உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

கே.முருகேசன், தஞ்சாவூர்: 'சில கசப்பான மருந்தை, தலைவர்கள் சாப்பிடத் தயாரானால் தான், காங்கிரசை வளர்க்க முடியும்...' என, அக்கட்சியின், கார்த்தி சிதம்பரம் சொல்கிறாரே... கார்த்தி சிதம்பரத்தையும் சேர்த்து, செல்வப்பெருந்தகை உட்பட காங்கிரசில் பல தலைவர்களுக்கும் இந்த கசப்பு மருந்து கட்டாயமாக தேவைப்படுகிறது! தங்க.சிவபாலன், சென்னை: நண்பர் ஒருவர், 'ஆன்லைன் ஆப்' மூலம் நிறைய லோன் வாங்கி, அதை கட்ட முடியாமலும், வேறு லோன் வாங்கி அடைக்க முடியாமலும் திண்டாடுகிறார். என்ன செய்வது?தவறான பாதையில் சென்று விட்டார், உங்கள் நண்பர்; நல்ல ஆடிட்டர் ஒருவரைப் பார்த்து, கடன்களை அடைக்கும் வழியைப் பார்க்கச் சொல்லுங்கள். 'ஆன்லைன் ஆப்'களில் சிக்கி, புதை குழியில் விழுவது நல்லதல்ல. வாழ்க்கையைத் தொலைப்பதை விட, சம்பளத்துக்கேற்ற செலவு செய்வது புத்திசாலித்தனம்! கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: ஒருவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய, சீனாவில், மொபைல் போன், 'ஆப்' ஒன்றை, அறிமுகம் செய்துள்ளனரே? இந்த செயலியை, நம் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தினால், நாட்டில் பல கட்சிகள், தேர்தலில், 'டிபாசிட்' இழக்கும் நிலைக்குச் சென்று விடும்! * கே.சிவா, நெல்லை: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், புகார் பெட்டி வைக்கப்பட்டதே... அது என்ன ஆனது? அதன் சாவி தொலைந்து விட்டது போலும்! அதனால் தான், முதல்வர் ஸ்டாலின், 'உங்கள் கனவை கூறுங்கள்' என்ற புது திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் தினம் அறிவிக்கும் திட்டங்களை எண்ணினால், கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்து விடுவார் என தோன்றுகிறது. இவர் அறிவிக்கும் எந்த திட்டமும், நடைமுறைக்கு வராமலேயே போகிறது அல்லது பாதியில் நிறுத்தப்படுகிறது! 'புகார் பெட்டி சாவி கிடைத்து விட்டது' என்ற கனவு வேண்டுமானால், யாருக்காவது வந்து, ஸ்டாலினிடம் கூறலாம்!எம்.கல்லுாரிராமன், ராமநாதபுரம்: 'எதிரியே இல்லை என நினைக்கும், தி.மு.க., நான் ஒருத்தி இருப்பதையே மறந்து விட்டது...' என, ஜெயிலுக்கு சென்று வந்த, சசிகலா கூறி உள்ளாரே...'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு' போல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவில், ஆடிக் கொண்டிருந்தார், சசிகலா. இப்போது, 'புஸ்... புஸ்...' என்ற சத்தம் கூட வராத ரப்பர் பாம்பாக உள்ளார். ஆனாலும், தன்னிலை புரியாமல் அறிக்கை விடுகிறார், பாவம்! பெ.பொன்ராஜபாண்டி, மதுரை: பொங்கல் பண்டிகையை உலகளாவிய திருவிழா என்று பெருமைப்படுத்திய, பிரதமர் மோடி பற்றி... பொங்கல் பண்டிகை, நாடு முழுவதும், பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அதைத்தான், நம் பிரதமர் பெருமையாகக் கூறியுள்ளார். 'திராவிட மாடல் பண்டிகை' என, உரிமை கொண்டாட வேண்டாம் என்பதை, சொல்லாமல் சொல்கிறார்! * பா.ஜெயக்குமார், வேம்பார், துாத்துக்குடி: நாட்டில், '16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இணையதளத்தை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்...' என, சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளதே... மிகச் சரியான தீர்ப்பு! உலகம் முழுதும் அமல்படுத்த வேண்டிய திட்டம் இது. சிறார்களின் குற்றங்கள் குறையும். தங்களை, 'ரவுடி ஹீரோ'வாக நினைத்து, கொடூர செயல்களை செய்து, வீடியோ எடுத்து வெளியிட்டு, மற்றவர்களையும் நாச வேலைக்கு துாண்டும் போக்கு குறையும். புத்தகம் வாசிப்பது, தங்கள் திறனை வளர்த்துக் கொள்வது என, சிறுவர்கள் முன்னேறத் துவங்கி விடுவர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !