இது உங்கள் இடம்!
அரசுப்பள்ளி ஆசிரியையின் முயற்சி!என் சகோதரியின் மகன், அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.அவனது வகுப்பாசிரியை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தன் வகுப்பு மாணவர்களுடைய பெற்றோரின் மொபைல் எண்களை சேர்த்து, 'வாட்ஸ்-ஆப்' குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.இக்குழுவில், பாடம் தொடர்பான தகவல்களுடன், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைகளையும் பதிவிடுகிறார்.உதாரணமாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மறுசுழற்சி செய்தல், தண்ணீர் சேமிப்பு மற்றும் மரம் நடுதல் போன்றவற்றை செய்ய துாண்டுகிறார்.இவற்றை பின்பற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு, சொந்த செலவில், பயனுள்ள அன்பளிப்புகள் வழங்கி ஊக்குவிக்கிறார், ஆசிரியை.மாணவர்களுக்கு சத்தான உணவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கங்களை புகட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். இதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு, சுற்றுச்சூழல் பழக்கங்களை கற்றுக் கொடுக்கின்றனர்.இந்த முயற்சி, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்த்து, நல்ல பலனளித்து வருகிறது. மற்ற ஆசிரியர்களும், இதுபோன்ற விழிப்புணர்வு முயற்சிகளை பின்பற்றலாமே!- ஆர்.செந்தில்குமார், மதுரை.இதுவல்லவோ நட்பு!எங்கள் தெருவில், ஓர் இளைஞனும், அவனது வயதான தாயாரும், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.அவன், சிறுவயதில் தந்தையை இழந்ததால், தாயின் அரவணைப்பிலும், வீட்டு வேலை செய்து கிடைத்த வருமானத்திலும் வளர்ந்தான்.பத்தாவது வரையே படித்தவன், ஆறேழு ஆண்டுகள், கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தான். அவன், சில மாதங்களுக்கு முன், ஒரு விபத்தில் காலை இழந்து, மிகுந்த வேதனைப்பட்டான்.அவனுடன் பணிபுரிந்த நண்பர்கள், அவனுக்கும், அவனது தாய்க்கும் ஆறுதல் கூறி, தைரியம் ஊட்டினர்.தங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட தொகையை பகிர்ந்து, நண்பன் பெயரில் வங்கி வைப்புத்தொகையாக செலுத்தி, அதன் வட்டியை வீட்டு வாடகைக்கு பயன்படுத்த சொல்லி உதவினர்.அதோடு, அவனுக்கு பெட்டிக்கடையும், அவனுடைய அம்மாவுக்கு தேநீர் கடை ஒன்றையும் வைத்து கொடுத்தனர். இப்போது, அவன் தன் ஊனத்தைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருப்பதோடு, நல்ல நிலையிலும் வாழ்கிறான்.'இதுவல்லவா நல்ல நட்பு...' என்று புகழும் அளவிற்கு, உண்மையான அன்பு மற்றும் மனிதநேய உணர்வோடு திகழும் அந்த இளைஞர்களை, அனைவரும் பாராட்டுகின்றனர்.- மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.தமிழ் மன்னர்களின் பெயரை வைக்கலாமே!சமீபத்தில், சொந்த கிராமத்திற்கு சென்ற நான், என் பால்ய நண்பனின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நலம் விசாரித்து, நாட்டு நடப்புகளை பேசிக் கொண்டிருந்தபோது, வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, உள்ளே வருமாறு அழைத்தார், நண்பர்.சிறுவர்களை ஒவ்வொருவராக எனக்கு அறிமுகம் செய்து, அவர்களின் பெயரைச் சொல்ல சொன்னார். அவர்கள் ஒவ்வொருவராக, சஜ்ஜன், பிரஜின், அக்ஷய் கன்னா எனக் கூறினர். கடைசியாக, அவருடைய பேரனை கூப்பிட்டு அறிமுகப்படுத்தினார்.'நான், அடடா எவ்வளவு பெரிய பையனா வளர்ந்துட்டானே! உன் பெயர் என்னப்பா?' என்றேன்.'என் பெயர், அருள்மொழிவர்மன்...' என்றான், கம்பீரமாக. அவன் சென்னையில் மிகவும் பிரபலமான கான்வென்ட்டில், மூன்றாம் வகுப்பு படிப்பதாகவும் சொன்னான்.'உன், 'பிரண்ட்ஸ்' எல்லாம் வாயில் நுழையாத வடமொழி கலப்பிலான பெயரை வெச்சிருக்காங்க. உனக்கு இந்த பெயரை வைத்தது யாரு? இது யாருடைய பெயர் தெரியுமா?' என்றேன்.'இது எங்க தாத்தா வெச்சது தான். உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னர், ராஜ ராஜ சோழனின் பெயர் தான் இது. எங்க ஸ்கூல்லேயும் இந்த பேரைக் கேட்டு எல்லாரும் முதலில் கேலி செஞ்சாங்க. எங்கள் பள்ளி ஆசிரியர்கள், வரலாற்றைச் சொல்லி புரிய வைத்த பின், என்னை எல்லாரும் மரியாதையாக பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க...' என்றான்.'வாயில் நுழையாத வடமொழி பெயரை வைக்கிற இக்காலத்தில், தமிழ் மன்னரின் பெயரை கம்பீரமாக வைத்த உங்க தாத்தாவுக்கு நன்றி சொல்லணும்...' எனச் சொல்லி, அவரையும், பேரனையும் பாராட்டி மகிழ்ந்தேன்.- ஆ.மாணிக்கம், பொள்ளாச்சி