உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கே அ லுவலகம். 'தினமலர்' நாளிதழின், 75வது பவள விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து, வாசகர்கள், மின் அஞ்சலில் அனுப்பியிருந்த கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். 'மணி...' என்று அழைத்த, சினிமா பொன்னையாவின் குரல் கேட்டு, நிமிர்ந்து பார்த்தேன். 'மணி... உன்னை சந்திக்க, முன்னாள் சினிமா தயாரிப்பாளரும், உன் தீவிர வாசகருமான ......... (பெயர்) வந்திருக்கிறார். 'ரிசப்ஷனில்' உட்கார வைத்துள்ளேன். உள்ளே வர சொல்லவா?' என்றார், சி.பொ., அந்நாளைய பிரபல நடிகர்களை வைத்து, பல வெற்றி படங்களை தயாரித்தவர். சினிமா இதழ் ஒன்றையும் நடத்தியவர். எனக்கும், லென்ஸ் மாமாவுக்கும் நன்கு பழக்கமானவர். தற்சமயம் அவருக்கு, 80 வயதுக்கு மேல் இருக்கும். 'கம்மிங் பேக் டு த பாயின்ட்!' நானே எழுந்து சென்று, அவரை வரவேற்று, உள்ளே அழைத்து வந்தேன். பவள விழாவுக்கு வாழ்த்து தெரிவித்தவரிடம் நலம் விசாரித்து, 'இவ்வளவு துாரம் வந்திருக்கிறீர்களே, போனிலேயே பேசியிருக்கலாமே...' என்றேன். 'அதனால் என்ன மணி? உன்னையும், லென்ஸ் மாமாவையும் பார்த்து விட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்...' என்றார். அவர், டீ, காபி குடிப்பதில்லை என்பதால், 'வெஜ் சூப்' வாங்கி வர சொல்லி, அவரிடம் கொடுத்தேன். நன்றி கூறி அருந்த துவங்கினார். அப்போது, லென்ஸ் மாமா உள்ளே வர, இவரை பார்த்ததும், துள்ளி குதித்து, 'ஹலோ சார். எப்போ வந்தீங்க? வரப்போவதாக சொல்லியிருந்தால், வெளியில் எங்காவது போயிருக்கலாமே!' என்றார், மாமா. 'என் மாப்பிள்ளை இந்த பக்கம் வந்தார். அவருடன் வந்தேன். திரும்ப வந்து அழைத்து செல்வார். வயசாயிடுச்சு இல்லையா? அதிகமா வெளியிடங்களுக்கு போக முடிவதில்லை...' என்றவர், சினிமா பொன்னையாவிடம், 'தற்போதைய சினிமா உலகம் எப்படி இருக்கிறது?' என்று விசாரித்தார், அந்த தயாரிப்பாளர். 'அது இருக்கட்டும். நீங்க சொல்லுங்க. உங்க காலத்து சினிமா சம்பந்தமான செய்தி ஏதேனும் உண்டா?' என்றார், லென்ஸ் மாமா. 'நிறைய இருக்கு. கேட்க உங்களுக்கு நேரம் இருக்குமா?' என்றார், தயாரிப்பாளர். 'நீங்க சொல்லுங்க கேட்போம்...' என்று நான் சொல்ல, கூற ஆரம்பித்தார் தயாரிப்பாளர்: * எஸ்.எஸ்.வாசன் தயாரித்த, சந்திரலேகா படத்தில், இளவரசனாக வரும் எம்.கே.ராதாவின் ஷூ லேசை கட்டுவது போல் வரும் ஒரு வேடத்தில், சிவாஜியை நடிக்க வைக்க, அப்போது ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்த, வேம்பத்துார் கிட்டு சிபாரிசு செய்தார். சிவாஜியின் உருவத்தை பார்த்து பிடிக்காமல், ' மிஸ் மாலினி படத்தில் நடித்த, கோபியை போடுங்கள்...' என்று, வாசன் சொல்ல, அந்த வாய்ப்பு நடிகர் கோபாலகிருஷ்ணனுக்கு போனது. பராசக்தி படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்து, கோபாலகிருஷ்ணனால் நடிக்க முடியாமல் போனதால், அந்த வாய்ப்பு சிவாஜிக்கு போனது என்பது பலருக்கு தெரியாத விஷயம் * கடந்த, 1936ல் உருவான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முதன் முதலில், சதி அகல்யா என்ற படத்தை தயாரித்தது. தொடர்ந்து, 136 படங்களை தயாரித்து வரலாறு படைத்தது. மந்திர குமாரி, தேவகி, திரும்பிப்பார் போன்ற படங்களுக்கு இக்கம்பெனியில் வசனம் எழுதியவர், கருணாநிதி. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, வி.என்.ஜானகி, என்.டி.