ஞானானந்தம்: ஆணவத்திற்கு அடிபணியாதே!
ஒருசமயம், அர்ஜுனனின் மனதில் ஆணவம் குடி கொண்டிருந்தது. தன்னைவிட கிருஷ்ண பகவானிடம் பக்தியும், அன்பும் கொண்டவர்கள் யாரும் கிடையாது என்ற இறுமாப்போடு இருந்தான்.எல்லாம் அறிந்த பசுவானாகிய கிருஷ்ணர். அர்ஜுனனின் கர்வத்தை போக்கி, பாடம் புகட்ட எண்ணினார்.ஒருநாள், தம் நண்பனான அர்ஜுனனை அழைத்து, உலாவ கிளம்பினார், கிருஷ்ணர். சிறிது துாரம் சென்றதும், உலர்ந்த புல்லைத் தின்றுக் கொண்டிருந்த பிராமணன் ஒருவனை, இருவரும் கண்டனர். அந்த பிராமணனின் இடுப்பில் கூர்மையான கத்தி ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.உயர்ந்த எண்ணமும், பரிவும் கொண்ட பக்தனாய் விளங்கும், இந்த பிராமணன் இடுப்பில் கூர்மையான கத்தி இருப்பதற்கான காரணம், அர்ஜுனனுக்குப் புரியவில்லை. அதனால், ஸ்ரீ கிருஷ்ணரிடம், இதற்கான காரணத்தைக் கேட்டான்.'அர்ஜுனா' நீயே அவனிடம் நேரில் சென்று, அதற்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்...' என்றார், ஸ்ரீ கிருஷ்ணர்.உடனே, அந்த பிராமணனிடம், சுவாமி!தாங்கள் ஜீவஹிம்சை செய்யாத பிராமணர். அதனால் தான் உலர்ந்த புல்லைத் தின்றுக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட தாங்கள் ஏன் இடுப்பில் கத்தியை வைத்திருக்கிறீர்கள்?' என, வினவினான், அர்ஜுனன்.'என் பகைவனைப் பழிதீர்க்க நேரில் சந்திக்கும் காலத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத் தான் இந்த கத்தியை வைத்திருக்கிறேன்...' என்றார், அந்த பிராமணன்.'அந்த பகையாளி யார்? அதையும் எனக்கு சொல்லி விடுங்களேன்...' என்றான், அர்ஜுனன்.'அந்த பகையாளி கொடும்பாவியான அர்ஜுனன் தான்...' என்றார். பிராமணன். 'அர்ஜுனனா... சுவாமி! அவன் என்ன தவறு செய்தான்?' என, திகைப்புடன் கேட்டான். அர்ஜுனன்.'அவனது துஷ்டத்தனத்தை எப்படி சொல்வேன்! என் தெய்வமாகிய பசுவானையே அவன், தன் தேர்ப்பாகனாக்கி, தேர் ஒட்டும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டான். அதுமட்டுமின்றி, குருஷேத்திரப் போரில் அவன் சண்டையிட, என் பகவானையும் துணை சேர்த்துக் கொண்டான். என்ன கர்வம் அவனுக்கு...' என்றார், பிராமணன்.இதைக் கேட்டு, உண்மையிலேயே பகவான் மீது, பிராமணன் கொண்டிருந்த தீவிர பக்தியைக் கண்டு பிரமித்துப் போனான், அர்ஜுனன். அந்த நிமிடமே தன்னை விடவும் பக்தியில் உயர்ந்தவர் எவரும் இல்லை என்ற அகங்காரத்தை விட்டு விட்டான்.தற்பெருமையும், அகங்காரமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில், கடவுளின் கருணை நிலைத்து நிற்பதில்லை. பணிவும், அடக்கமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தான், கடவுளின் அருள் நிலைத்து நிற்கும்!- அருண் ராமதாசன்