இது உங்கள் இடம்!
மனதை தொட்ட அணுகுமுறை!சமீபத்தில், நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் வீட்டில் நடக்கப் போகும் சிறு விசேஷத்துக்காக நெருங்கிய உறவினர்களுக்கும், நெருக்கமான நண்பர்களுக்கும் போன் மூலம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.மொபைல் போனில், ஒவ்வொருவரிடமும், 'மகனே, மகளே, தம்பி, அண்ணா...' என்றும், சிலரை பெயர் சொல்லியும் அழைப்பு விடுத்தார். அது வித்தியாசமாக இருக்கவே, விபரம் கேட்டேன்.'என் மொபைல் போனிலும், உறவினர்களின் எண்களை, உறவு முறை குறிப்பிட்டும், நண்பர்களை பெயர்களுடனும் பதிவு செய்து வைத்துள்ளேன். அவர்களுக்கு எப்போது போன் செய்தாலும், உறவுமுறை குறிப்பிட்டு பேசுவேன். அதனால், அவர்களுக்கும், நமக்கும் ஒரு நெருக்கமும், மகிழ்ச்சியும் ஏற்படும். இதேபோல் நண்பர்களையும், 'ஹலோ' என்பதற்கு பதிலாக, பெயர் குறிப்பிட்டு பேசுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கிறது...' என்றார்.உறவும், நட்பும் நீடிக்க அவர் சொல்வதில் உண்மையும், அர்த்தமும் இருப்பதாக தோன்றியது.நாமும் இதை பின்பற்றலாமே! — வி.பரமசிவம், சென்னை.மரக்கன்றுகள் நடுவதற்கு முன்...எங்கள் வீட்டு தோட்டத்தில், நர்சரியில் வாங்கி வந்த, 3 அடி மாங்கன்றை நட, 0.5 அடி ஆழத்திற்கு குழி பறித்துக் கொண்டிருந்தேன்.அப்போது, என்னை பார்க்க, விவசாயத் துறையில் பணிபுரியும் நண்பர் வந்தார். அவரிடம் பேசிபடியே, மாங்கன்றை நடச் சென்றேன்.உடனே தடுத்த நண்பர், 'எந்தக் கன்றையும், குழி எடுத்தவுடனே நடக் கூடாது. புதிய குழிகளில் இருந்து வெப்பம் வெளியேறும். அந்த வெப்பம், கன்றுகளின் வேர் பகுதியை பாதிக்கும். எனவே, குழியை ஒருநாள் ஆறவிட்டு, மறுநாள் கன்றுகளை நடுவதே, அவற்றின் தடையில்லா வளர்ச்சிக்கு உதவும்.'அதோடு, 3 அடி கன்றுக்கு, 0.5 அடி குழி தோண்டி நடுவதும் தவறு. எந்தக் கன்றாக இருந்தாலும், அதன் உயரத்தில், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குழியெடுத்து நடுவதே சிறந்தது. இன்னும், 0.5 அடி ஆழம் தோண்டி, 1 அடி குழியில், 3 அடி மாங்கன்றை நட்டால் தான், மரம் வளர வளர தண்டுப் பகுதிக்கு, 'சப்போர்ட்' கிடைத்து, உறுதியாக வளரும். இல்லையென்றால் சாய்ந்துவிடும்...' என்றார்.மரக்கன்றுகள் நடுவதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என்று வியந்த நான், பயனுள்ள ஆலோசனைகளை வழங்கிய நண்பருக்கு, என் நன்றியை கூறினேன்.— வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.அதிரடி நடவடிக்கை!நீண்ட நாட்களுக்கு பின், பால்ய நண்பனை சந்திக்க, அவனது வீட்டுக்கு சென்றிருந்தேன்.மாமியார் - மருமகள் சண்டை நாளடைவில் பூதாகரமாக வெடித்து சிதற, மனைவியின் பேச்சை கேட்டு, நண்பனால் விரட்டியடிக்கப்பட்ட அவனது வயதான பெற்றோர், திரும்ப வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.மனம் மாறி வீட்டுக்கு அழைத்து வந்த காரணத்தை, நண்பனிடம் கேட்டேன்.'அதை ஏன்டா கேட்குறே... முதியோர் இல்ல நிர்வாகி உதவியுடன் பெரிசுங்க ரெண்டும், நேராக கலெக்டர் ஆபீசுக்கு போய், 'எங்க சொத்தை எல்லாம் ஏமாற்றி எழுதி வாங்கிக்கிட்டு, வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டாங்க'ன்னு, புகார் மனு எழுதி கொடுத்துட்டாங்க.'மறுநாளே வீட்டுக்கு போலீஸ் வந்து, 'நீங்க செஞ்சது மோசடி குற்றம். சட்டப்படி உங்க மேல, அதிரடி நடவடிக்கை எடுப்போம்'ன்னு, சொல்லிட்டாங்க. எங்கே, 'உள்ளே' தள்ளிடுவாங்களோன்னு பயந்து, வேற வழியில்லாம, பெரிசுகளை, திரும்ப வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்...' என்றான், நண்பன்.இப்படிப்பட்ட அதிகாரிகள் இருந்தால், முதியோர் இல்லம், அனாதை இல்லம் எல்லாம் காலப்போக்கில் படிப்படியாக குறைந்து, காணாமல் போய் விடும். அதிரடி நடவடிக்கை, என் நண்பன் போன்ற குணம் கொண்டவர்களையும் அடியோடு திருந்தச் செய்துவிடும் என நினைத்துக் கொண்டேன்.நண்பர்களே... வயதான காலத்தில் பெற்றோரை பாரமாக நினைக்காமல், பெற்ற பிள்ளைகளாக பாவியுங்கள்.—எம்.தினேஷ்குமார், மதுரை.