அந்துமணி பா.கே.ப.,
பா - கே தொ ழிலதிபரான நண்பர் ஒருவர், குடும்பத்துடன் சமீபத்தில், உலக 'டூர்' போய் திரும்பியிருந்தார். அன்று அலுவலகம் வந்திருந்தவரிடம், 'டூர்' பற்றி விசாரித்தேன். நண்பர், 'இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ்' வைத்திருப்பதால், ஐரோப்பிய நாடுகளில், தானே காரை ஓட்டி சென்று, சுற்றிப் பார்த்ததை குறிப்பிட்டார். அவர், பல்வேறு உலக நாடுகளில் கார் ஓட்டுவது தொடர்பாக, பல வித்தியாசமான சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாகவும், அதில் சில வினோதமாக இருப்பதாகவும் கூறினார். ஆனாலும், மக்களும் மதித்து நடப்பதாக சிலாகித்தார். அவர் கூறிய சில வினோத சட்டங்கள்: * ரஷ்யாவில், அழுக்கான, துாசி படிந்த காரை ஓட்ட அனுமதியில்லை. அவ்வாறு, அழுக்கான காரை ஓட்டி பிடிபட்டால், இந்திய மதிப்பில் 1,724 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் * பெரும்பாலான நாடுகளில், வாகனம் ஓட்டும் போது, மது அருந்துவதற்கு அனுமதியில்லை. ஆனால், சைப்ரஸ் நாட்டில் வாகனம் ஓட்டும் போது, எந்த பானமும் குடிப்பது அல்லது நொறுக்குத்தீனி சாப்பிடுவது, சட்ட விரோதம். இந்த தவறை செய்து பிடிபட்டால், 7,727 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் * சுவீடன் நாட்டில், வாகனங்களின் முகப்பு விளக்குகளை இரவு, பகல் எப்போதும் எரிய விட வேண்டும். அங்கு குளிர் காலத்தில், பகலில் கூட சுற்றுப்புற வெளிச்ச அளவு குறைவாக இருப்பதே இதற்கு காரணம் * ஜப்பான் நாட்டில் போதையில் ஓட்டுனர் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவருக்கு மட்டும் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுவதில்லை. உடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் * அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தேவையில்லாமல், 'ஹாரன்' ஒலி எழுப்புவது சட்ட விரோதமானது. அதற்கு, 350 டாலர் வரை, அதாவது, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் * சுவிட்சர்லாந்து நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் காரை கழுவுவது சட்ட விரோதமானது. ஞாயிற்றுக்கிழமை, ஓய்வு நாளாகக் கருதப்படுவதே காரணம் * பெலாரஸ் நாட்டில், இரண்டு சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களில், சொந்த தீ அணைக்கும் கருவியை எடுத்துச் செல்வது கட்டாயம். மேலும், காரில் முதலுதவிப் பெட்டி, எச்சரிக்கை முக்கோணம், காரின் வெளிப்புற விளக்குகளுக்கான உதிரி பல்புகள், முகப்பு விளக்கு மாற்றிகள், 'ஸ்டெப்னி' போன்ற பொருட்களும் அவசியம் இருக்க வேண்டும் * பிலிப்பைன்சில் விரும்பிய நாளில் வாகனம் ஓட்ட முடியாது. வாகன உரிம எண் 1 அல்லது 2ல் முடிவடைந்தால், திங்கட்கிழமை அன்று வாகனம் ஓட்ட அனுமதியில்லை. நம்மூர் வாகன சட்டங்கள் பற்றியும், மக்களின் மனப்பான்மையையும் நினைத்து கொண்டேன், நான். பெருமூச்சு தான் வெளிப்பட்டது. ப எப்போதோ, நுாலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த, 'மருது பாண்டியர் வரலாறு' என்ற நுாலை படிக்கும் சந்தர்ப்பம், இப்போது தான் கிடைத்தது. மக்கள் மீது, மருதுபாண்டியர் கொண்டிருந்த அன்பும், நியாயத்தின் பக்கம் இருந்ததை குறிப்பிடும் ஒரு நிகழ்வும் ஆச்சரியமானது. அது: இருநுாறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி. அப்போது, சிவகங்கை சமஸ்தானத்துக்கு தலைவராக இருந்தவர், மருதுபாண்டியர். காளையார் கோவிலுக்கு ஒரு பெரிய தேர் செய்ய ஆசைப்பட்டார். அதற்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சேகரித்து, சிற்பிகளை வரவழைத்தார். கடைசியாக, அந்த தேரின் அச்சுக்கு ஒரு பெரிய மரம் தேவைப்பட்டது. அதற்கு பொருத்தமாக ஒரு மரம் எங்கே கிடைக்கும் என, தேடினார். அவருடைய ஆட்சிக்கு உட்பட்ட திருப்பூவனம் என்ற ஊரில், வைகை ஆற்றுக்கு தென்கரையில் இருந்த கோவிலுக்கு எதிரில், பழமையான, பெரிய மருத மரம் ஒன்று இருப்பதை பற்றி கேள்விப்பட்டார். உடனே அதை வெட்டி அனுப்பும்படி, அங்கே உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பினார். அதற்கான ஆட்களைக் அழைத்து போய், மரத்தை வெட்ட ஆரம்பித்தனர், அதிகாரிகள். இதை கேள்விப்பட்ட திருப்பூவனநாதருக்கு பூஜை செய்து வந்த ஆதிசைவர்களுள் ஒருவரான, புஷ்பவன குருக்கள், 'அந்த மரத்தை வெட்டாதீங்க, வெட்டாதீங்க...' எனக் கூறி, ஓடி வந்தார். 'இது, மன்னர் உத்தரவு...' என்றனர், அதிகாரிகள். 'மன்னர் மீது ஆணை. இதை, நீங்க வெட்டக் கூடாது...' என்றார், குருக்கள். அவங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே இந்த தகவலை, மன்னருக்கு தெரிவித்தனர். இதைக்கேட்டதும் மன்னருக்கு வியப்பு. உடனே புறப்பட்டு நேரில் போய், 'யார், மரத்தை வெட்ட விடாமல் தடுத்தவர்?' என்றார், மன்னர். 'அவர், உங்களுக்குப் பயந்து மதுரைக்கு போய் விட்டார்...' என்றனர், அதிகாரிகள். உடனே, அவருக்கு ஓர், அபய நிரூபம் எழுதி அனுப்பி வைத்தார், மன்னர். அந்த காலத்தில், குற்றவாளிகளுக்கோ அல்லது பயந்து ஓடினவர்களுக்கோ, 'நீங்க பயப்பட வேண்டாம். இங்கே வந்தால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது...' என, அரசர்கள் அனுப்பி வைக்கும் கடிதத்துக்கு, 'அபய நிரூபம்' என, பெயர். அதைக் கண்டதும், கொஞ்சம் தைரியமாக திரும்பி வந்தார், குருக்கள். 'அந்த மருத மரத்தை வெட்ட வேண்டாம் என, தடுத்தது உண்மையா?' என்றார், மன்னர். 'ஆமாம்...' என்றார், குருக்கள். 'காளையார்கோவில் தேர் வேலைக்காக அதை வெட்டச் சொல்லி இருந்தேன். அப்படியிருக்கும் போது, அதை நீங்கள் தடுக்கலாமா?' எனக் கேட்டார், மன்னர். 'அதற்கு சில காரணங்கள் உண்டு...' என்றார், குருக்கள். 'என்ன காரணம் அது. எதுவாக இருந்தாலும் பயப்படாமல் சொல்லலாம்...' என்றார், மன்னர். 'வெளியூர்களிலிருந்து நிறைய பேர் இங்கே வருவர். அப்படி வருவோர், ஆற்றில் குளித்து சாமி தரிசனம் செய்வர். எப்போதும் இங்கே தண்ணீர் ஓடுவதில்லை. கோடை காலத்தில் வடகரை ஓரமாக கொஞ்சம் தண்ணீர் ஓடும். 'அப்போது, அங்கே குளித்துவிட்டு சுடு மணலில் நடந்து வருவோர், இந்த மரத்து நிழலில் கொஞ்ச நேரம் தங்கிவிட்டு போவது வழக்கம். இந்த மரம் எவ்வளவோ காலமாக இங்கே இருக்கிறது. 'வயதானவர், பெண்கள், குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் என, எவ்வளவோ பேர் இதன் நிழலில் இளைப்பாறி வருகின்றனர். இந்த மரத்தை வெட்டி விட்டால், அவங்கள் எல்லாம் வெயிலில் தவித்து போய் விடுவர். 'இந்த மரத்தை பார்க்கும் போது, எனக்கு மன்னர் நினைவு தான் வரும். எவ்வளவோ பேருக்கு நிழலாக உள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு காரணம், இந்த மருத மரம் மன்னருடைய பெயரை தாங்கி இருக்கிறது...' என்றார், குருக்கள். நிமிர்ந்து குருக்களை பார்த்தார், மருதுபாண்டியர். 'நீங்க செய்தது சரி தான். மரத்தை வெட்ட வேண்டாம்...' என்றார், மன்னர். அந்த மரம் வெட்டப்படவில்லை. வேறு ஒரு மரத்தை தேருக்கு கொண்டு வந்தனர். தன்னுடைய உத்தரவு தடுக்கப்படும் போது, -அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து செயல்பட்ட, பண்பட்ட அரசர்கள், நம் நாட்டில் நிறைய பேர் இருந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த மன்னர் தான், மருதுபாண்டியர்.