உள்ளூர் செய்திகள்

கேப்டன் விஜயகாந்த்! (10)

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த், ராதிகா கூட்டணியில் வெளியானது, நீதியின் மறுபக்கம் படம். விஜயகாந்தின், 50வது படமாக, 1985ல், எல்லா ஊர்களிலும் சிறப்பாக ஓடி, பிரமாதமாக வசூலித்த வெற்றி சித்திரம். விஜயகாந்த் - ராதிகா ஜோடிக்கு வரவேற்பு பெருக துவங்கியது. கடந்த, 1986ம் ஆண்டை, விஜயகாந்தின் ஆண்டு என்று சொல்லலாம். ராம.நாராயணனின், கரிமேடு கருவாயன் படம் அதற்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. விஜயகாந்துடன், சட்டம் ஒரு இருட்டறை துவங்கி, தொடர்ந்து ஏராளமான படங்களில் வில்லனாக மோதியவர், சங்கிலி முருகன். சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் இல்லை. ஆனாலும், துணிந்து விட்டார். விஜயகாந்த் நடிக்கிறார் என்றாலே, வினியோகஸ்தர்கள் கொட்டிக் கொடுக்க காத்திருக்கின்றனர். பிறகு தாமதிப்பானேன். தயாரிப்பாளர்களின் ரட்சகனாக, ராம.நாராயணன் கோலோச்சிய பொற்காலம். சங்கிலி முருகனும், ராம.நாராயணனிடம் சரண் புகுந்தார். அவரது, மீனாட்சி ஆர்ட்ஸின், கரிமேடு கருவாயன் படம், மலையூர் மம்பட்டியான் மாதிரியான கதை; குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக உருவானது. படத்தை பார்த்த, விஜயகாந்த் அசந்து போனார். எல்லா சென்டர்களிலும் வசூல் மழை பொழியும் என்று கண்டிப்பாக தெரிந்தது. மதுரை ஏரியாவை தனக்காக கேட்டார், விஜயகாந்த். சங்கிலிக்கு அதில் ஒரு தர்ம சங்கடம். மதுரையில் அவரே வினியோகிக்க விரும்பினார். அவருக்கும், அதுவே, பிறந்த பூமி. பொதும்பு முருகன் என்பதே சங்கிலியின் பூர்வீகப் பெயர். எத்தனையோ பட அதிபர்கள் வரிசையில் நிற்கும் போது, விஜி தனக்கு முன்னுரிமை கொடுத்தது நினைவில் வந்தது. 'ஹீரோ'வின் ஒத்துழைப்பை மதித்து, விட்டுக் கொடுத்தார். விஜயகாந்த், 'ஆண்டாள் அழகர் மூவிஸ்' என்ற வினியோக நிறுவனத்தை துவங்கினார். அதன் முதல் வெற்றி வெளியீடு, கரிமேடு கருவாயன். இப்படத்தின் காட்டுத்தனமான வசூலால், விஜயகாந்தின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. க மலஹாசனின், ஆப்த சிநேகிதர் ஆர்.சி.சக்தி. அவரது இயக்கத்தில், கமலும், விஜயகாந்தும் இணைந்து நடிக்கின்றனர் என்றதும், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. அம்பிகா - ராதாவின் திறமையை மையப்படுத்தி, எழுதப்பட்டது, மணக்கணக்கு திரைக்கதை. கமல் - சினிமா டைரக்டராகவும், அவரது ஒளிப்பதிவாளராக, விஜயகாந்தும் இணைந்து நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த ஒரே படமும் அதுதான். 'சிடுமூஞ்சி ரமணா' என்ற வித்தியாசமான வேடத்தில், மனைவியை பறிகொடுத்து, பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்புள்ள அப்பாவாக, விஜயகாந்த் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த மாறுபட்ட கு ணச்சித்திர நடிப்பு, தாய்க்குலங்களை வெகுவாக ஈர்த்தது. குடும்பப் பெண்களிடையே, விஜயகாந்த் பேசுபொருளாக மாற, மணக்கணக்கு திரைப்படம் உதவியது. அடுத்து, விஜயகாந்த் நடித்த, அம்மன் கோவில் கிழக்காலே படம் ஏப்., 24, 1986ல், வெளியானது. இசைஞானியின், 350வது திரைசித்திரம் என்று பட விளம்பரங்கள் பறைசாற்றின. கங்கை அமரனின் பாடல் வரிகள் மற்றும் இளையராஜாவின் இசை என்று பாவலர் சகோதரர்களின் பங்களிப்பு, அம்மன் கோவில் கிழக்காலே படத்துக்கு அஸ்திவாரமாக அமைந்தது. சின்னமணியாக, விஜயகாந்த். கண்மணியாக, ராதா; முதன்முதலாக இருவரும் இணைந்து போட்டி போட்டு நடித்தனர். விஜயகாந்தின் முழுத் திறமையையும் வெளிக்கொணர்ந்த படமாக, அம்மன் கோவில் கிழக்காலே படத்தை சொல்லலாம். விஜயகாந்த் படம் என்றால், ஒரே சண்டைக்காட்சிகளாக இருக்கும் என்று நினைத்த தாய்க்குலங்களின் எண்ணத்தை, இப்படம் அடியோடு மாற்றியது. படம், 25 வாரங்கள் ஓடியது. 'பிலிம்பேர்' மற்றும் 'சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளால், 1986 ஆம் ஆண்டின் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றார், விஜயகாந்த். தி ரைப்படக் கல்லுாரி மாணவர்கள் என்றால், அவர்கள் ஜனரஞ்சகமற்ற, அக்ரஹாரத்தில் கழுதை, அவள் அப்படித்தான் போன்ற படங்களையே தயாரிப்பர், இயக்குவர் என்ற கருத்து நிலவிய காலம். அதை உடைத்தெறிய வேண்டும் என்று கிளம்பினார், 'பிலிம் இன்ஸ்டிட்யூட்'டில் படித்த மாணவரான, ஆபாவாணன். நடிகர் அருண் பாண்டியனின் வகுப்பு தோழர். அப்பா - ஆறுமுகம், அம்மா - பாவாயி. மகன் சின்னசாமி. பெற்றோருக்கு மரியாதை தரும் வகையில், தன் பெயரை, தாய் - தந்தையின் முதல் எழுத்துக்களை சேர்த்து, ஆபாவாணன் என்று வைத்துக்கொண்டார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கண்ணதாசனுக்கும் முன்பே, தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் பாடலாசிரியர், மருதகாசி. அவரது சொந்தத் தம்பி மகன், ஆர்.அரவிந்த்ராஜ். ஆபாவாணனின் நெருங்கிய சகா. சத்யஜித்ரேயின் ரசிகனாக இருந்த தன் நண்பரை, 'கமர்ஷியல் ரூட்'டுக்கு அழைத்து வந்தார், ஆபா. படித்து முடித்த கையோடு சினிமா வினியோகஸ்தராகவும், திரை வணிகத்தில் ஈடுபட்டார், ஆபாவாணன். இருவரும் சேர்ந்து எல்லாரும் வியக்கும் வண்ணம், 'சஸ்பென்ஸ் திரில்லர்' திரைப்படம் ஒன்றை உருவாக்க வேண்டும் என சிந்தித்தனர். கல்லுாரியில் படித்த போது, 'மர்டர் எக்கோ' என்ற குறும்படத்தை இயக்கி, தயாரித்திருந்தார், ஆபாவாணன். அதையே மேம்படுத்தி, திரைக்கதையாக எழுதினார். அதில், துப்பறியும், டி.எஸ்.பி., தீனதயாளன் கதாபாத்திரம் வலுவானது. நடுத்தர வயதுள்ள, காதோரம் நரைத்த கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடம். அந்த வேடத்துக்கு தேர்ந்த நடிகரான, சிவகுமார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. தீர்ப்புகள் திருத்தப்படலாம் படம் மிகக் கு றைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, 'சஸ்பென்ஸ்' படம். 'ஹீரோ' சிவகுமார். சரிந்து கிடந்த, அவரது மார்க்கெட்டை மீட்டெடுத்தது; சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது. சிவகுமாரை தேடி சென்றார் ஆபாவாணன். எங்கேயும், எப்போதும் அகலக்கால் வைக்க மாட்டார், சிவகுமார். கோலிவுட்டின், 'முன் எச்சரிக்கை முனுசாமி. ஆபாவின் கதையைக் கேட்கக்கூட விரும்பவில்லை. 'இப்பத்தான் மறுபடியும் நல்ல பேரு கிடைச்சிருக்கு. சிந்து பைரவி படம் சூப்பரா ஓடுது. புதுசா நாலு படம், 'புக்' ஆகியுள்ளது. இந்த நேரத்தில், முன் பின் தெரியாத சின்னப்பசங்களை நம்பி நடிக்கலாமா?' என்று நினைத்தார், சிவகுமார். ஆபாவாணனுக்கும், ஆர். அரவிந்த் ராஜுக்கும் அப்போது நெருக்கமாக இருந்தவர் நடிகர், வாகை சந்திரசேகர். அவருக்கு ஓரளவு, ஆபாவாணன் எடுக்க இருந்த படத்தின் கதை தெரியும். அவருக்கு சந்திரசேகர் ஒரு ஆலோசனை கூறியதும், திகைத்துப் போனார், ஆபாவணன் அது என்ன ஆலோசனை? - தொடரும் பா. தீனதயாளன்நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 72000 50073


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !