கவிதைச்சோலை: சகஜமாகி விட்டது!
இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது... கொள்கைகளை மாற்றிக் கொள்வதும் வாக்குறுதிகளை மறந்து விடுவதும் நம்பிக்கைகளை உடைத்து எறிவதும் நம்பியவர்களை கைவிட்டு விடுவதும்! இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது... நண்பர்களை மாற்றி விடுவதும் காரியம் முடிந்த பின் கழன்று கொள்வதும் உதவியவர்களையே ஒதுக்கி வாழ்வதும் உறவுகளையே உதறி விடுவதும்! இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது... ஒரு சொல்லுக்காக உயிரையே போக்குவதும் மன்னிப்பின் மாண்பை மறந்து போவதும் மறுபக்க நியாயங்களை மறுத்து விடுவதும் மற்றவர்களின் கருத்துக்களை மிதித்து விடுவதும்! இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது... தனக்குத்தானே ஆறுதலை தேடிக் கொண்டும் தனக்குத்தானே தேறுதலை ஏற்றுக் கொண்டும் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் அடக்கி கொண்டும் வாழ்வதென்பது எல்லாருக்கும் இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது! — வி.பி.மகராசி, சென்னை. தொடர்புக்கு: 94864-80814