உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

மு.நாகூர், சுந்தரமுடையான்: இந்தியாவிலேயே முதன் முறையாக புற்றுநோயை தடுக்க, தமிழகத்தில், 8 வயது முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட உள்ளது குறித்து... மிகவும் சிறப்பு! தமிழக முதல்வருக்கு பல சபாஷ் போடுவோம்! எம்.பாக்கியலட்சுமி, புதுச்சேரி: ஒரு காலத்தில், நாட்டின் அரசியலை முழுவதும் கட்டுப்படுத்திய காங்கிரஸ், இன்று தொடர்ச்சியான தோல்விகளை சந்திப்பது ஏன்? இந்திரா, ராஜீவுக்குப் பின், தலைமைப் பொறுப்பை ஏற்ற சோனியாவுக்கோ, மகன் ராகுலுக்கோ, கட்சியில் யாரையும் அரவணைக்கத் தெரியவில்லை; நம் நாட்டுக்கேற்ற சமூக பொறுப்பும் இல்லை. காங்கிரசின் கொள்கைகள் எதுவுமே சரியில்லை என்பதும், மக்களுக்குப் புரிந்து விட்டது; ராகுல் கையில் கட்சி இருந்தால் சரிப்படாது என்பதையும் உணர்ந்து விட்டனர்! ஆர்.பிரகாஷ், பொன்மலை, திருச்சி: பீஹாரில், பா.ஜ., அதிக இடங்களைப் பிடித்தும், நிதிஷ்குமாரையே மீண்டும் முதல்வர் ஆக்கியுள்ளதே... பீஹாரில் லாலு கட்சியின் அராஜகத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு, நிதிஷ்குமார் நல்ல மனிதராக தென்படுகிறார். மக்களின் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். அவரை முன்னிறுத்தியதால், பா.ஜ., பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. அதனால், இந்த முறையும் நிதிஷ்குமார்!* டி.எல்.குமார், விழுப்புரம்: 'ஊடகங்கள் தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றல்...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்... இன்னும் ஆறே மாதங்கள்... சட்டசபை தேர்தல் வருகிறது! நடுநிலை நாளிதழ்களின் ஆதரவு தேவையாச்சே... அதனால், இப்படி பேசுகிறார்! * என்.இளங்கோவன், மயிலாடுதுறை: 'பீஹாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள், தமிழகத்தில் வசித்து வந்தால், அவர்களை புதிய வாக்காளர்களாக தமிழகத்தில் சேர்த்துக் கொள்வோம்...' என்று கூறுகிறதே, தேர்தல் ஆணையம்... அவ்வளவு தான்... இனி, பீஹாரிகள் ஆதரவு பிரசாரம், தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கும்! 'பானி பூரி விற்பவர்கள் பீஹாரிகள்' என, கிண்டலடித்தவர்கள், தம் நிலையை மாற்றிக் கொண்டு, 'எங்களுக்குப் பிடித்த உணவு பானிபூரி தான்...' என்று சொல்வர்; தெருத் தெருவாக நின்று, பூரியில், 'பானி' ஊற்றிக் காட்டி போட்டோவுக்கு, 'போஸ்' கொடுப்பர்!டி.சிவகுமார், திண்டுக்கல்: யு.பி.எஸ்.சி., மூன்று பேரை சிபாரிசு செய்தும், தமிழக அரசு, புதிய டி.ஜி.பி., நியமனத்தில் காலம் தாழ்த்துவது ஏன்?தமிழக அரசுக்கு தோதான அதிகாரிகளின் பெயர், அதில் இடம் பெறவில்லை என்பதால் தான்! கா.பசும்பொன், மதுரை: பிரசாந்த் கிஷோரால் ஏன், பீஹார் தேர்தலில் ஜொலிக்க முடியவில்லை? மற்ற கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்தவர், பிரசாந்த் கிஷோர். 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதை, பீஹார் தேர்தல் மூலம் உணர்ந்து கொண்டார்! பெரிய கோழி முட்டை அல்லவா பெற்றிருக்கிறார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !