அந்துமணி பதில்கள்!
இ. நாகராஜன், கோவை: சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து மீண்டு வருவது எப்படி?சிகரெட் பிடிக்கவே கூடாது என்று, அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்போது, லவங்கம் அல்லது 'ஸ்டிராங் பெப்பர்மின்ட்' மிட்டாயை வாயில் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சுவையுங்கள்.தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில், சிகரெட் பிடிக்கும் எண்ணம் அறவே போய் விடும்.- இப்படி ஒரு புத்தகத்தில் படித்தேன்.லென்ஸ் மாமாவுக்கும், இதே, 'அட்வைஸ்' செய்தேன். ஆனால், மனுஷன் கேட்டால் தானே!எஸ். ராஜாமணி, கோவில்பட்டி: எதிர்காலத்தில் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ, என்ன செய்ய வேண்டும்?மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக, ஆடம்பர செலவு செய்யாமல், எளிய வாழ்க்கை வாழ்வோர், நிம்மதியாக வாழ்வர்.எந்த நிமிஷத்திலும், எதற்கும் தயாராக இருப்பவர்கள் தான், எப்போதுமே சந்தோஷமாக இருப்பர்அ. கண்ணன், சேலம்: தன்னம்பிக்கை அதிகம் காணப்படுவது ஆண்களிடமா, பெண்களிடமா?சந்தேகமே இல்லாமல் பெண்களிடம் தான்! கணவனை இழந்த பின், எத்தனை பெண்கள், சுயகாலில் நின்று குடும்பத்தை கரை சேர்க்கின்றனர்... மொடாக் குடிகாரனாக, வீட்டு செலவுக்கு காசு தராத கணவர்களை ஓரம் கட்டி விட்டு, தன்னம்பிக்கையுடன் செயல்படும் தாய்மார்கள் ஏராளம்.பொறுப்பில்லாமல் பெத்துப் போட்டு விட்டு, சீட்டு, ரேஸ் என்று அலையும் தகப்பனை, 'இக்னோர்' செய்து உடன்பிறந்தோரை நல்ல நிலைக்கு கொண்டு வர தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனரே!பி. மோகன்ராஜூ, காஞ்சிபுரம்: நாம் செய்யும் தர்மம், நம் குலத்தை காக்கும் என்பது எந்த அளவுக்கு உண்மை?மலையளவு உண்மை!எம். ஜெகதீசன், குன்னூர், நீலகிரி மாவட்டம்: அனுபவம் என்பது என்ன?வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளுக்கு., அனுபவம் என்று பெயர். அந்த அனுபவம் அதிகம் உள்ளவர்கள், வாழ்க்கையில் சகலத்தையும் அனுபவிக்கின்றனர்.ப.ராஜா, கோவை: இளைஞர்களிடையே ஜாதிப்பற்று வளர்ந்து வருகிறதா, குறைகிறதா?கண்டிப்பாக இந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டு தான் ஆக வேண்டும்... அரசியல் ஆதாயம் தேடுவோரால் சீரழிக்கப்படும் இளைஞர்களிடம் ஜாதிப்பற்று அல்ல, ஜாதி வெறி கொடிய நோயாகப் பரவி வருகிறதென்னவோ உண்மைதான்!