உள்ளூர் செய்திகள்

கேப்டன் விஜயகாந்த்! (17)

செந்தூரப்பூவே படத்தின், 'க்ளைமேக்ஸ்' காட்சியில் இடம்பெற்ற ரயில் சண்டைக்குஅபாரமான வரவேற்பு கிடைத்தது.'கடைசி சில நிமிடங்களை நீங்கள் ரயிலுக்கென ஒதுக்கி விடுங்கள். எத்தனை, 'ஆங்கிள்'கள், எத்தனை வகை சண்டைகள்! சற்றே திகட்டிப் போனாலும், சமீபத்திய தமிழ் படங்களில் இவ்வளவு நீளமான, நாற்காலி முனைக்கு கொண்டு வருகிற, 'கிளைமேக்ஸ்'எடுக்கப்பட்டதில்லை ...' என்று, விமர்சனம் எழுதியது, 'கல்கி' இதழ்.விஜயகாந்தின் காதலியாக நடித்திருந்ததார், நடிகை, ஸ்ரீப்ரியா. கடந்த, 1970களின், கவர்ச்சி நாயகியான, விஜயலலிதா வித்தியாசமான வில்லியாக, விஜயகாந்துடன் மோதினார்.நடிகர், ராம்கி - நடிகை, நிரோஷா காதல் வாழ்க்ககைக்கு பிள்ளையார் சுழி போட்டது, 'செந்துாரப்பூவே...' பாடல். படத்தின் வெளிப்புறக் காட்சிகள் கேரள மாநிலத்தின், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள, நிலாம்பூரில் படமாக்கப்பட்டன. இயற்கை அன்னையின் எழில்கொஞ்சும் இடம், நிலாம்பூர். மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள், தேக்குமரத் தோட்டங்கள் என, அத்தனையும் இப்படத்தில் அருமையாக படம் பிடிக்கப்பட்டிருந்தது.செந்துாரப்பூவே படத்தில் நடித்ததற்காக, தமிழக அரசின் சிறந்த நடிகர் பரிசு முதன் முதலாக விஜயகாந்துக்கு கிடைத்தது. 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழ், சிறந்த குணச்சித்திர நடிகராக, விஜயகாந்தை தேர்வு செய்து, விருது வழங்கியது.ஆர்.கல்யாணசுந்தரம் செல்வமணி, செங்கல்பட்டுக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் உள்ள, திருமுக்கூடலைச் சேர்ந்தவர். கல்வியும், கண்டிப்பும் நிறைந்த ஆசிரியர் குடும்பத்தின் வாரிசு. பருவ வயது வரை பார்த்த சினிமாக்கள் மிக சொற்பம். அம்மா முதன்முதலில் அழைத்து சென்று காட்டிய படம், துலாபாரம்.பெற்றோரின் பேராதரவோடு, திரைப்பட கல்லூரியில் சேர்ந்து, இயக்குனர்களுக்கான பாட பிரிவில் பட்டம் பெற்றார், ஆர்.கே. செல்வமணி. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனர் உத்தியோகம் கிடைத்தது. நடிகர், சத்யராஜ் நடித்த, ஐந்து படங்களில்,அடுத்தடுத்து வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சத்யராஜை, 'ஹீரோ'வாக நடிக்க வைத்து, தானும் இயக்குனராக எட்டி விடலாம் என்ற எண்ணம் அவரை துாங்க விடவில்லை.இயக்குனர், மணிவண்ணனுக்கும், நடிகர், சத்யராஜுக்குமான தோழமையில், உதவி இயக்குனரான, செல்வமணி உரிமை எடுத்துக் கொண்டார். குருவிடமே சென்று, தனக்காக, சத்யராஜிடம் பேசி, 'கால்ஷீட்' வாங்கித் தருமாறு கேட்டார், செல்வமணி. தன்மையாக மறுத்து விட்ட மணிவண்ணன், சிநேகிதத்தின் எல்லை அறிந்தவர். 'சத்யராஜின் தொழில் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை எனக்கு கிடையாது...' என்ற உண்மையை எடுத்துரைத்ததார், மணிவண்ணன்.நேரிடையாக, நடிகர், சத்யராஜை சந்தித்தார், செல்வமணி. அவரது ஆலோசனைப்படி, மீண்டும், மணிவண்ணனிடமே உதவி இயக்குனராக பாடம் பயில சென்றார்.செல்வமணியின் நல்ல நேரம், மணிவண்ணன் இயக்கத்தில், விஜயகாந்த் மற்றும் நடிகை, ராதா நடிக்க, உள்ளத்தில் நல்ல உள்ளம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.விஜயகாந்தால் தனக்கு நல்லவழி பிறக்கும் என்ற நம்பிக்கை, செல்வமணிக்கு தோன்றியது.பொன்முட்டையிடும் வாத்து, விஜயகாந்த். அவரது, 'கால்ஷீட்' கிடைத்தால் போதும். ஒரே இரவில் இந்திரனாகி விடலாம் என்பது கோலிவுட் எஜமானர்களின் ஒருமித்த எண்ணமாக இருந்த காலகட்டம் அது. சில தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டார், செல்வமணி. அத்தனை பேரும் ஒரே பதிலாக, 'விஜயகாந்திடம், 'கால்ஷீட்' வாங்கிட்டு வாங்க பார்க்கலாம்...' என்றனர். விஜயகாந்தை பார்த்து தன் நிலைமையை எடுத்து சொன்னார், செல்வமணி.'தம்பி உங்க ஆர்வத்தை நான் பாராட்டறேன். ஆனா, இன்னும் ரெண்டு ஆண்டுக்கு, நான் புதுசா எதிலேயும், 'கமிட்' ஆக முடியாது. நீங்க வேணும்ன்னா, என், நண்பன், ராவுத்தர் கிட்ட உங்க, 'சப்ஜெக்ட்'டை சொல்லுங்க. என் சம்பந்தமா எல்லா முடிவையும் ராவுத்தர் தான் எடுப்பான். அவனுக்கு ஓ.கே.,ன்னா நீங்க, என் சொந்த பேனர்லயே படம் பண்ணலாம்...' என்றார், விஜயகாந்த்.ராவுத்தரை சந்திப்பதை நினைத்தாலே, செல்வமணிக்கு சிம்ம சொப்பனமாக தோன்றியது. வேறு வழியும் இல்லை. ஒருநாள், ராவுத்தரிடம் போய் நின்றார். ராவுத்தரும், 'இப்ப முடியவே முடியாது. விஜி கரெக்டா தான் சொல்லியிருக்கான். எதுக்கும் வந்து போயிட்டு இருங்க...' என்றார்.அதை இறுக பிடித்துக் கொண்டு, விஜயகாந்தின், 'கால்ஷீட்'டுக்காக காத்திருந்தார், செல்வமணி.செல்வமணி புத்திசாலி. மாற்றி யோசித்தார். அவரது அறையில் தங்கியிருந்த நண்பர்களில் ஒருவர், ஓவியர். அவரது பெயர், ஜோதி. உயிரோட்டமான சித்திரங்கள் வரைவதில் கெட்டிக்காரரான, ஜோதி, தன் துாரிகையின் துணையோடு, செல்வமணியின் ஒளிமயமான எதிர்காலத்தை வண்ணக் கோலங்களாக்கினார். டெத் விஷ் என்ற ஆங்கில திரைப்படத்தில், நடித்த நடிகர், சார்லஸ் பிரான்சனின் சாகசங்கள், செல்வமணியை கவர்ந்தன. ஆங்கில நடிகர், சார்லஸ் பிரான்சனின் இடத்தில், விஜயகாந்தை கற்பனை செய்து, காண்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில், 200க்கும் மேற்பட்ட, விஜயகாந்தின் மாறுபட்ட தோற்றங்களை தீட்ட செய்தார்.தன் எண்ணத்தில் உருவான திரைக்கதையில், விஜயகாந்த் எப்படியெல்லாம் தோன்றினால் பிரமாதமாக இருக்கும் என்பதை, ஒரு ஆல்பமாக தயாரித்து, ராவுத்தரிடம் எடுத்து சென்றார்.'இதைப்போலவே, 'ஷாட்'டுகள் எடுக்கலாம், சார்...' என, செல்வமணி சொன்னதை கேட்டு, அசந்து நின்றார், ராவுத்தர். அந்த முயற்சிக்கு துரிதமாக பலன் கிடைத்தது.ஒருநாள், விஜயகாந்த் - செல்வமணி சந்திப்பு நடந்தது. ஆல்பம் விஜயகாந்தையும் அசத்தி இருக்க வேண்டும்.எண்ணி, 40 நாட்களில் படத்தை இயக்கி, முடித்து விட வேண்டும் என்பது, ராவுத்தரின் கறார் நிபந்தனை. அது, சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஒப்புக்கொண்டார், செல்வமணி.அக்., 28, 1988ல், செல்வமணி இயக்க, புலன் விசாரணை படத்தின் பூஜை போடப்பட்டது. 40 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்ட, ராவுத்தர், தன் நண்பனை இன்னும் பெரிய ஸ்டாராக கொண்டு வர, புலன் விசாரணை படம் கைகொடுக்கும் என, பரிபூரணமாக நம்பினார்.அதனால், நாளுக்கு நாள் படத்தின் பிரமாண்டம் கூடியது. விளைவு, 'பட்ஜெட்' எகிறியது. இயக்குனர், செல்வமணியால் இத்தனைப் பெரிய சவாலை ஏற்றுக் கொண்டு பணியாற்ற இயலுமா என்ற சந்தேகமும், ராவுத்தருக்கு வலுத்தது. யோசித்தார், குழம்பினார்.படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்.'செல்வமணி வந்தால் உள்ளே விட வேண்டாம்...' என்றும் கட்டளை பறந்தது. பிறகு என்ன நடந்தது?- தொடரும்பா. தீனதயாளன்நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்தொலைபேசி எண்: 7200050073


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !