ஞானானந்தம்: இதுவும் கடந்து போகும் !
ஓர் அரசர், தன் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். எனவே, அரசருக்கு ஒரு மோதிரத்தை பரிசாகக் கொடுத்தார், ராஜகுரு. அந்த மோதிரத்தில், 'இதுவும் கடந்து போகும்; இறைவன் மட்டுமே நித்தியமானவன்' என்று எழுத்துக்களால் பதிக்கப்பட்டிருந்தது. மகிழ்ச்சியுடன் தன் விரலில் அணிந்து கொண்டார், அரசர். சில சமயம், மோதிரத்திலிருந்த எழுத்துக்கள் அரசர் கண்களில் படும். அப்போதெல்லாம் அவர் மனம் சஞ்சலம் நீங்கி, அமைதியும், ஆறுதலும், சமநிலையும் பெறுவார். ஒரு நாள், தன் கஜானாவைப் பார்வையிட சென்றார், அரசர். அங்கு பொற்காசுகளும், முத்தும், வைரமும், வைடூரியங்களும் குவிந்து கிடந்தன. அவை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று எண்ணி மகிழ்ச்சியால் பூரித்தா ர். அப்போது, மோதிரத்திலுள்ள எழுத்துக்கள் அவரது கண்ணில் பட்டன. அதைப் பார்த்ததும், 'இந்தச் செல்வம் ஒரு நாள் என்னை விட்டு நீங்கி விடும். இது, என்னிடம் நிலையாக இருக்காது...' என்ற எண்ணம் அரசர் மனதில் தோன்றியது. அவர் மனமும், அகங்காரம் நீங்கி, சமத்துவ நிலையைப் பெற்றது. பின், அரசர் தன் அரண்மனையில் பிரபுக்கள் சூழ அமர்ந்திருந்தார். அவரை, வானளாவப் புகழ்ந்து பேசினர், பிரபுக்கள். அப்போதும் மோதிரத்தில் இருந்த எழுத்துக்களை கண்டு, 'புகழ்மொழிகள் நிரந்தரமானவை அல்ல. அவற்றில் மயங்கி என்னை இழந்துவிடக் கூடாது...' என்று எண்ணினார். ஒருநாள், இந்த அரசருடன் போரிட, வேற்று நாட்டு அரசன் ஒருவன் வந்தான். இருவரும் கடுமையாகப் போரிட்டனர். போரின் முடிவில், அரசர் தோல்வியை தழுவினார். அத்தகைய நெருக்கடி நிலையிலும், தன் விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்து ஆறுதலும், மன அமைதியும் பெற்றார். வேற்று நாட்டு அரசனிடமிருந்து தப்பி சென்று, சில காலத்திற்குப் பிறகு, ஒரு பெரும் படையைத் திரட்டி, தன் பகையரசனுடன் போரிட்டு வெற்றி பெற்றார், அரசர். அரசரை வரவேற்க தலைநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அவற்றை எல்லாம் கண்டுகளித்தபடி ஆணவத்துடன் ஊர்வலமாக வந்தார், அரசர். அப்போது, அவர் கண்களில் தற்செயலாக மோதிரத்தில் உள்ள எழுத்துக்கள் பட்டன. அவற்றைப் பார்த்ததும் அவரது மனம், சமநிலை பெற்றது. அரசர் முதுமை அடைந்தார். நோய் காரணமாக அவர் படுத்த படுக்கையாக துன்புற்றார். அந்த நிலையிலும் மோதிரத்தைப் பார்த்து, 'எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயும், துன்பமும் நிரந்தரம் அல்ல; இதுவும் மாறும்...' என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். மரண வேளை நெருங்கியது. அப்போது, 'உடலும் ஒரு நாள் அழியத்தான் செய்யும்...' என்று நினைத்தார். அதனால், மரண பயம் நீங்கி, தைரியமும், அமைதியும் பெற்றார். இப்படியாக பல சமயங்களில் அவரை நல்வழிப்படுத்தியது மோதிரத்தில் பதிந்திருந்த எழுத்துக்கள். அதனால், ஆறுதலும், மன அமைதியும், சமத்துவ நிலையும் பெற்று, நிம்மதியாக உயிர் துறந்தார், அரசர். வாழ்க்கையில் நேரும் இன்ப, துன்பங்களை சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிலும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. மாற்றங்களுக்கு இடையிலும் மாறாத இறைவன் ஒருவன் இருக்கிறான். அந்த இறைவனையே நாம் சார்ந்து வாழ வேண்டும்! அருண் ராமதாசன்