உள்ளூர் செய்திகள்

ஞானானந்தம்: உண்மையான அற்புதம்!

நம்நாட்டில், நல்லாட்சி புரிந்து வந்தார், ஓர் அரசர். அவருடைய அரண்மனையில் வேலை செய்யும் சேவகர் ஒருவருக்கு இறை அருள் கிடைத்தது. அதன் விளைவாக அவர் மனம், இறைவனிடம் திரும்பியது. சிறிது காலம் அவர் தன்னை இறைவனுக்கு அர்ப்பணித்திருந்தார். தன்னால், அரசருக்குச் சேவை செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து, தன் வேலையை விட்டு தவம் புரிய, இமாலயம் சென்றார், சேவகர். சில ஆண்டுகளுக்குப் பின், அவர் இறை ஞானம் அடைந்து, சமவெளிக்கு இறங்கி வந்தார். மனித குலத்திற்குச் சேவை செய்ய ஆரம்பித்தார். இது தொடர்பாக, அவர் ஒரு பெரிய யாகம் செய்யத் தீர்மானித்தார். மனித குலத்திற்கு நல்வாழ்வும், வளமும், கிடைக்க செய்வதற்காக, பல அரசர்களையும், இளவரசர்களையும், செல்வந்தர்களையும் அழைத்திருந்தார், அந்த மகான். முன்பு சேவகனாக வேலை பார்த்த, அரசரும் அழைப்பை ஏற்று வந்திருந்தார். வந்தவர்களிடம் அந்தப் பெரும் பணிக்காக, நன்கொடை வேண்டினார், மகான். வேண்டுகோள் விடுத்தது, மகான் என்பதால் யாகத்திற்குத் தன் பங்காக பெரிய தொகையை கொடுத்தார், அந்த அரசர். ஆனால், அந்த மகான் தான், தன்னிடம் சேவகராக வேலை பார்த்தவர் என்று அறியவில்லை, அரசர். காரணம், அவரது தோற்றம் முற்றிலும் மாறி இருந்தது. யாகத்திற்கான நாளும் வந்தது. நன்கொடை கொடுத்த அனைவரும் வந்து கலந்து கொண்ட அந்த யாகம் பிரமாண்டமாக நடைபெற்றது. வந்திருந்த பலரில் அந்த குறிப்பிட்ட அரசரும் ஒருவர். நிகழ்ச்சி முடிந்தவுடன், விருந்தினர்கள் புறப்படத் தயாராயினர். ஒவ்வொருவராக விடை பெற, மகானிடம் வந்தனர். அந்த அரசரும் வந்தார். மகானின் முன் பணிந்து வணங்கி, 'உங்களுக்கு பெரும் அற்புத சக்தி இருப்பதாக கேள்விப்படுகிறேன். தயவு செய்து எனக்கு ஓர் அதிசயத்தைக் காண்பிப்பீர்களா?' என்று கேட்டார். 'அற்புதம் ஏற்கனவே நிகழ்ந்து விட்டது...' என்று பதிலளித்தார், மகான். 'எப்படி? நான், எந்த அற்புதத்தையும் காணவில்லையே...' என்று ஆச்சரியத்துடன் கேட்டார், அரசர். 'சில ஆண்டுகளுக்கு முன், நான் உங்கள் சேவகனாய் இருந்தேன். நீங்கள் ஆணையிடும் பொழுதெல்லாம், நான் உங்களிடம் ஓடி வந்து, உங்கள் முன் மண்டியிடுவேன். இப்பொழுதோ, நான் ஓர் அரசன் போல அமர்ந்து, உங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை வணங்குகிறீர்கள். இதை விடப் பெரிய அதிசயம் எதுவும் இருக்குமா?' என்று புன்னகையுடன் கூறினார், மகான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார். எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி, துாய அன்புடன் சேவை செய்ய வேண்டும். மனிதர்களுக்குச் செய்யும் சேவை, இறைவனைச் சேவிப்பதற்குச் சமம். அன்பும், எதிர்பார்ப்பற்ற சேவையும் இணையும்போது மனித நேயம் ஒரு அற்புத சக்தியாக மாறுகிறது!அருண் ராமதாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !