உதவும் கரங்கள்!என் மகளை பார்க்க சென்னைக்கு சென்றிருந்தேன். அங்கு அவள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், ‘வாட்ச்மேன்’ அறைக்கு அருகே, அலமாரி ஒன்றில், ‘உதவும் கரங்கள்!’ என்று எழுதி அதில் சில பொருட்களை வைத்திருந்தனர். அதுபற்றி மகளிடம் விசாரித்தேன். அந்த, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரும், தங்கள் வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் உபயோகப்படுத்திய விளையாட்டு பொருட்கள், படித்த வார இதழ்கள், நல்ல நிலையில் உள்ள பயன்படாத துணிகள் மற்றும் சமையலறை பொருட்களை அந்த அலமாரியில் வைத்து விடுவராம். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு வேலைக்கு வரும் பெண்கள், ‘எலக்ட்ரிக்கல்’ மற்றும் ‘பிளம்பிங் ரிப்பேர்’ செய்ய வரும் தொழிலாளர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை அதிலிருந்து எடுத்து செல்லவும் அனுமதி அளித்துள்ளனர். நானும், என் கணவர் பணி ஓய்வுபெற்றபோது, அவருக்கு வந்திருந்த சால்வை துண்டுகளை அங்கு வைக்க சொன்னேன். சென்னையிலிருந்து வந்ததும் எனக்கு தெரிந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடமும் இதுபோல், செய்ய சொல்லியிருக்கிறேன். நமக்கு தேவையில்லாதவற்றை வீட்டில் அடைத்து வைத்திருப்பதை விட, மற்றவர்களுக்கு பயன்பட உதவலாமே! – ஆர்.தேன்மொழி, சிதம்பரம்.
இளைஞர்களே, தேவை தன்னம்பிக்கை!நண்பரின் மகன், டிகிரி படித்து முடித்து,வேலை எதுவும் கிடைக்காமல், வீட்டில் சும்மா இருப்பதாகவும், எந்த வேலை என்றாலும் கவுரவம் பார்க்காமல் செய்யத் தயாராக இருப்பதாகவும், என்னிடம் கூறினான். ‘நான் குடியிருக்கும் வீட்டைச் சுற்றி, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. அங்கு, வேலை செய்யும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், டீ கடை அருகில் இல்லாததால், சிறிது துாரம் சென்று, டீ குடிப்பதை பார்த்திருக்கிறேன். நீ, வீட்டில் டீ போட்டுக் கொண்டு வந்து, அவர்கள் வேலை செய்யும் இடத்திலேயே விற்றால், நல்ல வியாபாரம் ஆகும்...’ என்றேன். அடுத்த நாளே, வீட்டிலேயே டீ தயாரித்து, கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் அருகே, இருசக்கர வாகனத்தில் டீ வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். அங்கு, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அவனிடம், டீ வாங்கி குடிக்க ஆரம்பித்தனர். சமீபத்தில், என் வீட்டுக்கு வந்தவன், ‘நீங்கள் சொன்னது மாதிரியே செய்தேன். காலை மற்றும் மாலை இரண்டு வேளையும், ‘120 கப்’ டீ வியாபாரம் ஆகிறது. அதுமட்டுமல்லாமல், அம்மா செய்து தரும் வடை, முறுக்கு மற்றும் ‘சிப்ஸ்’ போன்ற ‘ஸ்நாக்ஸ்’ வகைகளையும் விற்பனை செய்வதால், கணிசமான அளவு லாபமும் கிடைக்கிறது. ‘மேலும் இங்கு ஏற்கனவே, வசிப்பவர்கள் கூட, சுற்றி கடைகள் எதுவும் இல்லாததால், ‘ஸ்நாக்ஸ்’ வகைகளை, தினமும் என்னிடம் விரும்பி வாங்குகின்றனர். எனவே, இங்கேயே ஒரு இடம் வாடகைக்கு எடுத்து காலை, இட்லி, வடை மற்றும் மதியம், ‘வெரைட்டி ரைஸ்’ வகைகளையும் விற்கலாம், என்று உள்ளேன்...’ என்று மகிழ்ச்சியுடன் கூறினான். ‘நிறைய படித்த இளைஞர்கள் இது போன்ற வேலைகளை செய்வது தன்மானக் குறைவு என்று நினைக்கும் போது, உன் முயற்சியையும், அதனால் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்...’ என்று, அவனைப் பாராட்டினேன். படித்து வேலைவாய்ப்பின்றி சுற்றும் இளைஞர்களே... உங்களைச் சுற்றி இதுபோன்ற வேலைவாய்ப்புகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. சரியானவற்றை தேர்ந்தெடுத்து, பயனடைவது உங்கள் கையில் தான் உள்ளது. – பூவை சுபவாணன், கோவை.