உள்ளூர் செய்திகள்

செயற்கை நுண்ணறிவு ஆக்கமா, ஆபத்தா ?

அறிவியல் தொழிநுட்பத்தின் அதிதீவிர வளர்ச்சியால், சமீப காலமாக ஊடகம் மற்றும் செய்தித்தாள்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் தொழிநுட்பம் தான், ஏ.ஐ., - 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' எனப்படும், செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன். மனிதனை போலவே அல்லது மனிதனை விட அதிகமாக சிந்திக்கும் திறன் கொண்ட மென்பொருளால் தானியங்கி இயந்திரங்களை உருவாக்க தொழிற்சாலை, கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழிநுட்பவியல் ஆகிய பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.கடந்த, 1956ல், வெறும் பாடமாக இருந்த செயற்கை நுண்ணறிவு, 2012ல், ஆழமான கற்றல் தொழில் நுட்பமாகவும், 2017 மற்றும் 2020களில், பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்குப்பின், பலதரப்பட்ட பயன்பாட்டிற்கு உதவும் வகையில் உருவெடுத்தது. பல்வேறு பயன்பாட்டில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க, செயற்கை நரம்பியல், பொருளியல் புள்ளியியல், நிகழ்தகவு, உளவியல், கணிதம் ஆகிய முறைகளை ஒருங்கிணைத்து ஏ.ஐ., மென்பொருள் உருவாக்கப்படுகிறது.அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில், பாலின சமத்துவத்தை மேம்படுத்த, மைக்ரோசாப்ட் நிறுவனம், 75 ஆயிரம் பெண்களுக்கு, 'கோட் வித்தவுட் பேரியர்ஸ்' என்ற திட்டத்தின் மூலமாக, 2024க்குள் மென்பொருள் தயாரிப்பில் பயிற்சி அளிக்க உள்ளது.இணைய வணிகத்தில், வாடிக்கையாளர்களின் விருப்பம், தேவைக்கேற்ப பொருட்களை பரிந்துரை செய்யவும், கடன் அட்டை மற்றும் போலி விமர்சனம் தொடர்பான சிக்கல்களை தீர்க்கவும், ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுகிறது.கல்வித்துறையில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த, கற்பித்தல் அல்லாத பிற வேலைகளான மாணவர்களின் தேர்ச்சி, தனிப்பட்ட விபரங்களை சேகரித்தல், ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு, தேர்வுத்தாள் திருத்தம், பாடங்களின் விபரம் ஆகிய, பல்வேறு தகவல்களை, ஏ.ஐ., மூலமாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பரிமாறிக் கொள்ள உதவுகிறது.வீடியோ மற்றும் குரல் பதிவுகளை எழுத்து வடிவமாக மாற்றவும், குரல் உதவி மூலமாக நாம் ஐயங்களை கேட்டு தெளிவு பெறவும், கற்கவும், வாகனங்களில் விபத்துக்களை தடுக்கவும், பாதுகாப்பு துறையில் கண், கைரேகை, முகத்தை வைத்து நபரின் அடையாளம் காணவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.மருத்துவ துறையில், முன்கூட்டியே நோயின் தாக்கத்தை கண்டறிதல், ஆதி நவீன ஏ.ஐ., தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துதல், புதிய மருந்துகளை கண்டுபிடித்தல் ஆகியவை, தற்காலத்தில் இன்றியமையாதது. தானியங்கி மோட்டார் விற்பனை துறை, விளையாட்டு துறை, ஊடகத் துறை, வணிகம், வானியல் தரவு அறிவியல் மற்றும் பாதுகாப்பு, போக்குவரத்து ஆகியவற்றிலும், ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்களை செய்து வருகிறது.சமீபத்திய ஏ.ஐ., பயன்பாடு சிலவற்றை காண்போம்... * யோகா மேட் - இதில் உள்ள சென்சார்கள், பயனாளிகள் செய்யும் யோகா பயிற்சியின் அடிப்படையில், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும்; எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தரும்.* மகாராஷ்டிராவில் கிராமப்புற பெண்களுக்கு, ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன், மார்பக புற்று நோய் பரிசோதனை நடத்தப்படுகிறது.* ஒன்பது மொழிகளில் செயல்படும், ஏ.ஐ., செயலியான, 'ஜெமினி ஏ.ஐ.,'யை, கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தமிழும் அடங்கும். இந்த செயலி கணிதம், இயற்பியல், வரலாறு, மருத்துவம் என, 57 வகையான பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கான தீர்வை வழங்குகிறது. * அஸாமில் உள்ள தனியார் பள்ளி, 'ஐரிஸ்' எனப்படும், ரோபோ ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்துள்ளது. இது, குரல் மூலமாக மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.இத்தனை அளப்பரிய பயன்பாட்டிற்கு, ஏ.ஐ., உதவினாலும், உலகமெங்கும் மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான விளைவுகளும், அன்றாடம் அரங்கேறி வருகின்றன. அவை:* ஏ.ஐ., 'டீப் பேக்' உக்தியை பயன்படுத்தி, பிரபலங்களின் முகத்தை வேறு நபர்களின் உடலுடன் பொருத்தி, வீடியோ மற்றும் புகைபடங்கள் வெளியாகிறது.* ஹாங்காங்கின் பிரபல நிதி பிரிவில் போலியான ஆன்லைன் மீட்டிங் நடத்தி, 207 கோடி ரூபாய், போலி வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.* உலகெங்கிலும் நடைபெறும் தேர்தல்களில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களின் மூலமாக வாக்காளர்கள் முடிவு எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த, உலகின் மிகப்பெரிய சக்தியாக மாற, சீனா ஈடுபட்டுள்ளதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.* ஏ.ஐ., தொழில்நுட்பதில் இயங்கும் தானியங்கி வாகனங்கள், தீவிரவாதத்திற்கு பயன்படுத்த படுகிறது. * உறவினர்கள் போல், ஏ.ஐ., குளோனிங் குரல் மற்றும் வீடியோவை பயன்படுத்தி அழுது பணம் பறித்தல்... * ஏ.ஐ., செயல்பாட்டால் பெரும்பாலானோர் வேலை இழக்கும் அபாயம். செயற்கை நுண்ணறிவால் ஏற்பட இருக்கும் எதிர்கால கிரிமினல் குற்றங்கள்... * ஆடியோ - வீடியோ ஆள் மாறாட்டம். * ஓட்டுனர் இல்லாத வாகனங்களை ஆயுதங்களாக பயன்படுத்துதல். * தகவல் தொடர்பு சாதனங்களில், ஏ.ஐ., பிஷிங்க் தாக்குதல்கள் மூலம் உறுதியான தகவல்களை உருவாக்குதல். * ஒருங்கிணைந்த பல்வேறு அமைப்புக்களில் இடையூறு மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல்.* போலி செய்திகளை உருவாக்குதல். * நிதி சந்தைகளில் மிகப்பெரிய தாக்கம்.* ராணுவத்தில் ரோபோக்களை தவறாக வழிநடத்துவது. * சட்டம் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் குழப்பம் ஏற்படுத்துதல். * தனிநபர் செயல்பாட்டை கண்காணிப்பது. * கலை மற்றும் இசைத்துறையில் போலி படைப்பாற்றல் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குதல். மனிதர்களை போல, இந்த தொழில்நுட்பத்தால், ஆக்கபூர்வமான படைப்பாற்றல் இல்லை. கணினிகள் மற்றும் இயந்திரங்களுக்கு உணர்ச்சிகள் இல்லை. எனவே, மனிதர்களை போல ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு, ஒரு இலக்கை முடிக்க முடியாது.மனிதனிடம் உள்ள நெறிமுறை மற்றும் அறநெறி ஆகியவற்றை, ஏ.ஐ., உடன் இணைப்பது எளிதல்ல. எனவே, இது வரவிருக்கும் சகாப்தங்களாக தொடர்ந்தால், ஏ.ஐ., இறுதியில் மனித குலத்தையே அழித்துவிடும். பா. கவுசல்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !