நாட்டுக்கு அல்லவா கெட்டப் பெயர்...' என்று, அவனை, அவர்கள் மொழியில் திட்டியிருக்கிறாள், அந்த பெண். எங்களிடம் அவனைப் பற்றி கூற முடியாமல் தவித்த அந்த பெண்மணியின் நிலையையும் விவரித்தார், பவ்லோ.பவ்லோ வடிவில் தெய்வம் வந்து, பெரிய இக்கட்டிலிருந்து காத்ததாக எண்ணி நெகிழ்ந்தோம். பகலிலேயே கையில் விளக்கை வைத்துக் கொண்டு, மனிதனை தேடிய, சாக்ரட்டீஸ் வாழ்ந்த மண்ணில் இப்படிப்பட்ட மனிதர்கள், மாக்களாய் வாழ்ந்து வருவதை நினைத்து வருந்தினேன்.எங்களிடம் பேசியபடி வந்த பவ்லோ கூறியதை, அப்படியே இங்கே கூறுகிறேன்...'பாரம்பரிய பெருமைகளை உடைய நாடுகள், கிரீஸ், இத்தாலி மற்றும் இந்தியா.'இதில், கிரேக்கர்கள் அந்த பெருமையையும் மறந்து விட்டு, புதிதாய் எதிலும் முன்னேறாமல் சுகவாசிகளாய் இருக்கின்றனர்.'பழைய பெருமையை மட்டுமே பேசிக் கொண்டு மிதப்பில் இருக்கின்றனர், இத்தாலியர்கள். ஆனால், இந்தியா மட்டுமே பாரம்பரியத்தில் பூரித்துக் கொண்டும், புதிய வேகத்தில், யாருக்கும் சளைக்காமல் முன்னேறி வரும் நாடாக இருக்கிறது...' என்று, இந்தியாவை புகழ்ந்தார், பவ்லோ.ஒரு வெளிநாட்டுக்காரர், நம்மை விட, நம் நாட்டை பற்றி நன்றாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணி பெருமைப்பட்டேன்.- என, எழுதியுள்ளார்.நம்மூரிலும், இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகள் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை வருத்தத்துடன், பதிவு செய்ய வேண்டியுள்ளது. கிரீஸ் நாட்டு, குளிர்பான கடை பெண் போல், நாமும், நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரை, இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களிடமிருந்து, காக்க முயற்சிக்க வேண்டும். மேலும், நம் நாட்டின் அருமையையும், பெருமையையும், வெளிநாட்டினர் சொல்லித்தான் தெரிய வேண்டியிருக்கிறது. வாசகர்களே... உங்களது கருத்து என்ன? எனக்கு எழுதுங்களேன்!