உள்ளூர் செய்திகள்

காபி!

அக்., 1 - சர்வதேச காபி தினம்ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றான, எத்தியோப்பியாவில், வாழ்ந்த, பழங்குடியின மக்கள் வாயிலாக, காபி தாவரம், வெளியுலகிற்கு தெரிய வந்தது. எத்தியோப்பியாவில் காபா என்ற இடத்தில், முதன்முதலாக காபி செடி கண்டுபிடிக்கப்பட்டது. இதை சாப்பிட்ட ஆடு, மாடுகள் அதிக உற்சாகத்துடன் இருப்பதை கவனித்தனர். இதற்கு காரணம் காபி பழங்கள் என அறிந்தனர். இங்கிருந்து துருக்கி, ஏமன், வட ஆப்ரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு பரவியது.மலைத்தோட்ட பயிர், காபி. காபி பழம், சிவப்பு நிறத்தில் காணப்படும். நம் நாட்டில் அராபிகா மற்றும் ரொபஸ்டா என்ற, இருவகை காபி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. 500 முதல் 1,500 மீட்டர் உயர, மலைப் பகுதிகளில் சாகுபடியாகிறது.ஆடுகளின் கால் குளம்பு வடிவத்தை ஒத்திருப்பது போல், காபி விதைகள் உள்ளதால், பிரேசில் மொழியில் இதை, 'ஹூப்' என்கின்றனர். இதிலிருந்து தான், காபி என்ற சொல் மருவியது.கடந்த, 1963ல், லண்டனை தலைமை இடமாகக் கொண்டு, சர்வதேச காபி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், காபி உற்பத்தி செய்யும், 70க்கும் மேற்பட்ட நாடுகள், இறக்குமதி செய்யும் நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.இத்தாலி, மிலன் நகரில், 2014ல் கூடிய, சர்வதேச காபி அமைப்பு, அக்., 1  ம் தேதியை, சர்வதேச காபி தினமாக அறிவித்தது.காபியில் உள்ள காபின், நமக்கு உற்சாகமளித்து, மனச்சோர்வை நீக்குகிறது. மூளை நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரித்து, பார்க்கின்சன் நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இரவில் காபி குடிப்பது துாக்கமின்மை, மற்றும் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்னைகளை உண்டாக்கும். எனவே, அளவோடு குடிப்பது நன்மை தரும்.கடந்த, 1670ல், இஸ்லாமிய துறவியான பாபாபுடின் என்பவர், மெக்கா புனித பயணம் மேற்கொண்டு திரும்பும்போது, ஏமன் நாட்டிலிருந்து, ஏழு காபி விதைகளை எடுத்து வந்தார்.கர்நாடக மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலை - குடகு பகுதியில், சந்திரகிரி மலைப்பகுதியில் இதை நடவு செய்து, காபி செடியை பரப்பினார். இன்றும் இப்பகுதி இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. கி.பி.1554ல், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில், அரேபிய வியாபாரிகள் முதன் முதலில் காபி கடைகளை திறந்தனர். இங்கு அமர்ந்து காபி அருந்தியபடி, அரசியல் பேசுவதை, ஒற்றர்கள் வாயிலாக கண்டறிந்தார், மன்னர். காபி கடைகளை மூட உத்தரவிட்டதுடன், காபி கொட்டைகளை பறிமுதல் செய்து, காபி குடிப்பவர்களுக்கு கசையடி வழங்கப்படும் என, உத்தரவிட்டார்.பிளாக் காபி, பில்டர் காபி, குளிர்ந்த காபி, மல்லி காபி மட்டுமே நமக்கு தெரிந்தது. ஆனால், லிக்கர் காபி, மது சேர்த்து தயாரிக்கப் படுவது. வெள்ளை காபி, பிராட்போ காபி, பாம்பன், கபேலேட்டோ பிரிட்டோ, டர்கிஷ் காபி, ஐரிஷ் காபி, அமெரிக்காவோ, எஸ்பிரசோ, காப்பசீனோ, கபே பிரேவா ஆகியவை, வணிக முறையிலான காபி வகைகளாகும்.இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, பெல்ஜியம், போலந்து, லிபியா மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள், இந்திய காபியை விரும்பி இறக்குமதி செய்கின்றன.காபி உற்பத்தியில் பிரேசில் நாடு, முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், கர்நாடகம் முதலிடம் வகிக்கிறது. காபி ஏற்றுமதியில், இந்தியா ஏழாவது இடம் வகிக்கிறது.திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் மத்திய காபி ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது.இந்தோனேஷியா - கோபி லுவாக், தாய்லாந்து - பிளாக் ஐவரி காபி, பனாமா - ஹசீண்டாலா எஸ்மரால்டா காபி ஆகியவை, உலக அளவில் சுவையில், அதிக விலையில் முதல் இடம் பெறும் காபி வகைகளாகும். பெட்ரோலுக்கு அடுத்தபடியாக காபிக்கு, மிகப்பெரிய வணிக சந்தை உள்ளது.காபி குடிப்பதால் சில நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. உடல் நலத்துக்கு தக்கபடி அளவோடு பருகுவது நல்லது. தொகுப்பு : ஆர்.ராம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !