அந்துமணி பா.கே.ப.,
பா - கே என்னுடைய, தீவிர வாசகியும், கல்லுாரி மாணவியுமான ஒருவர் என்னை சந்திக்க, அலுவலகம் வந்திருந்தார். கல்லுாரி, 'புராஜெக்ட்' விஷயமாக ஏதாவது தகவல் வேண்டி வருவது வழக்கமாதலால், 'இப்ப, என்ன தகவல் வேண்டும்?' என்று கேட்டேன்.'வித்தியாசமான தபால் தலைகளை சேகரித்து, அதைப்பற்றி குறிப்புகள் எழுத சொல்லி இருக்கின்றனர். உங்க ஆபீசுக்கு தான் நிறைய, 'லெட்டர்ஸ்' வருமே. அதில் ஒட்டியிருக்கும் தபால் தலைகள் எனக்கு வேண்டும்...' என்றார். தபால்கள் பிரிக்கும் பகுதிக்கு அவரை அழைத்து சென்று, அன்றைக்கு வந்த தபால் உறைகளில் இருக்கும் தபால் தலைகளை பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன்.சிறிது நேரத்தில், திரும்பி வந்தார்.'இதெல்லாம் உள்நாட்டு தபால்களாக இருக்கு. அது, என்னிடமே உள்ளது. வெளிநாட்டு தபால் தலைகள் கிடைக்குமா? பூடான் நாட்டு தபால் தலைகள் வித்தியாசமாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன். அது, கிடைத்தால் நல்லது...' என்றார், மாணவி.'இப்ப எல்லாம் யார் லெட்டர் எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புறாங்க. எல்லாம், 'இ-மெயிலி'லேயே வந்து விடுகிறது...' என்றார், அருகிலிருந்த, லென்ஸ் மாமா.'முயற்சி செய்து பார்க்கிறேன். கிடைத்தால் தகவல் தெரிவிக்கிறேன்...' என்று கூறி அனுப்பி வைத்தேன். பூடான் நாட்டு தபால் தலைகள் பற்றி விசாரிக்கும்போது, பல விஷயங்கள் கிடைத்தன. அது:தபால் தலைகள் மூலமாகவும் சாதனை படைக்கலாம்ன்னு காட்டியிருக்கு, பூடான் நாடு. அந்த நாட்டிலிருந்து, உங்களுக்கு ஒரு கடிதம் வருதுன்னு வெச்சிக்கோங்க. அதிலிருக்கிற தபால் தலையை பக்குவமா எடுத்து, அதன் பின்புறம் வருடும்படி கிராமபோன் தட்டில் வைத்தால், பூடான் நாட்டோட தேசிய கீதம் கேட்கும். பேசும் தபால் தலைகளை கூட, அந்த நாடு வெளியிட்டிருக்கு. கடந்த, 1970ல், அபூர்வமான தபால் தலைகள் பலவற்றை வெளியிட்டு அசத்தியுள்ளது, பூடான் அரசு. பன்னீரில் ஊற வெச்சு தயாரிக்கப்பட்ட, நறுமண தபால் தலைகளை விற்பனைக்கு கொண்டு வந்தாங்க. இனிய வாசனையுள்ள அந்த தபால் தலைகள் எக்கச்சக்கமா விற்பனையானதாம். இதே மாதிரி, தபால் தலைகளை முக்கோணம் மற்றும் செவ்வக வடிவத்திலேயும் வெளியிட்டனர். பின்னர், முப்பரிமாண தபால் தலைகள் வந்துள்ளன. பட்டுத்துணியில், ஓவியங்களைப் பதித்து, தபால் தலைகள் தயாரிச்சாங்க. இதுக்குன்னு தனி எந்திரமே வைத்திருக்காங்க. அப்புறம், எஃகு, பிளாஸ்டிக் போன்றவற்றை மூலப்பொருட்களாக வைத்து, தயாரிச்சாங்க. இதுதான் இப்போ, பாடும் தபால் தலைகளா வெளிவருகிறதாம். இந்த, எஃகு தபால் தலையில், புத்தர் உருவம் இருக்குமாம். தபால் தலையை சுற்றியும், மேலேயும் -பட்டுத்துணி, ஜிகினா வேலையும் உண்டாம்.இத்தனைக்கும், பூடான் நாட்டில் தபால் தலைகளை அச்சடிக்க ஆரம்பித்தது, அக்., 1962ம் ஆண்டில் தான். இந்தியாவோடு தபால் போக்குவரத்து ஒப்பந்தம் ஒன்றை, அப்போது தான் ஏற்படுத்திக்கிட்டாங்க. அதன் நினைவாக முதல் தபால் தலை, 1962ல், வெளியானது. பூடான் நாட்டோட முதல் தபால் தலையும் அதுதானாம்.சர்வதேச அளவில், முக்கிய தினங்கள்ல, நினைவு தபால் தலைகளை வெளியிடுறாங்க. பூடான் நாட்டு தபால் தலைகளுக்கு உலக அளவில் நல்ல கிராக்கி உள்ளது. இமயமலை தொடரில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடுவுல இருக்கிற இந்த சிறிய நாட்டில், பெரிய தொழிற்சாலைகள்ன்னு எதுவும் கிடையாது. ஆனால், தபால் தலைகளைத் தயாரிக்கிறது மூலமா இந்த நாடு, பெரும் பொருளாதார வளர்ச்சி அடைஞ்சிருப்பதாகவும் கூறுகின்றனர்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு சொல்றோமே, அது இது தான்.பூடான் நாட்டு தபால் தலைகள் பார்க்க ஆவலாக உள்ளதா? எனக்கும் தான். பமனைவியின் தொல்லை தாங்க முடியாமல், முதல்வரை பார்த்து, 'எனக்கு போலீஸ் மந்திரி பதவி வேணும்...' என்றார், எம்.எல்.ஏ., ஒருவர். முதல்வருக்கோ செம கடுப்பு. கோபத்துடன், பொதுச்செயலரை பார்த்தார்.உடனே, எம்.எல்.ஏ.,வின் பொது அறிவுத்திறன் பற்றி அவருக்கு உணர்த்த ஒரு கேள்வி கேட்டார், பொதுச்செயலர்.'கென்னடியை சுட்டுக் கொன்றது யார்?' எனக் கேட்டார். பொதுச்செயலர் அருகில் வந்து, 'பத்து நாள் கழித்து வந்து சொல்றேன்...' என்றார், எம்.எல்.ஏ., அவரை, போக சொன்னார், பொது செயலர். முதல்வருக்கு வணக்கம் கூறி கிளம்பினார், எம்.எல்.ஏ., பதைபதைப்புடன், பொதுச்செயலரிடம், 'அவன் கோபமா போயிட்டான் போலிருக்கு...' என்றார், முதல்வர். ஏனென்றால், அவர் அரசே ஒன்றிரண்டு, எம்.எல்.ஏ., இழுபறியில் நடந்து கொண்டிருந்தது. எந்நேரமும் கவிழ்ந்துவிடும் நிலையில் இருந்தது. வீட்டுக்கு வந்து மனைவியிடம், 'என்ன சாப்பாடு...' என, பந்தாவாக கேட்டார், எம்.எல்.ஏ., 'முதல்ல போன விஷயத்தை பற்றி சொல்லுங்க...' என்றாள், எம்.எல்.ஏ.,வின் மனைவி. 'கிட்டத்தட்ட முடிந்த மாதிரி தான். அடுத்த வாரம் அறிவிச்சுடுவாங்க...' என்றார். 'எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?' என்றாள். 'இல்லைன்னா எடுத்த உடனே, ஒரு கொலைக் கேசை என்னிடம் ஒப்படைப்பாங்களா?' என்றவர் தொடர்ந்தார்...'யாரோ கென்னடியாம். எவனோ போட்டுத் தள்ளிட்டான். பெரிய இடம் போலிருக்கு. நியூஸ் வெளியே வராம இருக்கு. நான், பத்து நாள், 'டைம்' கேட்டு வந்திருக்கேன். அந்த, கென்னடியை கொலை செய்தவனை கண்டுபிடிச்சு, அவங்ககிட்ட ஒப்படைச்சு, போலீஸ் மந்திரி பதவி வாங்கிடறேன் பாரு...' என்றார், எம்.எல்.ஏ., அதைக்கேட்டு, 'இதோ பாருங்க. உங்களால உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியலன்னா, யாரையாவது சும்மாவாவது ஒத்துக்க வச்சுடுங்க. அதுக்கு எவ்வளவு செலவானாலும் பார்த்துக்குவோம்...' என்று கூறினாராம், அவரது மனைவி. — எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.