ராமாராவ் ஆகிய, நான்கு முதலமைச்சர்களை உருவாக்கியது, மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் * முத்துராமன், தேவிகா நடித்து, ஸ்ரீதர் இயக்கி, தயாரித்த, நெஞ்சில் ஓர் ஆலயம் படம் முடிந்து வினியோகஸ்தர்களுக்கு போட்டு காட்டினார், ஸ்ரீதர். படத்தை பார்த்தவர்கள் யாரும் வாங்க முன் வரவில்லை. படத்தின் மீது இருந்த நம்பிக்கையால், ஸ்ரீதரே படத்தை, 'ரிலீஸ்' செய்தார். படம் வெற்றி பெற்று, கேசினோ தியேட்டரில், ஒன்றரை லட்ச ரூபாய் வசூல் செய்தது. இப்போது அதன் மதிப்பு பல கோடிகள் * ஒரு படத்தில் கதாநாயகனுக்கு, 'கட்-அவுட்' வைக்காமல், காமெடியனுக்கு, 'கட்-அவுட்' வைத்தார், ஏவி.எம். செட்டியார். அந்தப் படம், காசேதான் கடவுளடா. கதாநாயகன், முத்துராமன். காமெடியன், தேங்காய் சீனிவாசன். 'கட்-அவுட்' வைக்கப்பட்ட திரையரங்கம் சென்னையில் முன்பு இருந்த, பைலட் தியேட்டர் * இந்தியாவிலேயே இரண்டு நடிகர்கள் தான், 'இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில்' சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியவர்கள். அந்த இருவர், சிவாஜி கணேசன் மற்றும் எஸ்.வி.ரங்காராவ். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக, சிவாஜிக்கும், நர்த்தனசாலா என்ற தெலுங்கு படத்திற்கு, எஸ்.வி.ரங்காராவும் அந்த விருதை பெற்றனர் * நடிகர் எம்.ஆர்.ராதா தான் நடித்த, ரத்தக் கண்ணீர் படத்திற்கு வாங்கிய சம்பளம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய். அந்நாளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை, கே.பி.சுந்தராம்பாள். படத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கினார். அவரை விட, 25 ஆயிரம் அதிகம் வேண்டும் என்று கேட்டு வாங்கினார், எம்.ஆர்.ராதா * எம்.ஜி.ஆர்., நடித்த, மன்னாதி மன்னன் என்ற படத்தில், 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா...' பாடலை, அந்நாளில் இலங்கை அரசு வானொலியில் ஒலிபரப்ப தடை விதித்தது. ஆனால், நிகழ்ச்சி தொகுப்பாளர் கே.எஸ்.ராஜா, ஒருநாள் அதை தைரியமாக ஒலிபரப்பி விட்டார். அதனால், வானொலி நிறுவனம் கே.எஸ்.ராஜாவை வேலையிலிருந்து நீக்கி விட்டது * ஒரு பாடலை பாட முடியாமல், 'என்னால் இந்த பாடலை பாட முடியவில்லை...' என்று பாட மறுத்தார், பி.சுசீலா. ஆனால், 'இந்த பாடலைப் பாடு. உனக்கு விருது கிடைக்கும்...' என்று கூறி பாட வைத்தார், எம்.எஸ்.வி., அந்தப்பாடல், உயர்ந்த மனிதன் படத்தில் வரும், 'நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...' என்ற பாடல். இந்த பாடலை பாடியதற்காக, சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்தது. * ஒரே இடத்தில் கேமராவை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையை மாற்றி, முதல் முறையாக, மந்திர குமாரி படத்தில் தான், ட்ராலியில் கேமராவை வைத்து நகர்த்தி, 'ட்ராலி ஷாட்' முறையை அறிமுகப்படுத்தினார், இயக்குனர், எல்லீஸ் ஆர்.டங்கன். 'அபாரமான ஞாபக சக்தி உங்களுக்கு...' என்று நான் பாராட்ட, மாமாவும் அதை ஆமோதித்தார். 'ஒருநாள் வீட்டுக்கு வாங்க, 'ரிலாக்ஸா' பேசுவோம். ஒரு புத்தகம் எழுதுமளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன...' என்றபோது, அவரது மொபைல் போன் ஒலிக்க, எடுத்து பார்த்தவர், 'மாப்பிள்ளை வந்து விட்டார். நான் கிளம்புகிறேன்...' என்று கூறி விடை பெற்றார். லென்ஸ் மாமா, அவரை கைப்பிடித்து அழைத்து செல்ல, நான், என் வேலையில் ஈடுபட்டேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !