உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மறக்காத மனிதநேயம்!என் நண்பனின் சகோதரிக்கு, மூன்று மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே, சாலை விபத்து ஒன்றில் இறந்து விட்டார், அவளது கணவர். இச்சம்பவம் நடந்து, இரண்டு மாதம் ஆன நிலையில், சகோதரியின் அப்பா, அம்மாவை பார்க்க அவளது வீட்டிற்கு வந்திருந்தனர், அவள் கணவனின் பெற்றோர்.திருமணத்தின் ேபாது, கொடுத்த சீதனப் பொருட்களை பத்திரமாக அவளது பெற்றோர்களிடம் ஒப்படைத்து, 'ஒரே மகனை இழந்த நாங்களே காலப்போக்கில் அவனை மறக்கத்தான் போகிறோம். எங்கள் மகனால், உங்கள் மகள் வாழ்வு வீணாக வேண்டாம். எங்கள் மகனின் ஆத்மாவும் அதனை விரும்பாது. நல்ல வரனாகப் பார்த்து திருமணம் செய்து வையுங்கள்...' என்று சகோதரியின் பெற்றோரிடம் கூறி சென்றனர், அவளது மாமனாரும், மாமியாரும்.தங்கள் மகனின் இறப்புக்கு மருமகளின் தோஷம் தான் காரணம் என, அவளையும், அவள் வீட்டாரையும் திட்டித் தீர்ப்பவர்கள் மத்தியில், இப்படியும் சில நல்லவர்கள் இருப்பது ஆறுதலாய் இருப்பதோடு, மனிதநேயம் இன்னும் அழியவில்லை என்பதையும் இது காட்டுகிறது.- க.பூமலை, நமச்சிவாயபுரம், கள்ளக்குறிச்சி.ஆர்வமும், முயற்சியும் இருந்தால்...நண்பரின் மகன், சமையல் கலைஞர். சுற்றுவட்டாரப் பகுதியில் நடக்கும் பல்வேறு விசேஷங்களுக்கும், அவரது சமையல் தான் பிரதானமாக இருக்கும்.சில மாதங்களுக்கு முன், அவருக்கு திருமணம் நடந்தது. அவருடைய மனைவி, கணவரின் தொழிலுக்கு உதவியாக, அவர் சமையல் செய்ய செல்லுமிடங்களுக்கு, போய் அவரிடம் கூச்சப்படாமல், விசேஷங்களுக்கு வரும் 100 முதல் ௫௦௦ பேர்களுக்கு எப்படி ருசியாக சமைப்பது என்பதை கற்று கொண்டாள்.ஒருநாள், நண்பரிடம், 'ஆர்டர்' தர வந்திருந்தனர், ஒரு திருமண வீட்டார். ஏற்கனவே அந்த நாளுக்கு, இரண்டு விசேஷங்களுக்கு, ஆர்டரை பெற்றதால், வந்த திருமண ஆர்டரை பெற முடியாத சூழல்.அப்போது, அந்த ஆர்டரை எடுத்துக் கொள்வதாக துணிச்சலோடு முன் வந்தாள், அவரது மனைவி. அதேபோல், அந்த திருமணத்தில், கணவரைப் போலவே ருசியாக சமையல் செய்து, பேர் வாங்கினாள்.இப்போது கணவருக்கு இணையாக அவளும் விசேஷங்களுக்கு, 'ஆர்டர்' பிடித்து, குடும்ப பொருளாதாரத்தின் உயர்வுக்கு உதவியாக இருக்கிறாள்.தன்னிடம் ஆர்வத்தோடு சமையல் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, தன்னம்பிக்கையோடும், சுய மரியாதையோடும், தொழில் செய்யும் மனைவியால், மகிழ்ச்சியோடு இருக்கிறார், நண்பரின் மகன்.ஆர்வம் மற்றும் முயற்சியோடு, கணவரின் ஆதரவும், வழிகாட்டுதலும் இருந்தால், பெண்களாலும் தொழிலில் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு, இதைவிட வேறென்ன உதாரணம் இருக்க முடியும்.- ஆர்.ஜெயசங்கரன், விழுப்புரம்.உணவை வீணாக்காதீர்!கிராமத்து ஹோட்டலில் சாப்பிட சென்றேன். சாப்பிடும் இடத்தில் கரும்பலகையில், 'சாப்பாட்டை கேட்டு வாங்கி வயிறாரா சாப்பிடுங்கள். உங்களுக்கு பிடிக்காத பொரியலை இலையில் வைக்கும் போதே வேண்டாம் என்று சொல்லி விடவும். பிடிக்காத பொரியலுக்கு பதில், பிடித்த வேறு பொரியலை வாங்கி சாப்பிடலாம்.'பசியோடு பல பேர் இருக்க, கிடைத்த சாப்பாட்டை வீணாக்குவது மகாபாவம். உணவு பொருட்களை, வீணாக்காமல் சாப்பிட்டு, மரியாதை கொடுப்போம்...' என, எழுதப்பட்டிருந்தது. இதை, 90 சதவீத மக்கள் பின்பற்றுவதை கண்கூடாக பார்த்து, மகிழ்ந்தேன்.- எம்.ருக்குமணி, கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !