உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி கொண்டாடியுள்ளது குறித்து... இந்திய மக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடும் வேளையிலும், நம் நாட்டைப் பாதுகாக்க, நம் கடற்படை வீரர்கள் கடமை தவறாது பணி செய்கின்றனர். அவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய நம் பிரதமர் மோடிக்கு, ஒரு ராயல் சல்யூட் அடிப்போம்! * எஸ்.கெஜலட்சுமி, லால்குடி, திருச்சி: 'சென்னை என்னும் குழந்தையை, தினந்தோறும் சீராட்டும் தாய்மார்கள் - துாய்மைப் பணியாளர்கள்...' என்று, துணை முதல்வர் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளாரே... ஆனால், அந்தக் குழந்தை, இன்றும் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கிறது; சவலை குழந்தையாகவும் உள்ளது. எப்போது, சலவை செய்த குழந்தையாக மாறுமோ என்று, மக்கள் எதிர்பார்க்கின்றனர்! மு.பாஷா, ராமநாதபுரம்: 'ஆந்திராவின் உணவுகள் காரமானவை; அது போலத்தான், எங்கள் மாநிலத்துக்கு வரும் முதலீடுகளும். எங்கள் மாநிலத்துக்கு அதிக முதலீடுகள் வருவதைப் பார்த்து, சில அண்டை மாநிலங்களின் வயிறு எரிகிறது...' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது குறித்து... ஆமாம். தமிழக முதல்வர் போல், குடும்பத்துடன் தனி விமானத்தில் பறந்து பறந்து, முதலீடுகளை ஈர்க்க பயணிப்பதில்லை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இருக்கும் இடத்தில் அமர்ந்தபடியே முதலீட்டாளர்களை கவர்கிறார்; அதனால் மற்றவர்களுக்கு, 'ஸ்டமக் பர்னிங்!' உ.பார்த்திபன் ஜெயக்குமார், துாத்துக்குடி: 'விளையாட்டுத் துறை அமைச்சராக நான் இருந்த போது, கருணாநிதி என்னைப் பாராட்டினார். நான் இப்போது, உதயநிதியை பாராட்டுகிறேன்...' என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே... அடுத்து, இன்பநிதி விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகிவிடுவார்; அவரது தந்தை உதயநிதி ஸ்டாலினும் இதே வசனத்தை கூறுவார். சரியான விளையாட்டுக் குடும்பம்! * தீபா கவுதம், துபாய்: காங்., ராகுல், டில்லியில் ஒரு கடையில், ஜாங்கிரி சுட பயிற்சி எடுத்துள்ளாரே... அரசியலில் தனக்கு எதிர்காலம் இல்லை என்று, ராகுலுக்கு நன்கு புரிந்து விட்டது. அதனால், ஜாங்கிரி சுட்டு, சமையல் கற்று, பெரிய நட்சத்திர ஹோட்டலில் தலைமை சமையல் நிபுணராக பணியாற்றச் சென்று விடலாம் என, திட்டம் போடுகிறார் போலும்! என்.மோகன், கோவை: பெண்கள் வேலைக்கு போவது சரி தான் என நீங்கள் நினைக்கிறீர்களா?வேலைக்குப் போக வாய்ப்பிருக்கும் அனைத்து பெண்களும், கட்டாயமாக அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு பெண் வேலைக்குச் சென்றால், ஒரு குடும்பமே முன்னுக்கு வர வாய்ப்புள்ளது. மேலும், பெண்களுக்கு அடிப்படை பொருளாதார சுதந்திரமும் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் பிறர் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டாம்! வி.ஜெயசீலி, நெசப்பாக்கம், சென்னை: பேரிடரில் மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற போட்டியில், தமிழக அணி போலீசார், முதலிடம் பெற்றுள்ளது பற்றி...நம் போலீசாருக்கு தான், சீர் செய்யப்படாத மழைநீர் வடிகால்களிலும், குண்டும் குழியுமான சாலைகளிலும், தேங்கும் தண்ணீரில் சிக்கும் மக்களைக் காப்பாற்றி பழக்கமாயிற்றே... அதனால், நம் போலீசார் முதலிடம் பெற்றுள்ளனர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !