ஞானானந்தம்: ராமநாமத்தை உச்சரித்தால் மட்டும் போதுமா?
தினமும் ராம நாமத்தை ஜபிப்பார், ராமசரண் எனும் தீவிர ராமபக்தர்.ஒருநாள், தன் வீட்டின் அருகே கிளிக்குஞ்சு ஒன்று வந்து விழுந்ததை எடுத்து, கூண்டில் அடைத்து, வளர்த்து வந்தார். அதற்கு ராம நாமத்தையும் சொல்லிக் கொடுத்தார்.கிளியும் அடிக்கடி ராம நாமத்தைச் சொல்லி வந்தது. சில நேரம் ராமாயணத்தில் உள்ள சில விபரங்களைக் கேட்கும், கிளி. அதற்கு விளக்குவார், ராமசரண்.ஒருநாள், ஒரு ஞானியைச் சந்திக்கப் புறப்பட்டார், ராமசரண்.அப்போது அவரிடம், 'ராம நாமத்தை ஜபித்தால் நன்மை கிடைக்கும் என்கின்றனர். நான், ராம நாமத்தைத் தினமும் ஜபிக்கிறேன். எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லையே... ஏன் என்று அந்த ஞானியிடம் கேட்டு வாருங்கள்...' என்றது, கிளி.ஞானியைச் சந்தித்து விட்டு வந்த ராமசரணிடம், 'என் கேள்விக்கு ஞானி, என்ன பதில் கூறினார்?' என்றது, கிளி.'கிளியே, உன் கேள்வியைக் கேட்டதும் ஞானி மவுனமானார்...' என்றார், ராமசரண்.கிளி பதிலே கூறவில்லை. மறுநாள் கூண்டிற்குள் இறந்து கிடந்தது, கிளி. மிகவும் துயரப்பட்டார், ராமசரண்.கிளியை எடுத்துச் சென்று, மரப்பொந்தில் வைத்து, மலர்களால் மூடி, கிளியின் ஆத்மா சாந்தி அடைவதற்காக, ராம பாடலைப் பாடினார். உடனே கிளி பறந்து, மரக் கிளையில் அமர்ந்தது.மிகவும் கவலையோடு, 'நீ இறந்தது போல நடித்து ஏமாற்றினாயா?' என்று கேட்டார், ராமசரண்.'சுவாமி, நான் உங்களை ஏமாற்றவில்லை. என் கேள்விக்கு எந்தப் பதிலும் கூறாமல், ஞானி மவுனமானார் என்று சொன்னீர்களே... அதன் தத்துவத்தை நான் புரிந்து கொண்டேன். ராம நாமத்தை வாய் விட்டுக் கூறினால் மட்டும் போதாது.'ராம நாமத்தை ஆவி ஒடுங்கும் அளவிற்கு ஆத்மாவோடு கலக்க வேண்டும் என்பது தான், அவர் கூறிய விளக்கம். அதை நான் கடைப்பிடித்து, மயக்க நிலையில் இருந்தேன். நான் இறந்ததாக எண்ணி, எனக்கு விடுதலை அளித்தீர்கள்.'உங்களை ஒன்று கேட்கிறேன்... ராம நாமத்தை ஜபிக்க வேண்டும் என்று எனக்குக் கூறிய உங்களுக்கு, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வரவில்லையே...' என்று கூறியபடி பறந்து சென்றது, கிளி. தன் அறியாமைக்காக வெட்கப்பட்டார், ராமசரண்.பகவானின் நாமத்தை உச்சரிப்பதால் மட்டும் நன்மை வந்துவிடாது; அதை ஆத்மார்த்தமாக உள்வாங்கி, தர்மத்தின்படி நடக்க வேண்டும்! அருண் ராமதாசன்