உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: சிட்டுக்குருவியின் மனவுறுதி!

கடற்கரை அருகே புதர் ஒன்றில், கூடுகட்டி வாழ்ந்து வந்தது, சிட்டுக்குருவி ஒன்று.தன் கூட்டில் முட்டைகளை இட்டு, ஒருநாள், இரை தேடச் சென்றது. அப்போது, பெருங்கடலின் அலை, அக்குருவியின் முட்டைகளைக் கடலினுள் இழுத்துச் சென்றது.தன் இருப்பிடத்துக்கு திரும்பியதும், 'ஐயோ, என் முட்டைகளைக் காணவில்லையே. இந்தக் கடல் தான் எடுத்திருக்க வேண்டும்...' என, மிகுந்த வருத்தமடைந்தது, குருவி.'கடலே என் முட்டைகளைத் திருப்பித் தந்துவிடு...' என்று கத்தியது.குருவியின் வார்த்தைகளை சற்றும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தது, கடல்.கோபத்துடன், 'கடலே, நான் உன்னை வற்றச் செய்கிறேன் பார்...' என்றது, குருவி.தன் சின்னஞ்சிறு அலகால் கடல் நீரை எடுத்து, கடற்கரையில் விட ஆரம்பித்தது, குருவி.'சிறு குருவியால் கடல் நீரை எவ்வாறு வற்றச் செய்ய முடியும்?' என, குருவியின் செய்கையை பார்த்து சிரித்தன, மற்ற பறவைகள்.எதையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து கடல் நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தது, குருவி. இச்செய்தி எல்லா திசைகளிலும் பரவி, விஷ்ணுவின் வாகனமான கருடரின் காதுக்கு எட்டியது.தன் சகோதரி பறவையின் மீது கருணை கொண்ட கருடர், அங்கு வந்து, 'நான் உனக்கு உதவுகிறேன். கவலைப்படாதே...' என்றார்.'கடலே, குருவியின் முட்டைகளை உடனடியாகத் திருப்பித் தந்துவிடு. இல்லாவிடில், உன்னை நான் வற்றச் செய்து விடுவேன்...' என, எச்சரித்தார், கருடர்.'என்னை மன்னித்து விடுங்கள். குருவியின் முட்டைகளை திருப்பித் தந்து விடுகிறேன்...' என்றது, கடல்.கருடரின் கருணையால் முட்டைகளைப் பெற்று மகிழ்ச்சியடைந்தது, குருவி.கடலை வற்றச் செய்வது சிட்டுக்குருவிக்கு இயலாத காரியம். அதுபோல, பக்தி யோகத்தின் சட்ட திட்டங்களைப் பின்பற்றுதல், நமக்கு மிகவும் கடினமான காரியமாகத் தோன்றலாம். இருப்பினும், உறுதியுடன் அவற்றைப் பின்பற்ற முயல்பவனுக்கு, முழுமுதற் கடவுள் நிச்சயமாக உதவுவார். அவரது உதவியால், நாம் பக்தியின் உயர்ந்த நிலையை விரைவில் அடைய முடியும். அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !