உள்ளூர் செய்திகள்

கேப்டன் விஜயகாந்த் (21)

இயக்குனர், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கொடுத்த வாக்குபடி, 25 நாட்கள் தொடர்ந்து நடித்துக் கொடுத்தார், விஜயகாந்த். கடந்த, 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தது, செந்துாரபாண்டி திரைப்படம். எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த் மற்றும் விஜய் கூட்டணிக்கு பெருமை சேர்த்தது. சென்னைப் பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில், 100வது நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. விஜயகாந்தால் மறுவாழ்வு பெற்ற மகிழ்ச்சி. செய்நன்றி மறக்காமல், அவருக்கு சிறப்பான ஓர் ஊதியம் கொடுக்க விரும்பி, ஒரு பெரும் தொகையுடன் புறப்பட்டார், இயக்குனர் சந்திரசேகர். 'சார், சார்... தயவு செய்து, என்னைக் கேவலப்படுத்தாதீங்க. போங்க...' என்று, பணத்தை வாங்க மறுத்து விட்டார், விஜயகாந்த். இயக்குனர், எஸ்.ஏ.சி., எவ்வளவோ வற்புறுத்தியும், விஜயகாந்த் தனக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை. இது நடந்து பல ஆண்டுகளுக்கு பின், விஜயகாந்த் வீட்டையொட்டி, எஸ்.ஏ.சி.,யின் காலி மனை ஒன்று இருந்தது. நீண்ட காலமாக, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 'அதை எங்களுக்கு விற்று விடுங்கள்...' என்று கேட்டபடியே இருந்தார். விஜயகாந்திடமும், 'ஏம்ப்பா, உன் பக்கத்துல நான் இருக்கேன். அது, எனக்கு பெருமைதானப்பா. அதை போய் கேக்குறாங்கப்பா...' என்பார், எஸ்.ஏ.சி., பூரிப்பாக. 'கொடுக்காதீங்க சார், கொடுக்காதீங்க...' என்று, எஸ்.ஏ.சி.,க்கு ஏற்ற விதத்தில் பதில் சொல்லுவார், விஜயகாந்த். விஜயகாந்த் பணம் வாங்கிக் கொள்ளாத உறுத்தல், எஸ்.ஏ.சி.,யை பாடாக படுத்தியது. ஒருநாள், பிரேமலதாவை அழைத்து சென்று, அவர் விரும்பியவாறு, அந்த நிலத்தை அவருக்கே கிரயம் செய்து விட்டார், எஸ்.ஏ.சி., 'விஜிக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது. அவர் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார்...' என, ஏற்கனவே, பிரேமலதாவிடம் எச்சரிக்கை செய்திருந்தார், எஸ்.ஏ.சி., பிரேமலதாவின் பெயரில் பத்திரப்பதிவு நடந்தது. அன்று சென்னையில் ஏதோ படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார், விஜயகாந்த். மதியம் 12:30 மணி வாக்கில் செய்தியை கேள்விப்பட்டு கோபமாக, எஸ்.ஏ.சி.,யின் இல்லத்துக்கு சென்றார். அங்கு, எஸ்.ஏ.சி.,யின் மனைவி, ஷோபாவிடம், தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். 'எங்க இயக்குனர்ன்னு எப்பவும் பெருமையா சொல்லிட்டு இருப்பேன். இப்ப என்னை அவரு கேவலப்படுத்திட்டாரு. பிரதிபலன் பார்க்காம நான் உங்களுக்கு உதவி செஞ்சேன். நீங்க பதிலுக்கு இந்த இடத்தை எங்களுக்கு கொடுத்து, என்னை ரொம்பவே கேவலப்படுத்திட்டீங்க...' என்றார். 'இதோ பாரு விஜி, நான் செஞ்சதுல எந்த தப்பும் கிடையாது. அநேக இடங்கள்ல பணத்தால பிரிஞ்ச சிநேகிதர்கள் தான் அதிகம். நமக்கு அந்த நிலைமை வரக்கூடாது. ஒரு அண்ணனா இருந்து நான் கொடுத்ததை, தம்பியா நீ வாங்கிக்க மாட்டியா. இதுக்குப் போய் ஏன் இவ்வளவு வருத்தப்படுற...' என்று, விஜயகாந்தை தேற்றி வழியனுப்பி வைத்தார், எஸ்.ஏ.சி., செந்துாரப்பாண்டி ப டத்துக்கு பின், விஜய்க்கு என, தனி ரசிகர் கூட்டம் உருவானது. இன்றைக்கு தளபதியாக, விஜய் அடைந்திருக்கும் உயரத்துக்கு உரம் போட்டவர், விஜயகாந்த் என்பது மறுக்க முடியாத, 'கோலிவுட்' சரித்திரம். எ த்தனை முறை தான் காவல்துறை அதிகாரியாகவே நடிப்பது? அடுத்து புதுமையாக எப்படிப்பட்ட, 'ஆக்ஷன்' படம் செய்யலாம் என்று யோசித்தார், விஜயகாந்த். விஜயகாந்தின், 125வது சித்திரம், உளவுத்துறை படம் அதற்கு உதவியது. சென்ற நுாற்றாண்டில் சென்னையில் ஒரு கப்பல், 'மெரீனா' கடற்கரையில் தரை தட்டியது. அதையே கருவாக கொண்டு, உருவாக்கப்பட்ட திரைக்கதை. வழக்கம்போல் திகட்டத் திகட்டப் புதிய தலைமுறைக் கலைஞர்களின் ஒட்டுமொத்த பங்களிப்புடன் உருவானது, உளவுத்துறை திரைப்படம். இயக்குனர், ரமேஷ் செல்வன், பட தொகுப்பாளர், ஜி.கோபிநாத், இசையமைப்பாளர், ஷா ஆகியோர் புதுமுகங்களாக அணிவகுத்தனர். விஜயகாந்தின் அபிமான அரசியல் தலைவர், மூப்பனார். கடந்த, 1996ல், துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பூஜை போட்டு இரண்டாண்டுகள் கடந்து, ஏகோபித்த எதிர்பார்ப்புகளுடன், 1998ல், தை முதல் நாளில் மக்களை மகிழ்விக்க வெளியானது, உளவுத்துறை. கரை தட்டிய கப்பல் அருகே குளிப்பவர்கள், விபத்துக்குள்ளாகி இறப்பதை சர்வதேச கொள்ளைக்காரர்களோடு சம்பந்தப்படுத்தியிருந்தனர். கப்பல் படை அதிகாரியாக நடித்திருந்தார், விஜயகாந்த். கடல் ஆழத்துக்குள் படம் பிடிக்க, லண்டன் தொழில்நுட்பம் கை கொடுத்தது. ஆங்கிலப் படங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய வியப்புக்குரிய காட்சிகள் மற்றும் கடலாழத்தில், விஜயகாந்தின் நடிப்பு ஆச்சரியப்படுத்தியது. கேப்டன் சினிமா என்றால், தாய்க்குலங்களை கவரும் அம்சங்கள் ஏராளமாக இருக்கும். உளவுத்துறை அதற்கு உலை வைத்து விட்டது. பெண்களின் தரவு இல்லாமல், புரட்சி கலைஞரின் 125 படம் மாபெரும் சித்திரமாக அமையவில்லை. பரவலாகப் பத்து வாரங்களைக் கடந்து பல ஊர்களில் ஓடியது. க டந்த, 1990ல், தமிழ் சினிமாவுக்கே, புது வசந்தம் பிறந்தது. பாலைவனச்சோலை படத்துக்கு பின், நாகரிகமான ஆண் - பெண் நட்பை, கோடம்பாக்கத்தில் எவரும் காட்டியதில்லை. அப்படியொரு படம் தான் இயக்குனர், விக்கிரமன் இயக்கிய புது வசந்தம் படம். இயக்குனர், விக்ரமன் படங்களில், தியாகம் நிரந்தரமாக காட்டப்படும். நாயகனோ, நாயகியோ ஒரு குடும்பத்துக்காக மாடாக உழைத்து, சீக்கிரத்தில் காய்ந்த கறிவேப்பிலையாக துாக்கி எறியப்படுவர். வில்லன்களே இருக்க மாட்டார்கள். அப்படியிருந்தாலும், அவர்களும் கிளைமாக்ஸில், உத்தம வில்லன்களாக மாறி விடுவர். விக்ரமனின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார், விஜயகாந்த். நாட்டாமை படம் தந்த சூறாவளி ஓட்டத்தால், வானத்தைப்போல கதையிலும் நடிக்க விருப்பம் தெரிவித்தார் நடிகர், சரத்குமார். விக்ரமன் அவருக்கு விட்டுக் கொடுக்கவில்லை. விஜயகாந்த் நடித்தால் மட்டுமே, வானத்தைப்போல படம் சிகரம் தொடும் என்று உறுதியாக பணியாற்றினார். கதையைக் கேட்டதும், பிரமேலதாவுக்கு பிடித்து விட்டது. 'சார், கேப்டன் சொல்றாருன்னு பைட் சீன்லாம் வெச்சுடாதீங்க...' என்றார், அவர். ஆனால், அதெல்லாம் சாத்தியமா என்ன? - தொடரும் - பா. தீனதயாளன்நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !