அந்துமணி பா.கே.ப.,
பா கே அலுவலகம்... வேக வேகமாக உள்ளே வந்த, 'திண்ணை' நாராயணன், 'மணி... நுாறு ரூபாய்க்கு சில்லரை இருந்தா கொடுப்பா... ஆட்டோவில் வந்தேனா, 150 ரூபாய் ஆயிற்று, 200 ரூபாய் கொடுத்தா சில்லரை இல்லேங்கிறான்...' என்றார். 'நாணா... பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ளும் பழக்கமே எனக்கு இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா?' என்றேன். 'ஐம்பது ரூபாய் நோட்டை கண்ணில் பார்த்தே ரொம்ப நாளாச்சு...' என்றார், அருகிலிருந்த உதவி ஆசிரியர். 'ஓய், நாணா... இதுக்குத்தான், 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனை செய்ய கற்றுக் கொள்ளுங்கன்னு பலமுறை சொல்லிட்டேன்... கேட்டீங்களா?' என்றார், லென்ஸ் மாமா.'இப்படியே பேசிட்டிருந்தா, ஆட்டோக்காரன் என்னை சகட்டு மேனிக்கு திட்டுவானே...' என்றார், அழாத குறையாக, நாணா. 'கொஞ்சம் இரும்... நான் போய், 'போன் பே' மூலம் பணம் கொடுத்துட்டு வர்றேன்...' என்று சென்றார், உதவி ஆசிரியர். 'சில்லரை நோட்டுகளுக்கு ஏன் இவ்வளவு, 'டிமாண்டு' வந்து விட்டது. என்னைப் போல், டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய தெரியாதவர்கள் என்ன செய்வரோ...' என்று அலுத்துக் கொண்டார், நாணா. 'சமீபகாலங்களில், முதலில், 10 ரூபாய் நோட்டுகள் காணாமல் போனது, பிறகு, 20 ரூபாய் இப்போது, 50 ரூபாய் நோட்டுகளே இல்லாமல் போனது.இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதையே நிறுத்திவிட்டதாக, வங்கிகளில் சொல்கின்றனர்...' என்றார், லென்ஸ் மாமா.'இதற்கான மாற்று ஏற்பாட்டை, மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. அதைப்பற்றி சுருக்கமாக சொல்லி விடுகிறேன்...' என்று கூற ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்: ரூபாய் நோட்டை எப்படி வைத்துக் கொள்வது என்பதற்கு, நம் மக்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். ஒரு நோட்டை எட்டாக மடிப்பது, அதில், எதையாவது எழுதுவது, மணி பர்சில் வைக்கிறேன் பேர்வழி என்று, ஓரங்களைக் கிழித்து விடுவது, சுருட்டி, காதில் பூ செருகுவது போல் செருகிக் கொள்வது, என, அலட்சியமாக இருக்கின்றனர். பல கைமாறி அழுக்கேறி, கறை படிந்து தொடுவதற்கே அருவருப்பாக இருக்கும் நிலை தான் காணப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே, மத்திய அரசு, 'பிளாஸ்டிக்' ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. 'பிளாஸ்டிக்' நோட்டுகளை வெளியிட, பல ஆண்டுகளாகவே சோதனை செய்யப்பட்டு வந்தது. நம்மூர் வெயில் பட்டாலோ அல்லது சட்டை, 'பேன்ட்'டில் வைத்தால், உடல் வெப்பத்தாலோ உருகி விடுமோ என்ற சந்தேகம் இருந்தது. உண்மையில், பலகட்ட ஆராய்ச்சிக்கு பின், சாதாரண, 'பிளாஸ்டிக்'குக்கு பதிலாக, அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய, கிழியாத, அன்றாட பயன்பாட்டுக்கு தாக்கு பிடிக்கும் வகையில், பி.ஓ.பி.பி., எனப்படும் பைஆக்ஸியலி ஓரியன்டெட் பாலிபுரோப்பிலீன், என்ற சிறப்பு வகை, 'பாலிமர்' பொருளால் தயாரிக்கப்படுமாம். இவை, காகித நோட்டுகளை விட, அதிக உறுதியானவை. தண்ணீர், ஈரப்பதம் மற்றும் பல கைகளுக்கு மாறி மாறி பயன்படுத்துவதால் ஏற்படும் சேதாரங்களை தாங்கக் கூடிய வகையில், வடிவமைக்கப்படும். சட்டை மற்றும் 'பேன்ட் பாக்கெட்'டில் வைத்தாலும் சேதமடையாது. ஏனெனில், மனித உடலின் வெப்பநிலை, 37 டிகிரி செல்ஷியஸ் தான். 'பிளாஸ்டிக்' நோட்டுகள் இதைவிட அதிகமான வெப்பநிலையை தாங்கும் வகையில் தயாரிக்கப்படுமாம். மேலும், சாதாரண வெயில் அல்லது கோடைக்கால வெப்பத்தால், 'பிளாஸ்டிக்' நோட்டுகள் உருகாது. ஆனால், நெருப்பு, 'அயர்ன் பாக்ஸ்' அல்லது தொழிற்சாலைகளில் உருவாகும் அதிக வெப்பத்தால் மட்டுமே இவை சேதமடையும். இதில், மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால், நீண்ட காலத்துக்கு பயன்படுத்த முடியும். எளிதில் கிழியாது. பாதுகாப்பு அம்சங்கள் இதில் பயன்படுத்தப்படுவதால், போலி ரூபாய் நோட்டுகளை தயாரிக்கவே முடியாது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ருமேனியா, வியட்நாம் உட்பட பல நாடுகளில், 'பாலிமர்' கரன்சி நோட்டுகளை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்ததும், பல பிரச்னைகள் தீர்ந்து விடும்... - என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர். 'சீக்கிரம் வெளியாகட்டும். என்னைப் போன்ற வயதானவர்களுக்கு பயன்படும். அப்போது, ஆட்டோவுக்கு பணம் கொடுத்துவிட்டு வந்த உ.ஆசிரியரிடம், 'பிளாஸ்டிக் நோட்டு அறிமுகமானதும், நீ கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்...' என்றார், நாணா. 'ஹூம்... 'பிளாஸ்டிக்' நோட்டு எப்போ வருவது, எப்போது திருப்பி தருவது... வேறு வழியில் வசூலித்துக் கொள்ள வேண்டியது தான்...' என்று, 'கமென்ட்' அடித்தார், லென்ஸ் மாமா. ப விக்டர் போர்ஜ் என்பவர் எழுதிய, 'நகைச்சுவை -நலம் தரும் அற்புதம்!' என்ற ஆங்கில நுாலில் படித்தது: ஜெ ர்மனி நாட்டின் அதிபராக, ஹிட்லர் வர முயற்சி செய்த காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவம் இது... ஹெல்லர் என்பவர், யூத மதத்தைச் சேர்ந்தவர். ஜெர்மனியில் வியாபாரம் செய்து வந்தார். அவர் வசித்த வீட்டருகில், ஜெர்மனி நாட்டு, அரசு அதிகாரி ஒருவரின் வீடு இருந்தது. ஹெல்லர் தினமும் காலையில், தெருவில், 'வாக்கிங்' போவது வழக்கம். அந்த அதிகாரி, தன் வீட்டுச் செடிகளுக்கு அப்போது தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். ஹெல்லருக்கும், அதிகாரிக்கும் எந்தவித முன் அறிமுகமும் கிடையாது. காலையில் தன் கண்களில் படும் முதல் நபர் என்ற அடிப்படையில், அதிகாரியைப் பார்த்து ஒரு புன்னகையை வீசிவிட்டு செல்வார், ஹெல்லர். ஆரம்பத்தில் இதை பொருட்படுத்தாமல் இருந்தார், அதிகாரி. நாளடைவில், சிரிப்புடன் சேர்த்து, காலை வணக்கத்தையும் சொல்ல ஆரம்பித்தார், ஹெல்லர். அந்த அதிகாரியிடமிருந்து, வெறும் தலையசைப்பு மட்டுமே பதிலாக வரும். 'சும்மா ஒருத்தரைப் பார்த்து, அதுவும் ஒரு ஜெர்மனியரைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும்...' என்று, பரிகசிப்பர், ஹெல்லரின் நண்பர்கள். அதற்கு, 'காலையில் உற்சாகமாக நடைப்பயிற்சிக்கு கிளம்புகிறேன். எதிர்படும் நபர்களிடம் அந்த உற்சாகத்தை பங்கு போட்டுக்கொள்கிறேன். அவ்வளவு தான்...' என, பதில் கூறுவார், ஹெல்லர். சிறிது காலத்துக்கு பின், ஜெர்மனியில் அரசியல் நிலை மாறி, ஹிட்லர் ஆட்சிக்கு வந்து, யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். யூத இனத்தை சேர்ந்த, ஹெல்லரும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்து, இழுத்து சென்றனர். அவர்கள் மரணத்தை சந்திப்பதற்கு, உயர் அதிகாரி கையெழுத்திடுவது மட்டுமே பாக்கி. எமனின் பிரதிநிதியாக, அந்த அதிகாரியும் வந்தார். ஹெல்லரை ஒருமுறை, ஏற இறங்க பார்த்தார். ஹெல்லரையும், குடும்பத்தினரையும் விடுவித்து, வேறு நாட்டுக்கு தப்பிப் போகவும் வைத்தார். இந்த அதிசயம் எப்படி நடந்தது... வந்தவர் வேற யாருமல்ல, ஹெல்லர், யாருக்கு தினமும் புன்னகைத்து, வணக்கம் சொன்னாரோ அந்த அதிகாரி தான். பிற்காலத்தில், ஒரு இதழில், இந்நிகழ்ச்சியை எழுதி, 'தினமும், நான் இயல்பாக அவரைப் பார்த்து சிரிக்காமல் இருந்திருந்தால், இதை எழுத, நான் இப்போது உயிரோடு இருந்திருக்கவே மாட்டேன்...' என, குறிப்பிட்டிருந்தார், ஹெல்லர்.