அந்துமணி பதில்கள்!
ஜி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை: பேரிடர் மேலாண்மையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான பார்லி., நிலைக்குழு பாராட்டி இருப்பது குறித்து... தமிழக பேரிடர் மேலாண்மை குழுவிற்கு பெரிய அங்கீகாரம். இதனால், அவர்கள் உத்வேகம் பெற்று, ஆண்டுதோறும் முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்! கே.மாரிமுத்து, ராஜபாளையம்: 'மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்குவேன்...' என, முதல்வர் விஜய் பேசி இருக்கிறாரே... மக்களின் முதல்வராக இருக்க ஆசைப்படுகிறார். அதைச் செயல்படுத்தவும் முனைவார் என, எதிர்பார்ப்போம்! எம்.மனோகரன், ராமநாதபுரம்: முன்பு, தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, லாட்டரி அதிபர்களிடம் கட்சி நிதி பெற்றது உண்மையா, அந்துமணி? 'உண்மை தான்...' என, உதயநிதியே சட்டசபையில் மறைமுகமாக ஒத்துக் கொண்டாரே, மனோகரன்! * கே.ஆர்.பத்மா, வேளச்சேரி, சென்னை: 'சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.,களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு, விரைவில் செயல்பாட்டுக்கு வரும்...' என, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்துள்ளாரே... அதேபோல், சட்டசபை முடிவுறும் வரையில் இல்லாமல் வெளிநடப்பு என்று கூறி, 'எஸ்கேப்' ஆகும், எம்.எல்.ஏ.,க்களுக்கு, அரைநாள் சம்பளம், 'கட்' எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்! வி.சிவபரமு, தஞ்சை: ' கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுத்து திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும்...' என, முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதி உள்ளாரே... நல்ல விஷயம் தானே... நடக்கட்டும். முந்தைய முதல்வர்கள் போல், காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று மட்டும் எழுதாமல், நதிநீர் இணைப்பை முன் வைத்துள்ளார்; நடக்கும் என நம்புவோம்! ஜி.பாக்கியலட்சுமி, பாலக்காடு, கேரளா: வாழ்நாள் சேமிப்பு தொகை, 60 லட்சம் ரூபாயை, இந்திய ராணுவத்துக்கு உயில் எழுதி, மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணனிடம் வழங்கிய, ஓய்வு பெற்ற மில் தொழிலாளி, சுப்பையாவுக்கு, ஒரு, 'ராயல் சல்யூட்' அடிக்கலாமா... 'தனம் தந்தார்; தன்னையும் தந்தார்' என, நம் நாளிதழில் பாராட்டி இருந்தோமே, படித்தீர்களா... எப்பேர்ப்பட்ட பெருந்தன்மையானவர்! 'ராயல் சல்யூட்' அடிப்போம் அவருக்கு! பா.ஜெயப்பிரகாஷ், தேனி: 'அமித்ஷாவின் பெயரைக் கேட்டாலே பயங்கரவாதிகளே நடுங்குவர்...' என்று மத்திய அமைச்சர், கிரண் ரிஜிஜு கூறியது குறித்து... பிரதமர் மோடியின் மனசாட்சி தான், அமித்ஷா. 'டேர்டெவில்' என, ஆங்கிலத்தில் கூறுவரே... அதுபோல, யாருக்கும், எதற்கும் அஞ்சா நெஞ்சர். பயங்கரவாதிகளுக்கு அவர், சிம்ம சொப்பனம் தான்! * பா.அனுமந்த்ரா, சென்னை: 'தொட்டுப்பார்...' என, அடிக்கடி கூறி வந்த தி.மு.க., ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரான தன் மகன் கைதானபோது, தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கு, தி.மு.க., தொண்டர்கள், திரண்டு ஆர்ப்பாட்டம் செய்யாததை கண்டு என்ன கருதி இருப்பார்?அதிர்ச்சியாகி இருப்பார். அதைவிட, உதயநிதியின் நண்பர்கள், அன்றைய தினம் அவரை உதறிவிட்டதால், அவரும் படு, 'அப்செட்' ஆகி விட்டாரே!