வாசகர்கள் கருத்துகள் ( 1 )
D.Ambujavalli
டிச 15, 2025 14:42
பேருந்து நடத்துனர்கள் பலரும் சில்லறை கொடுக்க - நோட்டுகளை- எச்சில் தொட்டு எண்ணித் தருவது சங்கடமாக இருக்கிறது. அவர்களும் இம்மாதிரி sponge உபயோகிக்கலாமே
பொறுப்பற்ற பேச்சால் நேர்ந்த அவமானம்!என் நண்பனுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லை. இதனால், நண்பனின் அம்மா, மகனையும், மருமகளையும் அழைத்துக்கொண்டு, சாமியார் ஒருவரிடம் குறி கேட்க சென்றிருக்கிறார்.நண்பனின் மனைவியை பார்த்து, 'நீ ஏற்கனவே ஒரு தடவை கருக்கலைப்பு செய்திருக்கிறாய். அந்த பாவத்தால் தான் நீ மீண்டும் தாய்மை அடையவில்லை...' என்று கூறியிருக்கிறார் அந்த, சாமியார்.அதை கேட்ட நண்பனின் மனைவி, 'நான் அப்படி எதுவும் செய்யவில்லை...' என்று கூறி, கதறி அழுதிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.அதன்பின், நண்பனின் வீட்டில் நிம்மதி பறிபோய் விட்டது. நண்பனின் அம்மாவும், அவனுடைய உறவினர்களும், 'நீ ஏற்கனவே ஒருவனை காதலித்து, யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்திருக்கிறாய்...' என்று கூறி, அவமானப்படுத்தியிருக்கின்றனர்.நண்பனும், தன் மனைவியை புரிந்து கொள்ளாமல் குடும்பத்தினருடன் சேர்ந்து கடுமையாக பேச, அந்த பெண் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டாள்.சில நாட்களுக்கு பின், மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டான், நண்பன்.பின்பு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தலையிட்டு, அவளுக்கு ஏற்கனவே வேறு காதலோ, கருக்கலைப்போ ஏற்பட்டதில்லை என்ற உண்மையை படாதபாடு பட்டு அவர்களிடம் நிரூபித்தனர்.அதன்பின், என் நண்பனும், அவன் மனைவியும் சேர்ந்து வாழ்கின்றனர்.சாமியாரின் பொறுப்பற்ற பேச்சால், அந்த பெண் பெரும் அவமானங்களை சந்திக்க வேண்டியதாகி விட்டது.சாமியாரிடம் செல்லும் முன், அவரை பற்றி தீர விசாரித்து செல்வது அவசியம்.- க.பூமலை, நமச்சிவாயபுரம், சென்னை.பொறுப்பான வங்கி ஊழியர்கள்!சமீபத்தில், எங்கள் பகுதியிலுள்ள வங்கிக்கு சென்றிருந்தேன்.அங்கு, காசாளர் கேபின் அருகில், 'எச்சில் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணாதீர்கள்; பணத்தை எண்ணுவதற்கு, நீரில் நனைத்த பஞ்சை பயன்படுத்துங்கள்!' என்று, அறிவிப்பு நோட்டீஸ் வைக்கப்பட்டிருந்தது.கவுன்ட்டரில் இருந்த காசாளரிடம், அதுபற்றி கேட்டேன்.அவர், 'பலர் இன்னும் எச்சில் தொட்டுத்தான் பணத்தை எண்ணுகின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கைகளில் இருந்து எங்களுக்கும், எங்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கும், நோய்த்தொற்று பரவுகிறது. அதனால் தான், வங்கி மேலாளர், இந்த அறிவிப்பை இங்கு வைத்து உள்ளார்...'அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் இதைக் கடைபிடிப்பதையும் கண்காணிக்கிறோம். யாராவது எச்சில் தொட்டு பணத்தை எண்ணினால், உடனே எச்சரித்து, வங்கி ஏற்பாடு செய்துள்ள ஈரப்பஞ்சை பயன்படுத்த அறிவுறுத்துகிறோம். இது, வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது...' என்றார்.அதைக்கேட்டு மகிழ்ந்த நான், அந்த வங்கி ஊழியர்களின் பொறுப்புணர்வை மனதாரப் பாராட்டினேன்.- ஆர்.செந்தில்குமார், மதுரை.தள்ளுவண்டி இனிப்பகம்!அளவுக்கதிகமான பணிச்சுமை காரணமாக, தனியார் துறையில் பணியாற்றிய நண்பரின் மகன், விருப்ப ஓய்வில் வெளிவந்து விட்டார்.பணியின் போதே பகுதி நேரமாக, ஸ்வீட் மாஸ்டர்களுடன் திருமண விசேஷங்களுக்கு உதவியாளராக சென்று வந்த அனுபவத்தில், இனிப்பு, கார வகைகள் செய்யக் கற்று இருந்தார். அந்த நம்பிக்கையில் இனிப்பகம் ஒன்றை தொடங்கினார்.ஊரில் ஏற்கனவே நவீன அலங்காரத்துடன் இரு கடைகள் சிறப்பாக இயங்கி வந்ததால், அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் நஷ்டமாகி கடையை காலி செய்தார்.நவீன வடிவமைப்போடு, சுற்றிலும் கண்ணாடி பொருத்தப்பட்டு சுகாதாரமான தள்ளுவண்டி ஒன்றை உருவாக்கி, அதில் பார்வையில் படும்படி கார, இனிப்பு வகைகளை அடுக்கி, விற்பனையை தொடங்கினார். அதிலும், நஷ்டம்.நம்பிக்கையை இழக்காமல், சிறிய அளவிலான லட்டு, பாதுஷா, ஜாங்கிரி, கேரட் அல்வா மற்றும் பூசணி அல்வா அதனுடன் ஒரு கார வகை என, சுவையாக சிறிய அளவில் தயாரித்து, இவைகளில் ஏதேனும், ஒரு ஸ்வீட் மற்றும் 25 கிராம் காரம், 20 ரூபாய்க்கும், இரண்டு பிஸ்கெட்டுகளுடன் டீ அல்லது சுக்கு காபி, 10 ரூபாய் என, மொத்தமாக சேர்த்து வழங்க, வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.இப்போது, வண்டியின் கீழ் பகுதியில், நாலைந்து நாற்காலி மற்றும் தண்ணீர் கேன் கொண்டு சென்று, கூட்டம் கூடும் இடங்களில் வண்டியை நிறுத்தி, வியாபாரம் செய்ய நல்ல வருமானம். அதோடு, சிறுதானிய பாயசம், சுண்டல், கார, இனிப்பு கொழுக்கட்டைகள் மற்றும் புட்டு என, மற்ற உணவு வகைகளையும் சேர்த்துள்ளார்.நஷ்டம் நம்மை நலிவடைய செய்ய அல்ல; நவீனத்தை நோக்கி நகர்த்த எனும் உண்மையை உணர்ந்து, குடும்ப உறுப்பினர் நீங்கலாக, மேலும் சிலருக்கு வேலை வாய்ப்பும் வழங்கியுள்ளார்.- தி.பூபாலன், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை.
பேருந்து நடத்துனர்கள் பலரும் சில்லறை கொடுக்க - நோட்டுகளை- எச்சில் தொட்டு எண்ணித் தருவது சங்கடமாக இருக்கிறது. அவர்களும் இம்மாதிரி sponge உபயோகிக்கலாமே