உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: ஏழையின் சிரிப்பு!

விஜயநகரத்தின் அரசன், சொக்கலிங்கம்.ஒருமுறை, தன் அரசவை ஊழியருடன் விநாயகரையும், பார்வதி தேவியையும் தொழுதுவிட்டு அரண்மனைக்கு திரும்பி கொண்டிருந்தார்.வழியில், ஒரு மரத்தடியில் தியானத்தில் ஈடுபட்டிருந்த, தாயுமானவர் எனும் துறவியை பார்த்தார். அது குளிர்காலம். தம் ஊழியனிடம் காஷ்மீர் சால்வை ஒன்றை கொண்டு வரும்படி பணித்தார், அரசர்.விலையுயர்ந்த சால்வை வந்ததும், துறவிக்கு அதை அளித்து, அரண்மனைக்கு சென்றார்.தியானம் முடிந்ததும், ஊருக்குள் சென்றார், துறவி. ஒரு ஏழைச் சிறுமி, குளிரில் நடுங்குவதை கண்டார். அச்சிறுமியை அருகில் அழைத்தார்.அங்கிருந்தவர்கள், 'சுவாமி அவளைத் தொடாதீர்கள்...' என்றனர்; துறவியை நெருங்க வேண்டாமென்று சிறுமியை மிரட்டினர், சிலர்.அவர்களை அலட்சியம் செய்து, சிறுமியை அருகில் அழைத்து, அவளுக்கு சால்வையை கொடுத்து வணங்கி சென்றார், துறவி.இதை பார்த்த ஒற்றன், அரசரிடம் சென்று, 'தாங்கள் துறவிக்கு அளித்த விலையுயர்ந்த சால்வையை, மக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஏழை சிறுமிக்கு வெகுமதியாக அளித்தார்...' எனக் கூறினான்.துறவி, தன்னை அவமதித்து விட்டதாக எண்ணினார், அரசர். 'நான் அவர் மீது உண்டான மரியாதையில், சால்வையை கொடுத்தேன். எவ்வளவு அலட்சிய மனப்பான்மை இருந்தால், அவர், மற்றொருவருக்கு அளிப்பார்? நான் அவரிடம் பகிரங்க மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். உடனே அவரை அரசவைக்கு அழைத்து வாருங்கள்...' என, கட்டளையிட்டார்.அரசவைக்கு வந்தார், துறவி. 'நான் உங்களை மதித்து அளித்த சால்வையை, ஏழை சிறுமிக்கு பரிசளித்த நோக்கத்தை அறியலாமா?' எனக் கேட்டார், அரசர்.'நான், தங்களை விட உயர்ந்தவன் என்ற எண்ணத்தில், நீங்கள் சால்வையை அளித்தீர்கள். நான், என்னை விட உயர்ந்தவருக்கு அந்த சால்வையை அளித்தேன். சிறந்த பக்தரான நீங்கள், அதை உணரவில்லையா?' என்றார், துறவி.வியப்புடன், 'ஏழை சிறுமி எவ்வகையில் உயர்ந்தவள்?' எனக் கேட்டார், அரசர்.'அரசே! ஆண்டவரும், தாயாரும் அனைவர் உள்ளங்களிலும் குடிகொண்டுள்ளனர். அச்சிறுமி, தாயாரின் வடிவமாக என்னை சோதிக்க வந்தார். நான், ஒவ்வொரு பெண்ணிடமும் தெய்வத் தாயை காண்கிறேன்.'ஆகையால், சால்வையை அச்சிறுமிக்கு தந்தேன். உங்கள் பரிசு, தெய்வத்தாயிடம் சென்றடைந்ததற்கு நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்...' என, பதிலளித்தார், துறவி.அரசரும், அரசியும் துறவியின் காலடியில் விழுந்து வணங்கி, 'எங்கள் அறியாமையைக் காத்தருளுங்கள். உங்கள் உயர்ந்த செய்கையை நாங்கள் உணர்ந்தோம்...' என்றனர்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பர்; ஏழைக்கு செய்யும் உதவி, தெய்வத்துக்கு செய்யும் தொண்டாகும்! அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !