கேப்டன் விஜயகாந்த்! (13)
நடிகர் ரஜினிகாந்தை தேடிச்சென்ற, இயக்குனர் கே.சங்கரிடம், 'நீங்க என்னை தேடி வரலாமா...' என்று பவ்யமாக பேசி, 'கால்ஷீட்' தராமல் காரில் ஏற்றி, வழியனுப்பி வைத்தார், ரஜினி. அந்த வடுவை அழிக்க, இயக்குனர் கே.சங்கருக்கு, ஆண்டுதோறும், 'கால்ஷீட்' கொடுத்து, மருந்து தடவி விட்டார், விஜயகாந்த். கடந்த 1985ல், நவக்கிரக நாயகி, 1986ல், நம்பினார் கெடுவதில்லை , மார்ச் 1987ல், வேலுண்டு வினையில்லை , படங்களில் நடித்து இயக்குனர் கே.சங்கருடன் தொடர்ந்து பணியாற்றினார், விஜயகாந்த். ஒரு தலைமுறை இடைவெளிக்கு பின், அந்த கந்தர்வ கானத்தை தீபன் சக்கரவர்த்தி, விஜயகாந்துக்காக பாடினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்க, வேலுண்டு வினையில்லை படத்தில், கனவுக் காட்சியில் வேடுவனாக நடித்தார், விஜயகாந்த். அவருக்கு ஜோடியாக நடித்தார், அம்பிகா. அம்மன் கோவில் கிழக்காலே மற்றும் ஊமை விழிகள் படங்களுக்கு பின், விஜயகாந்தின் வளர்ச்சி, உச்சம் தொட்டது. பைரவி படம் துவங்கி, கலைப்புலி எஸ்.தாணு, ரஜினியின், 'கால்ஷீட்'டுக்கு அலைந்து கொண்டிருந்தார். ஒன்பது ஆண்டுகள் கடந்தும், தாணுவுக்கு ஒப்புதல் தரவில்லை ரஜினி. 'அமிதாப் நடித்த, காலியா ஹிந்தி படம், 'சூப்பர் ஹிட்' அந்தபடத்தின், 'ரைட்ஸ்' வாங்கி, முதல்ல விஜியை வச்சு படம் எடுங்கள். அந்த சப்ஜெக்ட், விஜிக்கு பொருத்தமாக இருக்கும். நாம அடுத்து, 'வொர்க்' பண்ணலாம்...' என்றார், ரஜினி. ரஜினியின் வார்த்தையை தட்டிப் பேசும் தைரியம், தாணுவுக்கு கிடையாது. ராவுத்தரை சந்தித்து விஷயத்தை சொன்னார். எந்த திருநாளுக்காக, 'ரோகிணி லாட்ஜ்' தவம் கிடந்ததோ, அந்த சுப தினம் உதயமாகியது. என்ன தொழில் செய்தாலும், ஒருவருக்கு மகுடம் சூட்டுவது அவரது தனிநபர் வருமானம் மட்டுமே. அதுவரையில், விஜயகாந்த் வாங்கி கொண்டிருந்த சம்பளத்தை போன்று, மூன்று மடங்கு சம்பளம் உயர்த்தி கேட்டார், ராவுத்தர். புன்னகை மாறாமல் ஒப்புக்கொண்டார், தாணு. கூலிக்காரன் பட பூஜையே அதிரடியாக ஆரம்பித்தது. தாணுவின் வழக்கமான, கருப்பு - வெள்ளையில், பிரமாண்டமான கூலிக்காரன் பட போஸ்டர்கள் தலைநகரத்தின் சுவர்களை முழுமையாக ஆக்கிரமித்து, மக்களை வியக்க வைத்தது. ரஜினியின் சிபாரிசு என்பதால், கூலிக்காரன் படத்தை இயக்க, இயக்குனர் ராஜசேகரை அழைத்தனர். அவரும் தமிழுக்கு ஏற்றவாறு புதிய திரைக்கதை எழுதினார். பாடல்கள் மற்றும் இசை டி.ராஜேந்தர். விஜயகாந்தும், ரூபிணியும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். வழக்கமான, விஜியின் படங்கள், 60 லட்ச ரூபாய்க்கு விற்பனையாவது வழக்கம். ஆனால், கூலிக்காரன் திரைப்படம் முதன் முதலாக, ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு போட்டி போட்டு வாங்கப்பட்டது. கூலிக்காரன் திரைப்படம் வெளியாகி, விஜயகாந்தை புதிய உச்சத்துக்கு கொண்டு சேர்த்தது. 'வெச்சக்குறி தப்பாது இந்தப் புலி தோற்காது...' என்று, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ஆடிப் பாடினார், விஜயகாந்த். பைரவி படத்தின் மூலம், ரஜினியை சுவரொட்டிகளில், 'சூப்பர் ஸ்டார்' ஆக்கியவர், தாணு. கூலிக்காரன் டைட்டிலில், விஜயகாந்துக்கு, 'புரட்சி கலைஞர்' என்று புதிய பட்டம் வழங்கி சிறப்பித்தார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில், கூலிக்காரன் படத்தின், 100வது நாள் விழா கொண்டாடப்பட்டது. திரையுலகில், விஜயகாந்துக்கான சம்பளம் ஏறிக்கொண்டே இருந்தது. பட வினியோகத்தை தொடர்ந்து, சொந்தமாக சினிமா தயாரிக்கும் எண்ணம் விஜயகாந்திற்கு நாளுக்கு நாள் வலுத்தது. ஊமை விழிகள் விஸ்வரூப வெற்றி ஏற்படுத்திய தாக்கம், தன் முதல் படத் தயாரிப்பை ஆபாவாணன் - ஆர்.அரவிந்த்ராஜ் கூட்டணி வசம் ஒப்படைத்தார், விஜயகாந்த். 'ராவுத்தர் பிலிம்ஸ்' பேனரில், விஜயகாந்த் - ராவுத்தர் இணை முதன் முதலாக படத் தயாரிப்பிலும் இறங்கியது. உழவன் மகன் வரைமுறையற்ற பொருட்செலவில் மிக பிரமாண்டமாக, 'சினிமாஸ்கோப்'பில் உருவானது. மேட்டுக்குடி சீமான்களின் அகம்பாவத்தை எடுத்துக் காட்டி, ஏழைகளின் மேன்மையை உரக்க சொன்னது, உழவன் மகன். திரைப்படக் கல்லுாரிகள் புதிய தொழில்நுட்பத்தை மட்டுமே கற்றுத்தரும். எம்.ஜி.ஆர்., படங்கள் கல்லா கட்டும் வெற்றிக்கான நிரந்தர ஏணிப்படிகள். எம்.ஜி.ஆர்., ரசிகன் எதையெல்லாம் விரும்புவானோ, அதை விஜயகாந்த் செய்வதாக காட்டியது, உழவன் மகன். கதை, திரைக்கதை, இணை இசை, பாடல்கள் அனைத்துக்கும் பொறுப்பாளி, ஆபாவாணன். இயக்கம் மட்டும், ஆர்.அரவிந்த்ராஜ். 'பொன் நெல் வேலிக் கரையோரம் பொழுது சாயும் நதியோரம்...' என்ற, ஆபாவணன் வரிகளில் அந்தப் பாடல், ஆறு நிமிடங்களுக்கு மேல் நீண்டது. நுாற்றுக்கணக்கான வாத்தியக் கருவிகள் சங்கமிக்க, மனோஜ் கியான் இசையில் சரித்திரம் படைத்தது. பின்னணி பாடகர், மலேஷியா வாசுதேவனுக்கு மகுடம் சூட்டிய பாடல்களில் அதுவும் ஒன்று. அந்தப் பாடலே, உழவன் மகன் படத்தின் அறிமுகக் காட்சி. அப்பாடல் காட்சியில், நுாறு இரட்டை மாட்டு வண்டிகள் இடம் பெற்றன. அறுவடை முடிந்து குடியானவப் பெண்களும், ஆண்களும் ஆனந்தமாக ஆடிப்படி வருவதாகப் பாடல் காட்சி தீர்மானிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைமை தாங்கி, மிக உற்சாகமாக பாடி வருவார், விஜயகாந்த். ஆபாவும், டி.எம்.சவுந்தரராஜனின் தீவிர ரசிகர். 'உன்னை தினம் தேடும் தலைவன் கவி பாடும் கலைஞன்...' என, துவங்கும் பாடலை, டி.எம்.எஸ்., வழக்கமான கம்பீரத்துடன் முழங்கினார். புரட்சி நடிகராக, புரட்சி கலைஞரை உருவாக்க, உழவன் மகன் திரைப்படம் முதல் உரம் போட்டது. அண்ணன் கிராமத்தான். தம்பி நாகரிக யுவன் என, விஜயகாந்துக்கு இரட்டை வேடங்கள். மூத்தவன் சின்னதுரை, இளையவன் சிவா. கருப்பு வெள்ளை காலத்து, எம்.ஜி.ஆர்., - பானுமதி ஜோடி போல, விஜயகாந்த் - ராதிகா இருவரும் ஜோடியாக வெற்றி வலம் வந்தனர். உழவன் மகன் படத்தில், ராதிகா இடம் பெறுவது காலத்தின் கட்டாயம் என்றானது. அடுத்தடுத்து, முதல் மரியாதை, அம்மன் கோவில் கிழக்காலே மற்றும் நினைவே ஒரு சங்கீதம் என்று வெள்ளிவிழா நாயகியாகி முன்னணியில் இருந்தார், ராதா. அவர் இன்னோர் நாயகி. 'விஜயகாந்த் - ராதா நீச்சல் குளத்தில் இரவில் ஆடிப்படுவதாக ஒரு பாடல் காட்சி இடம் பெற செய்யலாமே...' என, ஆபாவணன் யோசித்தபோது, விஜயகாந்த் என்ன செய்தார்? - தொடரும் பா. தீனதயாளன்நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073