உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

'இன்ஸ்டாகிராம்' மோசடி! நண்பர் ஒருவர் பகிர்ந்த தகவல் இது:நண்பருக்கு, 'இன்ஸ்டாகிராம்' மூலம், வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். ஒரு மாதத்துக்கு பின், ஒருநாள், 'நாளை என்னுடைய ஒரே மகளுக்கு பிறந்தநாள் விழா. நம், 'இன்ஸ்டாகிராம்' நண்பர்களுக்கு ஏதாவது அன்பளிப்பு செய்ய முடிவெடுத்து, ஆண்டிராய்டு மொபைல் போன், துணிமணிகள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் முதலியவற்றை, பார்சல் நிறுவனம் மூலம் அனுப்புகிறேன். வாங்கிக் கொள்ளலாம்...' என, நண்பரிடம் கூறியுள்ளார், 'இன்ஸ்டாகிராம்' நபர்.இவ்வளவும் இலவசமாக கிடைக்கிறதே என்ற பேராசையில், தன் வீட்டு முகவரியையும், 'வாட்ஸ்-ஆப்'பில் அனுப்பி இருக்கிறார், நண்பர். அன்றிரவு, 7:00 மணிக்கு, அவர் குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு பார்சல் நிறுவனம் மூலம், விமானத்தில் ஏற்றுவது போன்ற புகைப்படங்களை வீடியோவுடன் அவருக்கு அனுப்பி உள்ளார்.அடுத்த நாள் காலை, 6:00 மணிக்கு, நண்பரை மொபைல் போனில் அழைத்த ஒருவர், '15 ஆயிரம் ரூபாயை இப்போதே எங்களுக்கு, 'கூகுள் பே' மூலம் அனுப்பி வையுங்கள்...' என கூறியிருக்கிறார்.'எனக்கு பார்சல் அனுப்புவதாக கூறிய, 'இன்ஸ்டாகிராம்' நண்பர், கூரியர் கட்டணம் பற்றி எதுவுமே சொல்லவில்லையே?' எனக் கேட்டுள்ளார், நண்பர்.'பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள், வெறும், 15 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க...' என, ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார், பார்சல் நிறுவன ஊழியர்.அப்போது தான் நண்பருக்கு இது, மோசடி பேர்வழிகளின் சூழ்ச்சி என்ற உண்மை புரிந்திருக்கிறது. உடனடியாக அந்த எண்ணை, 'பிளாக்' செய்து, அவர்களின் மோசடியில் சிக்காமல் தப்பித்திருக்கிறார்.இதுபோன்ற, 'இன்ஸ்டாகிராம்' மோசடிப் பேர்வழிகள் உங்களையும் அணுகலாம். உஷார், உஷார்!—ஆர்.ராஜ்மோகன், விழுப்புரம். 'ஸ்டிக்கர்' மோசடி! அண்மையில் நானும், கணவரும் நகரத்தில் இருக்கும், பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்கு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை வாங்க சென்றோம்.சுயசேவை சூப்பர் மார்க்கெட் என்பதால், தேவையான பொருட்கள் அனைத்தையும் நாங்களே தேர்வு செய்து, வாங்கி வந்தோம்.அன்றிரவு, சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த, பேரீச்சம் பழத்தை பிரித்து பார்த்தபோது, அதில் சிறிய கருப்பு வண்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ந்து போனோம். அதை தொடர்ந்து மற்ற உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பரிசோதித்ததில், அனைத்து, 'பேக்கிங்' மீதும், புதிதாக, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.அந்த, 'ஸ்டிக்கர்' அனைத்தையும் அகற்றிவிட்டு பார்த்தபோது, 2024 நவம்பரில் காலாவதியான பொருட்களாக இருந்தன. 2025 ஜனவரி மாதம் தயாரிப்பு தேதியாக குறிப்பிட்டு, 2026 பிப்ரவரி மாதம் காலாவதி தேதியாக, 'ஸ்டிக்கர்' அச்சிட்டு ஒட்டி, சம்பந்தப்பட்ட, சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது.உடனடியாக அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் சென்று, பணம் செலுத்தும் இடத்தில் அமர்ந்திருந்தவரிடம் கேட்டோம். அவரோ அலட்சியமாக, 'எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் நடக்கும் நடைமுறை தான்...' என்றார்.'இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் செல்லப் போகிறேன்...' என்றதும், பயந்து போய் காலாவதியான அனைத்து பொருட்களையும் திரும்ப பெற்று, அதற்கான தொகையை கொடுத்து விட்டார்.சகோதர, சகோதரிகளே... நம் உழைப்பின் மூலம் சேமித்த பணத்தில், நமக்கு தேவையான மளிகை பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள், மருந்து, மாத்திரைகள் என, அனைத்து பொருட்களையும் வாங்கும்போது, கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருப்பது மிகவும் முக்கியம்.— ஆர்.ஜமுனா ராஜமோகன், விருதுநகர்.இப்படியும் செய்யலாமே! நெருங்கிய நண்பரின் மகனுக்கு திருமண ஜவுளி எடுப்பதற்காக, என்னையும் அழைத்திருந்தார். அதற்காக, அவர்கள் ஊரிலுள்ள பெரிய ஜவுளிக்கடைக்கு சமீபத்தில் சென்றிருந்தேன்.ஜவுளிக்கடையில் துணியெடுக்க வரும் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வெடுத்தபடி பொழுதுபோக்க, பயனுள்ள ஏற்பாட்டை செய்திருந்தனர்.கடையின் ஒரு பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கி, இருக்கைகள் போட்டிருந்தனர். மேலும், குழந்தைகள் விளையாட, செஸ், கேரம் மற்றும் பெரியவர்கள் விளையாட, பரமபதம், பல்லாங்குழி போன்றவற்றையும் வைத்திருந்தனர்.இவை போக, நாளிதழ்கள், பருவ இதழ்களையும் வைத்திருந்தனர்.வழக்கமாக, ஜவுளிக்கடையில் மணிக்கணக்காக காத்திருப்பது, தலைவலியையும், உடல் அசதியையும் தந்து விடும். அதற்கு மாறாக கடையில், மனதுக்கும், மூளைக்கும், சுறுசுறுப்பு, மகிழ்ச்சியை வழங்கும் பல ஏற்பாடுகளை செய்திருந்தனர்.எல்லா துணிக்கடைகளிலும் இப்படி செய்தால், காத்திருப்போருக்கு உபயோகமாக இருப்பதுடன், உற்சாகத்தையும் தரும்; கடைக்காரகளுக்கு வருமானமும் பெருகும்.- வெ.பாலமுருகன், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !