உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: தீபாவளி!

ஐப்பசி மாதத்தில் வரும் முக்கியமான பண்டிகை, தீபாவளி. நரகாசுரனை வதம் செய்த, கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாளில் வரும் பண்டிகை, இது.நரகாசுரன் இறக்கும் போது, கிருஷ்ணரிடம், 'நான் இறந்த இந்த தினத்தை மக்கள், எண்ணெய் ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்...' என்று, வேண்டிக் கொண்டான். அதன்படி, நாம் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். சதுர்த்தசி, சிவபெருமானுக்குரிய சிவராத்திரி தினமும் ஆகும். இந்த அடிப்படையில் தீபாவளியை சைவம், வைணவம் இரண்டும் சங்கமாகும் பண்டிகை எனலாம்.தீபாவளியன்று, எந்த நீரில் குளித்தாலும் அது, கங்கா ஸ்நானத்திற்கு ஒப்பானது. கங்கை, காசியில் வடக்கு முகமாக ஓடுவதால், தீபாவளியன்று காசியில், கங்கை நதியில் நீராடுவது சாஸ்திர ரீதியாக புனிதமாக கருதப்படுகிறது.காசியில், தங்க அன்ன பூரணியை, தீபாவளியை ஒட்டி மூன்று நாட்கள் தரிசனம் செய்யலாம். இதற்காகவும், கங்கா ஸ்நானம் செய்வதற்கும் பலர், காசிக்கு செல்வர்.தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமியும், தண்ணீரில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம்.பகீரதன், பலகாலம் தவமிருந்து பூமிக்கு கொண்டு வந்த கங்கையை, நாம் ஆண்டுக்கொருமுறை வீட்டுக்கு வரவழைத்து, தீபாவளி ஸ்நானம் செய்கிறோம். தீபாவளியன்று, விடியும் முன் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். வெந்நீரிலும் கங்கை தோன்றுவாள் என்பதால், வெந்நீரில் குளிப்பது விசேஷம்.தீபாவளிக்கு முதல் நாள், வெந்நீர் தவலையை தேய்த்து, சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு சூரியன் மறைவதற்கு முன்பே, நீர் நிரப்பி அடுப்பில் வைப்பர். தண்ணீரில் அரசு, புரசு, ஆல், அத்தி, மாவிலங்கை ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளை சேர்ப்பது வழக்கம்.இவை மருத்துவ குணம் கொண்டவை என்பதால், விடியற்காலையில் இந்த வெந்நீரில் எண்ணெய் ஸ்நானம் செய்வதால் தலைவலி, ஜலதோஷம் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும். அன்று நாம் குளிக்கும் நீரில் கங்கை வசிப்பதால், தீபாவளி அன்று, 'கங்கா ஸ்நானம் ஆச்சா?' என்று ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. தீபாவளியன்று தீபாவளி லேகியம் உண்ணும் வழக்கமும், பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. விடிகாலை குளியல், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க, நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழக்கம் இது.தீபாவளியன்று தீபங்களை ஏற்றி, பட்டாசுகளைக் கொளுத்துகிறோம். இதன் மூலம், நம் உள்ளக் கோவிலில் ஞான விளக்கை ஏற்றி, மனதிலுள்ள மதம், மாத்சர்யம், மோகம், கோபம் மற்றும் குரோதம் ஆகிய தீயசக்திகளை சுட்டுப் பொசுக்கி, மெய்ஞானம் பெற வேண்டும் என்பதே, தீபாவளி நமக்கு கூறும் செய்தி.நமக்கு அறிமுகமானவர்களோடு மகிழ்ச்சியைப் பரிமாறி கொள்ளலாம். மேலும், தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் உள்ள ஏழைகள், ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு, நம் வசதிக்கேற்ப புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுகள் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்து, மனநிறைவு பெறலாம்.பி. என். பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !