உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: எமராஜரை ஏமாற்ற முயன்ற, சிற்பி!

ஒருமுறை, எமதர்மராஜனை ஏமாற்ற விரும்பிய, சிற்பி ஒருவன், திறமை வாய்ந்த ஜோதிடரை அணுகி, தன்னுடைய மரண நேரத்தை துல்லியமாக கணித்துக் கொண்டான்.களிமண் சிலைகளை அருமையாக வடிப்பதில் திறமைசாலி என்பதால், தன்னைப் போலவே தோற்றம் கொண்ட, ஒன்பது பொம்மைகளை செய்தான், சிற்பி.பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி, தன்னைப் போலவே உடை உடுத்தினான். அவைகள் எவ்வித வித்தியாசமுமின்றி, அவனைப் போலவே இருந்தன.மரண நேரம் நெருங்கியதும், பொம்மைகளுக்கு இடையில் ஒரு பொம்மையைப் போலவே நின்று கொண்டான்.அங்கு வந்த எமதர்மராஜர், சற்று குழப்பமடைந்தார்.'இவனை கொண்டு செல்ல வேண்டுமே. ஆனால், எப்படிக் கண்டுபிடிப்பது?' என, நீண்ட நேரம் சிந்தித்தார், எமதர்மராஜர்.'மரணத்தையே ஏமாற்ற நினைக்கிறாயா! இரு பார்க்கிறேன்...' என்றவர், 'இந்தப் பொம்மைகளைச் செய்த சிற்பி, தன் வேலையை ஒழுங்காக செய்யவில்லை. நான் எத்தனையோ பொம்மைகளைப் பார்த்துள்ளேன். இவை அந்த சிற்பியின் தோற்றத்திலிருந்து மாறுபட்டுள்ளன...' என்றார், அறிவில் சிறந்தவரான எமதர்மராஜர். தன் வேலையை குறை சொல்வதைக் கேட்டு, மிகவும் கோபமடைந்தான், சிற்பி.'என்ன சொல்கிறீர்? இவையனைத்தும் அப்படியே என்னைப் போல உள்ளன. நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியாது...' என, தன்னை மறந்து கோபத்தில் பேசி விட்டான், சிற்பி.உடனே, 'சரி, வா போகலாம். உன் நேரம் வந்துவிட்டது...' எனக்கூறி, அந்த சிற்பியை அழைத்துச் சென்றார், எமதர்மராஜர்.எத்தகைய புத்திசாலித்தனமான ஏற்பாடுகளை செய்தாலும், யாராலும் இயற்கையின் சட்டத்தை வெல்ல முடியாது; மரணத்திலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. பிறந்தவர்கள் அனைவருக்கும் மரணம் நிச்சயம். மரணித்தவர்கள் அனைவருக்கும், அவர்களது கர்மத்திற்கேற்ப மறுபிறவியும் நிச்சயம்.மரணத்திலிருந்து குறுக்கு வழியில் தப்பிப்பதற்கான முட்டாள்தனமான ஏற்பாடுகளை கைவிட்டு, பகவானிடம் சரணடைந்து பிறப்பு, இறப்பற்ற வைகுண்ட லோகத்துக்கு செல்ல அனைவரும் முயற்சிக்க வேண்டும்.-அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !