ஞானானந்தம்: உண்மை பக்தன்!
பாண்டவர்கள், காட்டில் இருந்த போது ஒருமுறை, கண்ணனை விருந்துண்ண, தங்கள் குடிசைக்கு அழைக்க விரும்பினர்.கண்ணனை அழைக்கச் சென்றான், நகுலன்.தனக்கு அன்று அவசிய பணி இருப்பதால் வர இயலாது என்றார், கண்ணன். ஏமாற்றத்துடன் திரும்பினான், நகுலன்.'கண்ணன், அவருடைய பிரியமான பக்தன் அழைத்தால் தான் வருவார். அவர், என்னிடம் பேரன்பு உடையவர். நான் சென்று கண்ணனை அழைத்து வருகிறேன்...' என, கர்வத்துடன் கூறிச் சென்றான், அர்ஜுனன்.அவனிடமும் தன்னால் வர முடியாது எனக் கூறினார், கண்ணன். இதை கேள்வியுற்ற பாண்டவர்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், தான் சென்று அழைப்பதாக சொன்னான், பீமன்.அனைவரும் அதைக் கேட்டு சிரித்தனர். பீமனைத் தவிர மற்ற அனைவரும், கண்ணனை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்ததும் வணங்குபவர்கள். ஆனால், பீமன் ஒரு நாளும் பிரார்த்தனையில் பங்கேற்றதில்லை.'நம்மில் நீ தான் கண்ணனிடம் குறைந்த பக்தியுள்ளவன். உன்னால் அவரை கண்டிப்பாக அழைத்து வர முடியாது...' என்றனர், அனைவரும்.'கவலைப்படாதீர்கள். நான் அழைத்து வருகிறேன்...' என்றான், பீமன்.திரவுபதியிடம், 'நீ விருந்துக்கு ஏற்பாடு செய், நான் கண்ணனுடன் வருகிறேன்...' என்றான், பீமன்.கண்ணனிடம் சென்று, 'கண்ணா! நீ விருந்துக்கு வராவிட்டால், எங்களுக்கும் இன்று உணவில்லை. திரவுபதி ஏற்கனவே சமைக்கத் துவங்கி விட்டாள். ஆகையால், நீ என்னுடன் கட்டாயம் விருந்துக்கு வர வேண்டும்...' என்றான், பீமன்.அதன்பின், பீமன், தன் கதையைக் கையில் எடுத்து, கண்ணனிடம், 'நீ வராவிட்டால் இந்த கதையால் என் தலையை மோதிக் கொண்டு உயிர் விடுவேன்...' என்றான்.'எனக்காக உயிரையும் துறக்க நினைத்த, நீ தான் உண்மையான பக்தன்...' எனக் கூறி, பீமனுடன் விருந்துக்கு வந்தார், கண்ணன்.கண்ணன் மீது தீவிரமான பக்தியுடையவன், பீமன். ஆனால், அதை மற்றவர்களைப் போல் ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லை. அத்தகைய உண்மையான பக்திக்காக தான், பீமன் அழைத்ததும் விருந்துக்கு வர சம்மதித்தார், கண்ணன்.கடவுளிடம் நாம் மேற்கொள்ளும் பக்தியானது, வெளிப்பகட்டுக்காக அல்லாமல், துாய்மையான மனதுடன் ஆத்மார்த்தமாக இருத்தல் வேண்டும்.அருண் ராமதாசன்