அந்துமணி பா.கே.ப.,
பா - கே அன்று, 'இ-மெயிலில்' வந்திருந்த, கேள்வி - பதில் பகுதிக்கான வாசகர்களின் கடிதங்களை படித்துக் கொண்டிருந்தேன்.கம்ப்யூட்டரில், எதையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த, லென்ஸ் மாமா, திடீரென, 'மணி... இங்க வந்து பாரேன்...' என, அலறினார். ஏதாவது, 'கசமுசா' படமாக இருக்கும் என, நினைத்து, 'வேலையா இருக்கிறேன். அப்புறம் பார்க்கிறேன்...' என்றேன். 'ஒரு நிமிஷம் வந்து பார்த்துட்டு போ, மணி...' என்றார் மீண்டும், மாமா. எழுந்து சென்றேன்.'மணி... நாம படித்த காலேஜில், நாளை ஒரு முக்கியமான, 'செமினார்' நடக்கப் போகிறது. நான் தான் புகைப்படம் எடுக்கணும்ன்னு, அழைப்பு விடுத்துள்ளனர்...' என்றார். உண்மையில், லென்ஸ் மாமா படித்த கல்லுாரி அது. நான், வேறொரு கல்லுாரியில் தான் படித்தேன். அவர், அங்கு போகும் போது, நான் உடன் வரணும் என்பதற்காக, இப்படி ஒரு, 'பிட்'டை சேர்த்து கொண்டார். 'மாமா, உங்களுக்குத்தான் அழைப்பு. நீங்க தான் புகைப்படம் எடுக்க போறீங்க. நான் எதற்கு?' என்றேன். 'அது சரி தான். ஆனாலும், சிறப்பு விருந்தினர் யார் எனப் பார்...' எனக் கூறி, அழைப்பிதழில் இருந்த பெயரை சுட்டிக் காட்டினார். 'அட இவரா?' என, ஆச்சரியமடைந்தேன். காரணம், கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக தன், 'கேரியரை' துவங்கியவர். பல, 'டாக்டரேட்' டிகிரிகள் வாங்கி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்.இந்தியாவில் இவர் இருக்கும் நாட்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு, உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், 'செமினார்'களில் கலந்து கொண்டு உரையாற்றி வருபவர். கல்வித் துறையில் இவர் செய்துள்ள மாற்றங்கள் குறிப்பிடத்தக்கது. அத்துறையில் இவரை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும், இவர் நாவில் துள்ளி விளையாடும்.தான் சொல்ல வந்த கருத்துகளை, எளிமையான வார்த்தையில், அதே சமயம், ஆணித்தரமாக எடுத்து சொல்வதில் வல்லவர். அவரது உரையை கேட்கும் மாணவர்கள், உத்வேகம் அடைந்து, சாதிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கம்மிங் பேக் டு த பாயின்ட்.'நாளை தானே, 'செமினார்' நிச்சயம் போகலாம். இப்போது, வேலைகளை கவனிப்போம்...' எனக் கூறி, என் வேலையில் ஈடுபட்டேன்.மறுநாள் மாலை. சென்னையின் பாரம்பரியமான கல்லுாரி அது. அங்கு படித்த பலர், பின்னாளில் பல உயர் பதவிகளில் அமர்ந்துள்ளனர். கல்லுாரியின், 'ஆடிட்டோரியம்' நிரம்பி வழிந்தது. குத்து விளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்தார், பேராசிரியர். சமீபகாலமாக, தொழிற்கல்வியில் அடைந்துள்ள வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான சாத்தியகூறுகள் என, பல விஷயங்களை பற்றி உரையாற்றினார்.மேலும், மாணவர்கள் தங்கள் உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டிலும் எப்படி கவனம் செலுத்தி, தங்கள், 'பர்சனாலிட்டி'யை மேம்படுத்திக் கொள்வது என்பது பற்றியும் அருமையான விளக்கம் அளித்தார்.அவர் கூறியதன் சுருக்கம் இதோ: மனிதனுக்கு ஏற்படும் உணர்வுகளில், சில நல்லது செய்யும். சில தொந்தரவு செய்யும். மொத்தம், 10 அடிப்படையான உணர்ச்சிகள் உண்டு. அதில், ஐந்து மோசமானது, ஐந்து நல்ல விதமானது. மோசமான உணர்ச்சிகளை எப்படி, 'கன்ட்ரோல்' செய்வது? நல்லவிதமான உணர்ச்சிகளை எப்படி வலுப்படுத்தறது? மோசமான உணர்ச்சிகள் எது எது தெரியுமா? கோபம், குற்ற உணர்வு, பயம், சலிப்பு மற்றும் துக்கம். நல்லவிதமான உணர்ச்சிகள், சிரிப்பு, அன்பு, ஆக்கப்பூர்வமான எதிர்பார்ப்பு, நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை. முன் சொன்ன ஐந்தும், உடம்புக்கு கெடுதல். பின் கூறிய ஐந்தும், உடம்புக்கு நல்லது. கோபம்: இது, இதய நோயை உண்டாக்கும். கோபத்தை அடக்கும் போது, பி.பி., ஏறுது. ஹார்ட் அட்டாக், பக்கவாதம் எல்லாம் வருது. வயிற்றில் அல்சர் வருது. உங்களுக்கு கோபம் வந்தால், முதலில் அது, நியாயமான கோபம்தானா என, கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவு செய்யணும். குற்ற உணர்வு: ஒரு தப்பு செய்தால் அல்லது ஒரு காரியத்தை செய்யத் தவறினால், அதை நினைத்து வருத்தப்படறோம். தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வதும், தவறு செய்யாமல் இருக்க பழகி கொள்வதும் தான், இதற்கு சரியான வழி. பயம்: எல்லாருக்குமே, நாமும், நம் உடம்பும் நல்லா இருக்கணுமேங்கற பயம் தான். பயத்துக்கான மூலக்காரணத்தை கண்டுபிடிக்கணும். அப்புறம் அதை விலக்கணும். சலிப்பு: சில பேருக்கு நேரம் போதவில்லை என்பது, ஒரு பெரிய குறையாக இருக்கும். ஆனால், சில பேருக்கு நேரம் இருக்கும். என்ன செய்வதென தெரியாது. இது, ரொம்ப ஆபத்தானது.இதனாலே, இதய நோய், செரிமானக் கோளாறு, மனத்தளர்ச்சி எல்லாம் ஏற்படும். உங்களுக்கென பொழுதுபோக்கு அல்லது வேலையை நீங்கள் தான் உண்டாக்கிக்கணும். துன்பம், துயரம் அல்லது துக்கம்: மனுஷன் வருத்தப்பட எத்தனையோ காரணம் இருக்கிறது. துக்கத்தை கண்டு பயந்தால், அது, அதிகமாகுமே தவிர குறையாது. துயரத்தை மனசுக்குள் தேக்கி வைக்கக் கூடாது. தாங்க முடியவில்லை எனில், அழுது விடுவது நல்லது. நல்ல விதமான உணர்வுகளை பார்ப்போம்: சிரிப்பு: இது, நுரையீரலுக்கும், இதயத்துக்கும் நல்ல பயிற்சி. சிரிச்சதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா, பி.பி., குறையும். மூச்சு விடறது சுலபமாக இருக்கும். நல்லா துாக்கம் வரும். அன்பு: பல நோய்களை குணப்படுத்தும். நல்லவிதமான எதிர்பார்ப்பு இருக்கு பாருங்க அது, வாழ்க்கையிலே ரொம்ப முக்கியம். வாழ்க்கையிலே ஒரு பிடிமானம் இருக்கணும். நம்பிக்கை: ரொம்ப அவசியம். நான் உருப்படப் போறேன்னு நினைக்கறவங்க, நிச்சயம் உருப்படறாங்க. தன்னம்பிக்கை: ஒரு ஆக்கப்பூர்வமான உணர்வு. தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டால், உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நல்ல விதமாவே சிந்திக்கிற நோயாளிகள் சீக்கிரம் குணமாயிடறாங்கறது மருத்துவ கண்டுபிடிப்பு.புகைப்படக்காரர்களின் கையில் இருந்த கேமராக்களில் இருந்து எழுந்த, 'கிளிக்' சத்தங்கள் தவிர, வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை. அவ்வளவு ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் உரையை கேட்டுக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும், பேராசிரியரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார், லென்ஸ் மாமா. அவரது உணர்வுப்பூர்வமான உரையை பாராட்டி, 'இது போன்ற, 'ஸ்பீச்'கள், கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பு திட்டம் ஏதாவது உள்ளதா?' எனக் கேட்டேன். நிறைய ஐடியாக்களை பட்டியலிட்டார். இவைகளை கல்லுாரி முதல்வர்கள் மற்றும் அரசும் தான் செயல்படுத்த முன்வர வேண்டும். செய்வரா!